செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இந்திய மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் : கருணாநிதி

இந்திய அளவில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்: கருணாநிதி

மூட நம்பிக்கையை ஒழி்க்க மத்திய, மாநில அரசுகள் உரிய சட்டம் கொண்டு வர வேண்டும் என திமுக கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மகாராஷ்டிர மாநிலத்தில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடி வந்த சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.இச்சட்டத்தின்படி நரபலி, பில்லி, சூனியம், மாந்திரீகம் என்ற பெயரில் மோசடிகளில் ஈடுபடுவர்கள் கைதானால் ஜாமீனில் வெளிவர முடியாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும்.மூட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் பில்லி, சூனியம், மாந்திரீகம், ஜோதிடம், ஏவல் ஆகியவை அறிவியலுக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானது.மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் தமிழகத்திலும் பல செயல்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை கொளத்தூர் ரெட்டேரியில் திலகராஜ், என்பவர் தனது வணிக நிறுவனத்தின் பெயர்ப் பலகையை வாஸ்து முறைப்படி மாற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நரபலி கொடுக்கப்பட்ட செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற செய்திகள் நாம் 21-ஆம் நூற்றாண்டில் தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி உலகத்தையே ஒரு சிறு கிராமமாக சுருக்கிவிட்டது. உள்ளங்கையில் உலகம் என்ற நிலையை உருவாக்கியுள்ளது. ஆனாலும் செய்வினை, நரபலி, தாயத்து, தோஷம், குடுகுடுப்பைக்காரன் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரசாரத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதை நரேந்திர தபோல்கரின் படுகொலை நமக்கு உணர்த்தியுள்ளது. பகுத்தறிவு, அறிவியல் மனப்பான்மை குறித்த பிரசாரம் இன்னும் தீவிரமாகவும், இடைவெளி இல்லாமலும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மூட நம்பிக்கைகளை ஒழிக்க உரிய சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கொண்டு வரவேண்டும். பள்ளி, கல்லூரிகளில் அறிவியல் மனப்பான்மை பற்றிய பாடத்திட்டத்தை இணைக்க வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

1 கருத்து:

  1. தமிழ் நாட்டைப் பல்லாண்டு காலமாக ஆண்டுவந்த பெரியாரின் வழித்தோன்றல் கலைஞர், மூடநம்பிக்கை ஒழிப்பு குறித்து தமிழ் நாடு சட்டப்பூர்வமாக எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறியச் செய்திருந்தால் இந்த அறிக்கை வலுவுள்ளதாக அமைந்திருக்கும். எத்தனை நாள் நாம் அறிக்கைகளையும் தீர்மானங்களையும் நம்பிக்கொண்டிருப்பது?

    பதிலளிநீக்கு