வெள்ளி, 13 செப்டம்பர், 2013

சருக்கரை நோயாளிகளைக் குளிர்விக்க மண் குளியல்

சருக்கரை நோயாளிகளை க் குளிர்விக்க மண் குளியல்சர்க்கரை நோயாளிகளின் கணையத்தைக் குளிர்விக்கும் இயற்கை மண் குளியல் சென்னை பிராட்வேயில் உள்ள குறளகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
காதி வாரியத்தின் கீழ் செயல்படும் கதர் விற்பனை நிலையத்தோடு இணைந்து இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கை மருத்துவ மையம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தில் நீராவிக் குளியல், முதுகுத் தண்டுவட குளியல், மண் குளியல் மற்றும் எண்ணெய் மசாஜ் போன்ற சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
முதலில் மையத்திற்கு வரும் மக்களுக்கு ஆலோசனை, உணவு முறைகள் குறித்த அறிவுரைகள் மற்றும் யோகா பயிற்றுவிக்கப்படும். அதன் பின்பு அவர்களுக்கு எந்தவிதமான சிகிச்சை தேவை என்று கண்டறியப்படும்.
நீராவிக் குளியல்
உடல் பருமன், உடல் வலி உள்ளவர்களுக்கு உகந்தது நீராவிக் குளியல். 15 நிமிஷங்கள் வழங்கப்படும் இந்த குளியலின் மூலம் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி ரத்தம் சுத்தமாகும். மேலும் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கவும் உதவும்.
முதுகுத் தண்டுவட குளியல்
முதுகுத் தண்டு வடத்தில் ஏற்படும் வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு ஏற்றது இந்த முதுகுத் தண்டு வட குளியல். இதற்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள கருவியின் மூலம் முதுகுதண்டு வடத்தில் வெந்நீர் மற்றும் குளிர்ந்த நீர் பீய்ச்சியடிக்கப்படும்.
இதன் மூலம் தண்டு வடத்தில் உள்ள நரம்புகள் தூண்டப்பட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
களிமண் குளியல்
வலி உள்ள இடங்களில் மட்டும் பற்று போடப்படுவதால் இது மண் பட்டி என்று அழைக்கப்படுகிறது.
உடலில் எந்தெந்த இடங்களில் வலி உள்ளதோ அந்த இடங்களில் இந்த பட்டி போடப்படும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் இந்த சிகிச்சையை மேற்கொண்டால் அவர்களுக்கு அடிவயிற்றுப் பகுதியில் மண் பட்டி போடப்படும். இதனால் அவர்களின் கணையம் குளிர்ச்சியடைந்து, இன்சுலின் சுரக்க வழி செய்யும்.
எண்ணெய் மசாஜ்
இதில் முழு உடல் எண்ணெய் மசாஜ் 45 நிமிஷங்களும், பகுதி உடலுக்கான எண்ணெய் மசாஜ் சுமார் 20 நிமிஷங்களும் மேற்கொள்ளப்படும்.
இதன் மூலம் உடலில் ஏற்பட்டுள்ள தளர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
இந்த மையத்தில் ஒரு இயற்கை மருத்துவர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் உள்ளனர். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி உதவியாளர்கள் உள்ளனர்.
இது குறித்து மையத்தின் பொறுப்பாளர் இயற்கை மருத்துவர் எஸ்றா கூறியது:
இங்கு வழங்கப்படும் சிகிச்சைகளால் பக்க விளைவுகள் ஏதும் கிடையாது.
ஆலோசனை, உணவு குறித்த அறிவுரை மற்றும் யோகா ஆகியவற்றுக்கு ரூ.150, நீராவிக் குளியலுக்கு ரூ. 300, முதுகுத் தண்டுவட குளியலுக்கு ரூ.300, களிமண் குளியலுக்கு ரூ.300, பகுதி உடல் எண்ணெய் மசாஜ் ரூ. 450, முழு உடல் எண்ணெய் மசாஜ் ரூ.950 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களிடம் இந்த சிகிச்சைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை தினங்கள் தவிர அனைத்து தினங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த மையம் செயல்படும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக