திங்கள், 11 ஏப்ரல், 2011

article in dinamani about so called emergency in thamizhnaadu : தமிழகத்தில் நெருக்கடி நிலை அறிவிப்பா!

நன்று.   ஆனால், அரசியல் காரணங்களுக்காகப் போடப்படும் வழக்குகளையும் மோசடி, கொலை, கொள்ளை முதலான குற்ற வழக்குகளையும் வேறுபடுத்திக் காண வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
 
தமிழகத்தில் நெருக்கடி நிலை பிரகடனமா!



நாளை மறுநாள் (13-4-2011) நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய பல முக்கிய புள்ளிவிவரங்கள், வாக்கு அளிப்பவர்களாகிய நமக்கு விரல் நுனியில் கிடைப்பதற்கு தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், அதன் தாய் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த இயக்கமும் மீண்டும் உதவியுள்ளன.  தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் எல்லா வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களையும் மார்ச் 30-ம் தேதி பதிவேற்றியது.  மிக விரைவாக 48 மணி நேரத்துக்குள் அவற்றில் உள்ள எல்லா விவரங்களையும் எடுத்துத் தொகுத்து, நாம் புரிந்துகொள்ளும் வகையில் எளிதாகத் தனது இணையதளத்தில் இடம்பெறச் செய்துள்ளது தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பு அமைப்பு.  நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம். முருகானந்தம் என்பவர் மீது தான் மிக அதிகமாக 10 கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. இதுபோக, 34 இபிகோ குற்றச்சாட்டுகளும் இவர் மீது உள்ளன.  இவர் போலவே, ஜெயம்கொண்டம் பாமக வேட்பாளர் காடுவெட்டி குரு மீது 9 கிரிமினல் வழக்குகளும், அந்தியூர் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி. ராஜா மீது 7 கிரிமினல் வழக்குகளும் உள்ளன.  அதிகமாக கிரிமினல் வழக்குகள் உள்ள வேறு சில வேட்பாளர்களில் முறையே, திண்டுக்கல் பாஜக வேட்பாளர் டி.ஜி. போஸ் மீது 4 வழக்குகள், சோழவந்தான் பாமக வேட்பாளர் எம். இளஞ்செழியன் மீது 7 வழக்குகள், கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர் அருக்குட்டி மீது 4 வழக்குகள், பட்டுக்கோட்டை தேமுதிக வேட்பாளர் என். செந்தில்குமார் மீது 2 வழக்குகள், ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மீது 17 வழக்குகள், பூம்பூகார் பகுஜன் சமாஜ் வேட்பாளர் டி . இளஞ்செழியன் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.  ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட முக்கியமான கட்சி வேட்பாளர்கள் 679 பேரில், 125 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 66 பேர் மீது உள்ளவை மிகக்கடுமையான கிரிமினல் வழக்குகள்.  பெண் வேட்பாளர்களுக்கான வாய்ப்புகளைப் பொறுத்தவரை, கடந்த தேர்தலைவிட மோசம் என்றுதான் சொல்ல வேண்டும்.  அதிமுகவின் 160 வேட்பாளர்களில் 12 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். திமுகவின் 119 வேட்பாளர்களில் 11 பேர் மட்டுமே பெண்கள். காங்கிரஸில் 5 பேர் மட்டுமே பெண் வேட்பாளர்கள். கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) 2 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.) ஒரு பெண் வேட்பாளரைக்கூட களத்தில் இறக்கவில்லை.  பாமக கட்சியின் பேச்சுக்கும், செயலுக்கும் உள்ள இடைவெளியும், இரட்டை வேடமும்தான் இத்தேர்தலின் மிக முக்கிய அம்சமாகி உள்ளது. சாராய வியாபாரம், மணல் கொள்ளை, சமூக நீதி என்று தினம் ஒரு பிரச்னையைப் பேசினார் பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ். இப்பொழுதோ, சிறிதும் கூச்சமின்றி கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை பொன்னான ஆட்சி என்று தேர்தல் ஜுரத்தினால் மாற்றிப் பேசி வருகிறார்.  பல புரட்சிகரமான பெண்ணியக் கருத்துகளை மக்கள் தொலைக்காட்சி மூலம் பேசும் இவரது அமைப்பு வெளியிட்டுள்ள 30 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலில், ஒரே ஒரு பெண்ணின் பெயர்கூட இடம் பெறவில்லை.  பாமகவின் 30 வேட்பாளர்களில், 15 வேட்பாளர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. ஒருவேளை தமிழக அரசியல் என்பது இனி வன்முறை சார்ந்துதான் இருக்கும், இதற்கு காடுவெட்டி குரு போன்றவர்கள்தான் சரியான பதிலடி கொடுக்க முடியும் என்று கருதி, பெண் வேட்பாளர்களுக்கு இடமளிக்கக் கூடாது என்று பாமக முடிவு செய்துவிட்டதோ என்னவோ?  தேர்தல் களத்தில் உள்ள முக்கிய கட்சி வேட்பாளர்கள் 679 பேரில், 240 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட, இந்தத் தேர்தலில் பல வேட்பாளர்கள் மிக அதிகமாகவே சொத்துக் கணக்கு காண்பித்துள்ளனர்.  கடந்த தேர்தலின்போது வருமான வரி அட்டை எண் குறிப்பிடாததோடு, ரூ.1.35 கோடி மட்டுமே காண்பித்த திமுக அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா, இம்முறை தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள குடும்பச் சொத்து மதிப்பு ரூ.15.43 கோடி.  கடந்த முறை தேர்தலின்போது திமுக அமைச்சர் பொன்முடி அளித்த சொத்து மதிப்பு ரூ.2.98 கோடி. ஆனால், இப்பொழுது அவரது சொத்து ரூ.8.22 கோடியாக உயர்ந்துள்ளது.  அமைச்சர்களில், கே.என். நேருவின் சொத்து விவரங்கள்தான் வியப்பைத் தூண்டுகிறது. கடந்த தேர்தலில், ரூ.2.52 கோடி அசையும் சொத்தும், ரூ. 26.9 லட்சம் அசையாச் சொத்தும் காண்பித்துள்ளார் நேரு. இம்முறை அவரது அசையாச் சொத்து ரூ. 26.9 லட்சத்திலிருந்து ரூ.15 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் தனது மகனின் சொத்து ரூ.14.3 கோடி என்றும், அவர் ரூ.10 கோடி கடன் வாங்கியுள்ளதாகவும் பதிவு செய்துள்ளார்.  இதைப் பார்க்கும்போது, நாட்டில் வாங்கும் சக்தி அதிகமாகி உள்ளது என்று சில அரசியல் தலைவர்கள் கூறி வருவது உண்மை என்றே தோன்றுகிறது.  வேட்பாளர்களின் கடன் பற்றிய விவரங்களும் சுவாரஸ்யமானவைதான். கோடீஸ்வரர்களைவிட, கோடிகளில் கடன் வைத்திருக்கும் வேட்பாளர்கள் அதிகமாக உள்ளனர். ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 679 வேட்பாளர்களில், 269 வேட்பாளர்களுக்கு ஒரு கோடிக்கும்மேல் கடன் உள்ளது. ராணிப்பேட்டை திமுக வேட்பாளர் சி.காந்தி வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு ரூ.27.8 கோடி. ஆனால், அவரது சொத்தைவிட அதிகமாக ரூ.50.3 கோடி கடன் உள்ளது.  அதேபோல, கோடீஸ்வர வேட்பாளர்களில் முதலிடம் வகிக்கும் ஹெச். வசந்தகுமார் அளித்துள்ள சொத்து ரூ.133 கோடி. ஆனால், அவரோ ரூ.46.85 கோடி கடன் காண்பித்துள்ளார்.  மு.க.ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியின் சொத்து மதிப்பு ரூ.64.45 கோடி. ஆனால், அவரது கடன் மதிப்பு ரூ.44.84 கோடி.  முதல்வர் மு.கருணாநிதி, கடந்த 5 ஆண்டுகளில் திரைப்படங்களுக்குக் கதை, வசனம் எழுதி வரும் வருமானத்தை உடனுக்குடன் கொடையாக வழங்கி விடுவதாக ஊடகங்களில் அவ்வப்போது செய்தி வந்தது.  அப்படியிருக்க, 2006-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் அவர் அளித்துள்ள விவரங்களின்படி, ரூ.23.55 கோடியாக இருந்த அசையும் சொத்து, 5 ஆண்டுகளில் ரூ. 40.95 கோடியாக அதிகரித்தது எப்படி என்பதுதான் புரியவில்லை.  அதுபோலவே, 2006-ம் ஆண்டு ரூ. 2 கோடி அசையும் சொத்து காண்பித்திருந்த ஜெயலலிதா, இப்பொழுது ரூ.13 கோடியாக அசையும் சொத்து காண்பித்துள்ளார். இதையும் புரியாத புதிர் என்றே சொல்ல வேண்டும்.  ஆக, 2006-ம் ஆண்டின் சட்டமன்ற உறுப்பினர்கள் விவரங்களையும், இப்பொழுது வேட்பாளர்கள் தந்துள்ள விவரங்களையும் கூர்ந்து கவனிக்கும்பொழுது, கீழ்க்கண்ட புரிதல்கள் மட்டும் நமக்கு ஏற்படுகின்றன.  அமைச்சர்கள் உள்பட பெரும்பாலான வேட்பாளர்கள், முழுமையான விவரங்களைத் தமது பிரமாணப் பத்திரத்தில் கொடுப்பதில்லை. அவர்களது கணக்கு வழக்குகள் பல குளறுபடியானவை.  ஏகப்பட்ட கல்வி நிறுவனங்களைப் பணங்காய்ச்சி மரங்களாக வைத்துள்ள நிலையில், அவற்றை அறக்கட்டளைகளாக வைத்துக்கொள்ளும் எளிய வசதி நமது மக்கள் பிரதிநிதிகளில் மோசமானவர்களுக்குக் கிடைத்துள்ளது.  ஆனால், எல்லோருமே தவறான வழியில் செயல்படுகிறார்கள் என்று கூறுவதற்கில்லை.  கருப்புப் பணம் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இடமாக இந்தியத் தேர்தல் களம் உள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி மீண்டும் மீண்டும் கூறி வருவதை நினைவுகூர வேண்டியுள்ளது.  அவர் கூறுவதை மெய்ப்பிப்பது போன்றே, கமுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக டீக்கடையில் பதுக்கப்பட்ட ரூ. 40 லட்சம் பறிமுதல், மதுரையில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகக் கவர்களில் இருந்த ரூ. 20 லட்சம் பறிமுதல், திருச்சியில் உள்ள தனியார் மினி பஸ்ஸில் இருந்து ரூ. 5.11 கோடி பறிமுதல் என்று அடுத்தடுத்து அதிர்ச்சிச் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.  ஆனால், இன்றைக்குத் தேர்தல் ஆணையம் எடுத்து வருகிற வரலாறு காணாத அதிரடி நடவடிக்கைகளோ, தமிழகத்தில் தேர்தல் ஜனநாயகம் தசை பலத்தாலும், கள்ளப் பண பலத்தாலும் சாகடிக்கப்படக் கூடாது எனும் சீரிய நோக்கத்தின் செயல் வடிவம்தான்.  அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தை முழுமையாகவும், தீவிரமாகவும், வெளிப்படையாகவும், பாரபட்சமின்றியும் பயன்படுத்தி, தமிழகத்தில் தேர்தலைக் கண்ணியமாக நடத்தி, பணநாயக நெருக்கடி நிலையில் இருந்து, உண்மையான ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. அவ்வமைப்புக்கு முழு ஆதரவு கொடுத்து நம் தலைமுறையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய அவசர அவசியம் நம் எல்லோருக்கும் உள்ளது.

1 கருத்து: