திங்கள், 9 செப்டம்பர், 2013

இலங்கை மீது இனப்படுகொலை விசாரணை;ஐ.நா.வில் பசுமைத் தாயகம்

இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை;ஐ.நா.வில் பசுமைத் தாயகம் கோரிக்கை: இராமதாசு

இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களை சிங்கள பேரினவாத அரசு திட்டமிட்டு படுகொலை செய்தது. மிகப்பெரிய இந்த இனப்படுகொலைக்கு காரணமான இலங்கை அதிபர் மகிந்த இராஜபக்சேவும், அவனது கூட்டாளிகளும்  இன்றுவரை தண்டிக்கப்படவில்லை.
இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை தண்டிக்கவும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு  நீதி பெற்றுத் தரவும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மூலமாக என்னால் ஏற்படுத்தப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் அவையால்  சிறப்பு ஆலோசனை அமைப்பாக அங்கீகரிக்கப்பட்ட பசுமைத்தாயகத்திற்கு ஐ.நா. அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்று  கருத்து தெரிவிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி கடந்த 2009-ஆம் ஆண்டில் தொடங்கி இன்று வரை ஐ.நா.மனித உரிமை ஆணையக் கூட்டங்களில் பங்கேற்று ஈழத் தமிழர்களுக்காக பசுமைத்தாயகம் குரல் கொடுத்து வருகிறது. இலங்கைக்கு எதிராக மனித உரிமை மீறல் விசாரணை நடத்தப்படுவதற்கு பசுமைத் தாயகம் அமைப்பும் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.
இந்த நிலையில், இலங்கை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 24-ஆவது கூட்டம்  ஜெனிவாவில் நாளை (09.09.2013) தொடங்குகிறது. இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து கடந்த மாதம் இலங்கைக்கு சென்று விசாரணை நடத்திய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை, அது குறித்த அறிக்கையை இந்தக் கூட்டத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இம்மாதம் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் சிங்களர்களாலும்,  இராணுவத்தினராலும் திட்டமிட்டு பறிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி பசுமைத்தாயகம் அமைப்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாநிலங்களில் தமிழர்களின் பெரும்பான்மையை குறைக்க வேண்டும் என்பதற்காக சிங்களர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால், கிழக்கு மாநிலங்களில் சிங்களர்களின் எண்ணிக்கை 1901-ஆம் ஆண்டில் இருந்ததைவிட இப்போது 41 மடங்கு அதிகரித்துள்ளது. இதன்விளைவாக கிழக்கு மாநிலத்தில் தமிழர்களின் எண்ணிக்கை 55.8 விழுக்காட்டிலிருந்து 39.7 விழுக்காடாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் சிங்களர்களின் எண்ணிக்கை5.1 விழுக்காட்டிலிருந்து 23.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
2009-ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பிறகு சிங்கள மயமாக்கல் அதிகரித்து வருகிறது. இலங்கையின் ஒட்டுமொத்த நிலப்பரப்பான 65,619 சதுர கிலோமீட்டரில், 18,880 சதுர கிலோமீட்டர் பரப்பு தமிழர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 7 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை தமிழர்களிடமிருந்து சிங்கள ராணுவம் பறித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பல்லாயிரம் தமிழர்கள் வாழ இடமின்றி தவிக்கின்றனர்; வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதால் உணவுக்கு கூட வழியின்றி ஈழத் தமிழர்கள் வாடுகின்றனர். இதுபற்றியெல்லாம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் விளக்கியுள்ள பசுமைத்தாயகம் அமைப்பு, இதுபற்றி விசாரணை நடத்த சிறப்பு ஆணையர் ஒருவரை அமர்த்தும்படியும் கேட்டுக் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில்  பசுமைத் தாயகம் அமைப்பின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். அங்கு நடைபெறும் விவாதங்களின்போது  இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படும் வரையிலும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும் பசுமைத் தாயகம் தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக