வெள்ளி, 13 செப்டம்பர், 2013

கீழ்க்கடற்கரைச்சாலை: சுழல் காற்று காணொளி

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_802254.jpgகீழ்க்கடற்கரை ச்சாலை: சுழல் காற்று தாக்கியதா:  காணொளியால் பரபரப்பு
 
சென்னை: சென்னை, ஈ.சி.ஆர்., சாலையை சுழல் காற்று தாக்கியதா என்ற விவாதம் அதிகரித்து வருகிறது. இது குறித்து, வானிலை ஆராய்ச்சி மையம், தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னை, ஈ.சி.ஆர்., சாலையில், இம்மாதம், 5ம் தேதி சுழல் காற்று வீசியதாக, உத்தண்டியில் வசிக்கும் இராபர்ட் காகரின், 58, என்பவர் "வீடியோ' எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை தொடர்ந்தே, சுழல் காற்று வீசியது வெளியுலகுக்கு தெரியவந்துள்ளது.

இது குறித்து, ராபர்ட் காகரின் கூறியதாவது: கடற்கரையில் இருந்து, 700 மீட்டர் தூரத்தில் வசிக்கிறேன். இம்மாதம், 5ம் தேதி, மாலை, 4:30 மணிக்கு, என் நண்பருடன், மீன் பிடிக்க கடற்கரைக்கு செல்ல இருந்தேன். அப்போது, கருமேகங்களுடன், வானிலை மாறத் துவங்கியது. திடீரென்று, கூம்பு வடிவில் மேகம் உருவாகி, காற்று வீசத் துவங்கியது. இதை, என் வீட்டு மாடியிலிருந்து படம் பிடித்தேன். சில நிமிடங்கள் நீடித்த இந்த வானிலையைத் தொடர்ந்து, மழை பெய்தது. இந்த காற்று, சுழல் காற்று வகையைப் போன்றது. 50 முதல் 60 கி.மீ., வேகத்தில், காற்று வீசியிருக்கும் என, உணர்ந்தேன். இந்திய கடல் பகுதிகளில், இது போன்ற சுழல் காற்று உருவாவதில்லை. அமெரிக்க நாட்டில் தான், இது போல ஏற்படும். ஈ.சி.ஆர்., சாலையில், உருவான சுழல் காற்று, புதிய வானிலை மாற்றமாக உள்ளது. இவ்வாறு, ராபர்ட் காகரின் கூறினார். இத்தகவல் குறித்து, சென்னை வானிலை மையம் கண்காணித்து வருகிறது. இந்தியாவில், மேற்கு வங்கம், ஒடிசா கடல் பகுதிகளில், இது போன்ற சுழல் காற்று ஏற்படுவது வழக்கம். தமிழக பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன், இவ்வாறு ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

ஈ.சி.ஆர்., சாலையில் ஏற்பட்ட சுழல் காற்று குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேராசிரியர், ஒய்.இ.ஏ.ராஜ் கூறியதாவது: வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சியால், சில நாட்களாக சென்னை மற்றும் புறநகரில் மழை பெய்கிறது. வானத்தில் திரண்ட மேகக் கூட்டத்தின் மீது காற்று வேகமாக மோதினால், சுழல் காற்றாக நிலத்தை நோக்கி செல்லும். அதுபோல், கடந்த, 5ம் தேதி உத்தண்டியில் மாலை, 4:30 மணிக்கு மெலிதான சுழல் காற்று வீசியுள்ளது. புனல் வடிவில் காணப்படும் சுழல் காற்று, நிலத்தை அடைந்திருந்தால் சேதத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், அது நிலத்தை நோக்கி வரவில்லை. ஆனால், ஈ.சி.ஆர்., சாலையில், அந்த நேரத்தில் காரில் பயணம் செய்த, எங்களது அலுவலர்கள், சூறாவளியை உணர்ந்துள்ளனர். கார் குலுங்கி, சாலையின் இடது பக்கம் இழுத்துச் செல்வது போல இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர், என்றார். இந்த வகையான காற்றை, சுழல் காற்று, சூறாவளி, பெரும் புயல் என, வகைப்படுத்துகின்றனர். பூமியை நோக்கி வரும் போது, புனல் வடிவில் காட்சியளிக்கும். கடும் வேகத்துடன், பூமியைத் தாக்கும் போது, தரையை சுத்தப்படுத்த பயன்படுத்தும் "வேக்கம் கிளீனர்' போல, அனைத்தையும் வாரி சுருட்டிக் கொண்டு சென்று விடும். "டிவிஸ்டர்' என்ற ஆங்கில சினிமா, 1996ல் வெளியானது. "டிவிஸ்டர்' என்றால், சூறாவளி என்று பொருள். இந்த சினிமாவில், அமெரிக்க நாட்டை சுழல் காற்று எப்படி தாக்கியது; அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பதை, ஒரு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. உலக நாடுகளில், இந்த சினிமா, மாபெரும் வெற்றி பெற்றது.


நடந்து செல்லும் சுழல் காற்று:

பூமியிலிருந்து வானத்தை நோக்கி, புனல் வடிவில் உயர்ந்து நிற்கும் சுழல் காற்று, குறுகிய நிலப்பரப்பில் நகர்ந்து கொண்டே செல்லும். இதை பார்க்கும் போது, சுழல் காற்று நடந்து செல்வது போல் இருக்கும். பல கி.மீ., வேகத்தில் நகர்ந்து செல்லும் சுழல் காற்றால், அப்பகுதியில் உள்ள, பொருட்கள் அடித்துச் செல்லப்படும். கடந்து செல்லும் சுழல் காற்றை, சில மீட்டர் தூரத்தில் நின்று கொண்டு பார்க்கலாம். இந்தியாவின் தென் பகுதியில், இது போன்ற சுழல் காற்று ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. அமெரிக்க நாட்டின் மேற்கு பகுதியில், மார்ச் முதல், ஜூன் மாதங்களில், சுழல் காற்று வீசும். உயிர் சேதங்களை விட, பொருட்சேதங்கள் தான், இதனால் அதிகம் ஏற்படும். வானிலை மாற்றங்களே, சுழல் காற்று வீசுவதற்கு காரணம் என, மூத்த பத்திரிகையாளரும், "அறிவியல்புரம்' இணையதள ஆசிரியருமான என்.வி.ராமதுரை கூறுகிறார்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக