வாழ்த்துகள்! இந்த ஒன்பதாவதுபதிப்பைப் பிழையின்றியும் நல்ல தமிழிலும் வெளியிட்டுப் பெருமை கொள்ளுங்களேன்!அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
By
dn
First Published : 09 September 2013 03:59 AM IST
தினமணி'யின் சரித்திரத்தில் இன்னொரு மைல் கல்.
வருகிற செப்டம்பர் 11-ஆம் தேதி அன்று 79 ஆண்டுகள் கடந்து, 80-வது ஆண்டில்
அடியெடுத்து வைக்க இருக்கும் வேளையில், விழுப்புரத்தில் தனது 9-வது
பதிப்பைத் தொடங்கி இன்று சாதனை படைக்கிறது "தினமணி' நாளிதழ்.
1934-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 11-ஆம் நாள், மகாகவி பாரதியாரின்
13-வது நினைவு நாளன்று "தினமணி' தொடங்கப்பட்டதும் ஒரு விநாயக சதுர்த்தி
நன்னாளில்தான். இப்போது அகவை எண்பதில் அடியெடுத்து வைக்க இருக்கும்
தருணத்தில், அதேபோல விநாயக சதுர்த்தி நன்னாளில், செப்டம்பர் ஒன்பதாம் தேதி
தனது ஒன்பதாவது பதிப்பை விழுப்புரத்திலிருந்து தொடங்குகிறது.
அன்றைய ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்டமாக இருந்த விழுப்புரம், கடலூர்
மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பல ஆன்மிக தவப்புதல்வர்களைத் தரணிக்குத்
தந்து பெருமைப்படுத்திய தவ பூமி. சமரச சன்மார்க்க சிந்தனையை முன்வைத்த
இராமலிங்க வள்ளலாரும், நடமாடும் தெய்வமாக வாழ்ந்த காஞ்சி மாமுனிவரும்,
மகான் அரவிந்தரும், சித்த புருஷராகவே வாழ்ந்து மறைந்த மகாகவி பாரதியும்
இந்த மண்ணுடன் தொடர்புடையவர்கள் எனும்போது, அது புண்ணிய பூமி அல்லாமல்
என்ன?
"தினமணி' நாளிதழின் நிறுவன ஆசிரியரான டி.என். சொக்கலிங்கமும், நீண்ட
நாள் ஆசிரியராக இருந்த பெரியவர் ஏ.என். சிவராமனும் இட்டுத் தந்திருக்கும்
அடித்தளத்தில் தொடர்ந்து நடைபோடும் உங்கள் "தினமணி' தனது ஒன்பதாவது
பதிப்புடன் வீறு நடை போடத் தயாராகிறது.
இப்போதும், ஒவ்வொரு நாளும் "இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என்கிற
எண்ணத்துடன், ஓர் ஆவணப் பதிவைத் தமிழ்கூறு நல்லுகத்தின் முன் வைக்கிறோம்
என்கிற உணர்வுடன், "தினமணி' நாளிதழ் தினந்தோறும் உருவாக்கப்படுவதில்
வியப்படைய ஒன்றுமில்லை. 1934-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள், "அறிமுகம்'
என்கிற முதல் தலையங்கத்தில் நிறுவன ஆசிரியர் டி.என். சொக்கலிங்கம்
எதையெல்லாம் "தினமணி' நாளிதழின் குறிக்கோளாகக் குறிப்பிட்டிருந்தாரோ, அந்த
லட்சிய வேட்கையும் அர்ப்பணிப்பு உணர்வும் இன்றுவரை தொடர்கிறது, அவ்வளவே!
""எல்லா வியாதிகளிலும் மனோவியாதியே மிகக் கொடியது. நமது மக்கள் மனத்தில்
அடிமைத்தனம் குடிகொண்டிருக்கிறது. நமது பெரியாரிடத்தும், சிறியாரிடத்தும்
அடிமைப் புத்தி அகன்றபாடில்லை. அதை அடியோடு அழித்து, தமிழ் மக்களை
மானிகளாகச் செய்வதற்கு "தினமணி' ஓயாது பாடுபடும்'' என்றும்,
""சுதந்திர சூரியனைக் காண விரும்பிய தெய்வீகப் பித்தரான சுப்பிரமணிய
பாரதியாரின் வருஷாந்திர தினத்தன்று அவருடைய சுதந்திர தாகத்தையும்,
சமத்துவக் கொள்கைகளையும் தமிழ்நாட்டில் பரப்பும் நோக்கத்துடன்
பிறந்திருக்கும் "தினமணி'யைத் தமிழ் மக்கள் மனமுவந்து வரவேற்பார்கள் என்பது
நமது பூரண நம்பிக்கை'' என்றும்
எங்கள் நிறுவன ஆசிரியர் தனது முதல் நாள் தலையங்கத்தில்
குறிப்பிட்டிருக்கும் அதே காரணங்களை முன்னிறுத்தி, இப்போதும் "தினமணி'யின்
பயணம் தொடர்கிறது. அந்தப் பயணத்தில் "தினமணி'யின் விழுப்புரம் பதிப்பு
மற்றுமொரு சாதனை.
தமிழுணர்வு, தேசியக் கண்ணோட்டம், சமத்துவச் சிந்தனை, ஆன்மிக எழுச்சி
என்று தமிழ்ச் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகத் தன்னை அர்ப்பணித்துக்
கொண்டிருக்கும் "தினமணி', விழுப்புரம், கடலூர், புதுச்சேரி வாழ் மக்களின்
பிரச்னைகளை உடனுக்குடன் பிரதிபலிக்கவும், அவர்களது நல்வாழ்வுக்கு
உறுதுணையாக நிற்கவும் இன்று முதல் இந்தப் பதிப்பை வெளிக்கொணர்கிறது.
பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும், இந்தியாவின் மக்களாட்சித்
தத்துவத்தை நிலைநிறுத்துவதிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்
கொண்டிருக்கும் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில்
எங்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வாசகர்களுக்கும்,
முகவர்களுக்கும் இதயபூர்வமான நன்றி.
தமிழால் இணைவோம்! தமிழுக்காக இணைவோம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக