நீதிமன்றங்களில் ஆட்சி மொழியாகத் தமிழைக் கொண்டுவர வேண்டும்'
நீதிமன்றங்களில் ஆட்சி மொழியாக தமிழை கொண்டுவர
தமிழறிஞர்கள் உதவ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி
கே.சந்துரு வலியுறுத்தியுள்ளார்.
பேரூர் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் பயிற்று மொழி, வழிபாட்டு மொழி மாநில
மாநாட்டில் "நீதித்துறையில் தமிழ்' என்ற தலைப்பில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்ற அமர்வில் அவர் பேசியது: சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது
முதல்கட்டமாக துணை மொழியாக தமிழை கொண்டு வர போராட்டங்கள் நடத்தப்பட்டு
வருகின்றன. அவ்வாறு தமிழை துணை மொழியாக கொண்டு வருவதற்கு ஆட்சேபணை இல்லை என
உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழு கடந்த 2006-ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது.
அதே நேரத்தில் தமிழில் சட்டப்புத்தகம், சுருக்கெழுத்தாளர்கள், மொழி
பெயர்ப்பாளர்கள், அச்சகம் ஆகிய உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என
அப்போதைய மாநில அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் வெளிமாநில
நீதிபதிகள் நியமனம் செய்யப்படும் போது நடைமுறை சிக்கல் ஏற்படும் என கருத்து
தெரிவிக்கப்பட்டதால் அது கிடப்பில் போடப்பட்டது.
இதைக் கண்டித்துதான் தற்போது வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்தி
வருகின்றனர். எனவே நீதிமன்றத்தில் ஆட்சி மொழியாக தமிழை கொண்டு வருவதற்கு
முன்பாக நீதிமன்றங்களில் கட்டமைப்பை தமிழக அரசு உருவாக்க வேண்டும். அதற்கு
தமிழறிஞர்கள் உதவ வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக