திங்கள், 11 ஏப்ரல், 2011

Kalaignar about poll opinion : கருத்துக் கணிப்புகள் சரியாக இருக்கலாம்: கருணாநிதி

திட்டமிட்டுச் சில பார்ப்பனப் பத்திரிகைகளால் பரப்ப்படுவதாகக் கலைஞர் தெரிவித்து இருக்கிறார். ஆனால், இதில் சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளது. காரணம்,  உண்மை சுடும் என்ற அச்சமா? செய்தி நாகரிகம் கருதிய வெட்டா?  அவரது கருத்தை உள்ளவாறே வெளியிடுவதுதானே செய்தி அறம்! இதனை வெட்டாமல் வெளியிட வேண்டியது தினமணியி்ன் கடமை. (தினமணியால் வெளியிடப்படாத கருத்துகள் குறித்த பதிவு என் வலைப்பூவில் இடம் பெறுவதால் வெட்டினாலும் ஒன்றும் இல்லை.) 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!


கருத்து கணிப்புகள் சரியாக இருக்கலாம்: கருணாநிதி


சென்னை, ஏப். 10: கருத்து கணிப்புகள் ஒரு வேளை சரியாக இருக்கலாம் என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.  ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:  தேர்தலுக்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்தால் அதில் ஒன்றும் தவறில்லை. தேவைக்கேற்ப நல்ல ஆட்சி அமைவதற்காகத்தான் கூட்டணியை நாங்கள் உருவாக்குகிறோம். அந்த கூட்டணிக்கே அதிக வெற்றி கிடைத்து அதில் உள்ள ஒரு கட்சிக்கு கிடைக்காமல் இருந்தால்-நியாயமாகச் சிந்தித்து எடுக்க வேண்டிய முடிவு கூட்டணி ஆட்சி தான் என்றார் கருணாநிதி.  கருத்து கணிப்பு முடிவுகள் திமுக அணிக்கு ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளதாக கூறுகின்றன என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அந்த முடிவுகள் ஒரு வேளை சரியாக இருக்கலாம். அதில் நான் எதுவும் சொல்வதற்கு இல்லை என்றார் அவர்.  தேர்தல் முடிவுக்குப் பிறகு கூட்டணிகள் மாறலாம் என்ற கணிப்பை அரசியல் நோக்கர்கள் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அதை தான் நம்பவில்லை என்றார்.  2ஜி அலைக்கற்றை விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஒரு சந்தேகம்-திட்டமிட்டு சில பத்திரிகைகளால் பரப்பப்பட்டபோது, அது வெளிப்படையாகவே இருக்கட்டும் என்பதற்காகத்தான் அவர்கள் வந்து விசாரித்து விட்டுப் போகட்டும் என்று இருந்தேன் எனவும், அதில், எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் கருணாநிதி கூறினார்.  தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டதற்கு, தலைமைத் தேர்தல் ஆணையாளர் குரேஷி, பொறுப்புக்கு வரும் பொழுதே சவால் விட்டு வந்திருக்கிறார் எனவும், அதனால்தான் அவருடைய பிரதாபத்தை காட்டுவதற்காக ஏற்கெனவே இருந்த தேர்தல் முறைகளை எல்லாம் அடக்கி விட்டதாகக் கருதிக் கொண்டு செயல்படுகிறாரே தவிர வேறு ஒன்றுமல்ல என்றார் கருணாநிதி.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக