சனி, 16 ஏப்ரல், 2011

Singhala navy is responsible for the murder of tamil fishermen : தமிழக மீனவர்களின் சாவுக்கு இலங்கைக் கடற்படைதான் காரணம்: வைகோ

மீனவர்களின் படுகொலைகளுக்குக் காரணம் சிங்களக் கடற்படைதான். ஆனால், அதன் இந்தக் கொலைவெறிப் போக்கிற்குக் காரணம் ஒத்தூதும் இந்திய அரசும் தட்டிக் கேட்காத் தமிழக அரசும்.  நாட்டு மக்களை அயல்நாட்டிடம் இருந்து காப்பாற்ற வக்கற்ற அரசுகள் ஏன் பதவியில் இருக்க வேண்டும் என்று  மக்களிடையே எழுந்துள்ள  எண்ணம் பெரு நெருப்பாகப் பரவுவதற்குள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேதனையுடன்  இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 



தமிழக மீனவர்களின் சாவுக்கு இலங்கைக் கடற்படைதான் காரணம்: வைகோ


ராமேசுவரம், ஏப். 15: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் ஆத்திரமடைந்த இலங்கைக் கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்கள் 4 பேரை சித்ரவதை செய்து படுகொலை செய்து, கடலில் வீசியுள்ளனர் என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.இலங்கைக் கடற்படையினரால் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்களின் குடும்பத்தினரை வெள்ளிக்கிழமை வைகோ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தலா ரூ. 25 ஆயிரம் நிவாரண நிதி வழங்கினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:ராமேசுவரத்தில் இருந்து ஏப்ரல் 2-ம் தேதி மீன் பிடிக்கச் சென்ற தங்கச்சிமடத்தைச் சேர்ந்த விக்டஸ், ஜான்பால், அந்தோணிராஜ் மற்றும் கமுதி தாலுகா, வீரசோழன் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து ஆகிய மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது, அன்றைய தினம் நள்ளிரவில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத இலங்கைக் கடற்படையினர் ஆத்திரமடைந்து, அங்கு மீன் பிடித்த 4 மீனவர்களின் படகை மடக்கிப் பிடித்துள்ளனர்.பின்னர், மீனவர்களின் கை, கால்களை கயிற்றால் கட்டி கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியதில், படகிலேயே 4 பேரும் உயிரிழந்துள்ளனர். பின்னர், மீனவர் விக்டஸின் உடலைத் தூக்கி வீசியுள்ளனர். அந்த உடல் யாழ்ப்பாணம் கடற்கரையில் ஒதுங்கியது.மீதமுள்ள மீனவர்களின் உடலை ஒன்றன்பின் ஒன்றாக தமிழக கடல் எல்லையில் இலங்கைக் கடற்படையினர் தூக்கி வீசியதால், தொண்டி, பாசிப்பட்டினம் கடற்கரையில் அச் சடலங்கள் ஒதுங்கின. மற்றொரு மீனவர் உடலையும் விரைவில் கடலில் வீசுவார்கள். இறந்துபோன விக்டஸ் உடலில் 16 இடங்களில் படுகாயமும், காலில் கயிற்றால் கட்டியதற்கான அடையாளமும், ஜான்பாலின் மணிக்கட்டு கை துண்டித்தும், அந்தோணிராஜ் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயமும் உள்ளன. மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கொடுமை 30 ஆண்டுகளாகத் தொடருகிறது. இக் கொடூரச் செயலைக் கண்டிக்க மத்திய, மாநில அரசுகள் தயாராக இல்லை. இதுகுறித்து ஏப்ரல் 4-ம் தேதி கடிதம் எழுதினேன். இதற்கு மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை.இந்தப் படுகொலை குறித்து மதிமுக உயர்நிலைக் குழு சென்னையில் கூடி விவாதித்து, விரைவில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும் எனத் தெரிவித்தார் வைகோ.மதிமுக ராமநாதபுரம் மாவட்டச் செயலர் ஜெயராமன், சிவகங்கை மாவட்டச் செயலர் புலவர் செவந்தியப்பன், மதுரை மாநகர் மாவட்டச் செயலர் பூமிநாதன், விருதுநகர் மாவட்டச் செயலர் சண்முகசுந்தரம், மாநில இளைஞரணி துணைச் செயலர் கராத்தே பழனிச்சாமி, மண்டபம் ஒன்றியச் செயலர் பேட்ரிக், மாநில மீனவரணிச் செயலர் நக்கீரன் உள்ளிட்ட நிர்வாகிகள், மீனவர்கள் ஏராளமானோர் இருந்தனர்.மீனவரின் மனைவிக்கு ஆசிரியர் பயிற்சிக்கு நிதியுதவி: இறந்துபோன மீனவர் அந்தோணிராஜின் மனைவி சாலியோனுக்கு (19) ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர் 12-ம் வகுப்பு படித்துள்ளார். இவர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆகும் செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாக வைகோ தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக