வெள்ளி, 15 ஏப்ரல், 2011

thangabalu action against the aggressors: தங்கபாலு திடீர் பாய்ச்சல்: தமிழக காங்கிரசில் துவங்கியது பரபரப்பு


தங்கபாலுவின் நடவடிக்கை சரிதான். மே.வங்கத்தில் போட்டியாளர்களை  உடனே நீக்குவதாக எச்சரிக்கும் சோனியா தமிழ்நாடு குறித்து ஒன்றும் எச்சரிப்பதில்லை. அந்த எச்சரிக்கை இங்கும் பொருந்தும்.  எப்பொழுதும் அடாவடித்தனம் செய்ததால் நீக்கப்பட்ட எவரும் சொல்வது நீக்கியவருக்கு அதிகாரம் இல்லை என்பதுதான். தங்கபாலு தலைவராக இல்லாத பொழுது தலைமைக்கு எதிராகத் தூண்டி விடுவது இல்லை. பாராமுகமாகத்தான் இருப்பார். ஆனால். தஙக்பாலு தலைவராக இருக்கும் பொழுது  கோவனும் பிறரும் எதிர்த்துக் கொண்டே இருப்பர். காங். அழிக்கப்பட வேண்டிய கட்சி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே நேரம் தங்கபாலு செய்வது சரிதான். நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காகத் தி.மு.க. பக்கம் சாய்ந்து அதற்கான வாய்ப்பு இல்லை என்றதும் காங்.கில் ஒட்டிய சேகர், உடனே தனக்குப் பதவி வேண்டும் என்று கேட்டு அது இந்தியத் தலைமையால் மறுக்கப்பட்டதும் பழியைத் தங்கபாலு மீது போடுகிறார். தங்கபாலுவின் மனைவி தொலைக்காட்சி மூலம் காங்கிற்கு உதவும் பொழுது அவருக்கு வாய்ப்பு தந்ததும் தவறில்லை.. ஆனால், முடிவிற்குக் கட்டுப்படாமல் கிடைக்கும் ௧௦௦ வாக்குகளையும் கிடைக்கவிடாமல் செய்ய முயன்றவர்களை நீக்கியது முற்றிலும் சரியே! சரியே! சரியே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!  இனத்தைக் காபபோம்!


சென்னை: சென்னை முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், நடிகர் எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ் உட்பட 19 பேர், காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அதிரடியாக வெளியிட்டுள்ளார். "யாரையும் கட்சியை விட்டு நீக்க தங்கபாலுவுக்கு அதிகாரம் கிடையாது' என, நீக்கப்பட்டவர்கள் ஆவேசமாக கூறியுள்ளனர். இதன் மூலம் தமிழக காங்கிரசில் மீண்டும் பரபரப்பு ஆரம்பமாகியுள்ளது.

முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். இவர், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு சீட் கேட்டார். ஆனால், அவருக்கு பதிலாக, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தன் மனைவி ஜெயந்திக்கு சீட் வாங்கினார். வேட்பு மனு பரிசீலனையில், ஜெயந்தி மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக தங்கபாலு வேட்பாளரானார். தங்கபாலுவுக்கு எதிராக போட்டி வேட்பாளர் சிவகாமி நிறுத்தப்பட்டார். தங்கபாலுவின் உருவ பொம்மைகளை, இளைஞர் காங்கிரசார் தீ வைத்து கொளுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். கபாலீசுவரர் கோவிலில், மொட்டை அடித்தனர். சிவகாமிக்கு ஆதரவாக, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், பெரம்பூர் தொகுதி வேட்பாளர் நடேசனுக்கு எதிராக, கவுன்சிலர் செங்கை செல்லப்பா தலைமையில், சத்தியமூர்த்தி பவனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஞ்சிபுரத்தில், லோக்சபா இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஞ்சித்குமார் தலைமையில், தேர்தலுக்கு முதல் நாள், தங்கபாலு உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், தேர்தல் முடிந்ததும், தியாகராஜன் உட்பட 19 பேரை நீக்கி, தங்கபாலு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தங்கபாலு வெளியிட்ட அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர்களுக்கு எதிராகவும், கட்சி தலைமைக்கு எதிராகவும், எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக நடந்து கொண்ட கராத்தே தியாகராஜன், மங்களராஜ், முத்துசாமி, செங்கை செல்லப்பன், சாந்தி சம்பந்தம், விஜயசேகர், ஜேம்ஸ் பிரகாஷ், ரஞ்சன்குமார், ரஞ்சித்குமார், கமல், பவன்குமார், கோவிந்தராஜன், திருஞானம், நாடிமுத்து, சாந்தகுமார், நடிகர் எஸ்.வி.சேகர், சுரேஷ், சக்திவேல், ஜவகர்பாபு ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

அதிகாரம் இல்லை: ""காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னை நீக்க, தங்கபாலுவுக்கு அதிகாரமில்லை,'' என, கராத்தே தியாகராஜன் தெரிவித்தார். சென்னை அடையாறில் உள்ள தியாகராஜன் வீட்டிற்கு வெளியே, போலீசார் திடீரென குவிக்கப்பட்டிருந்தனர். தியாகராஜனை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தகவலை அறிந்து காங்கிரஸ் தொண்டர்கள் பலர் அவரது வீட்டிற்கு வந்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு எதிராக தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

நிருபர்களுக்கு தியாகராஜன் அளித்த பேட்டி: மயிலாப்பூர் தொகுதியில் தோல்வி உறுதி என்பதை, ஓட்டுப்பதிவின் முடிவில் உணர்ந்து கொண்ட தங்கபாலு, ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று, தன் ஆணிவேரை தானே அறுக்கும், அபாயகரமான செயலில் இறங்கியிருக்கிறார். சோனியாவின் ஒப்புதலுடன் கட்சி பணியாற்றி வரும் என்னை சமீபகாலங்களில் அதிகளவு கட்சி பணிகளில் பயன்படுத்திக் கொண்டவர் தங்கபாலு. இரவு, பகல் என் பாராமல் அவர் அழைத்த போதெல்லாம் ஓடிப்போய் கட்சி பணியாற்றிய என்னை கட்சியை விட்டு நீக்க எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை. அதற்கான தகுதியும் இல்லை. காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் பெறாமல், தென்சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ், கவுன்சிலர் சாந்தி, மற்றொரு கவுன்சிலரும், மாநில எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு காங்கிரஸ் தலைவருமான செங்கை செல்லப்பா ஆகியோரையும் எவ்வித விளக்க நோட்டீசும் அளிக்காமல் தன்னிச்சையாக கட்சியை விட்டு நீக்குவதாக அறிவித்திருக்கிறார் தங்கபாலு. ராகுலின் உத்தரவின்படி முறையாக தேர்தல் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளான ஜேம்ஸ் பிரகாஷ், விஜயசேகர், ரஞ்சித்குமார், சுரேஷ், சக்திவேல், ஜவஹர்பாபு உட்பட பலரை கட்சியை விட்டு நீக்கியிருக்கிறார். இளைஞர் காங்கிரஸ் விவகாரங்களில் தலையிட காங்கிரஸ் கட்சியின் எந்த மாநில தலைவர்களுக்கும் உரிமையில்லை. இவ்வாறு கராத்தே தியாகராஜன் கூறினார்.

தங்கபாலு பதில்: சத்தியமூர்த்தி பவனில் தங்கபாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்திய, மாநில அரசு கொண்டு வந்த சாதனை திட்டங்களுக்காக மக்கள் எங்களுக்கு ஓட்டளித்து சிறப்பு செய்திருக்கின்றனர். எங்கள் கூட்டணி அறுதி பெரும்பான்மைøயுடன் வெற்றி பெறும். எங்களது கூட்டணி மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் ஓட்டுகள் பெற்று வெற்றி அடையும். தமிழகம் முழுவதும் கட்சிக்கு விரோதமாக யார், யார் செயல்பட்டார்களோ அவர்களது பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கியுள்ளோம். அவர்களை நீக்குவதற்கான முழு அதிகாரம் எனக்கு உள்ளது. இது பற்றி டில்லிக்கு தெரிவித்து விட்டு தான் நீக்குகிறேன். என் மனைவியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததற்கு, சிலரின் சதிவேலை தான் காரணம். கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் சத்தியமூர்த்தி பவனில் நுழைய அனுமதிக்க மாட்டோம். தேர்தல் கமிஷன் தன்னிச்சையாக செயல்பட வேண்டும் என, காங்கிரஸ் கட்சி தான் அறிவுறுத்தியது. இவ்வாறு தங்கபாலு கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக