<< சிங்கள அரசுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போகும் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்போம். >>உண்மையாகக் கூறியிருந்தால பாராட்டு. ஆனால், ஆயர் தி.மு.க.சார்பினர் என்றே நம்பப்படுகிறது. மாறாக. நடுவுநிலைமையுடனும் மக்கள் நேயத்துடனும் தீர்மானங்கள் உள்ளன. தேர்தல் முடிந்தபினபு இன அழிப்பு , மது விலக்கு, இலவசததிட்டங்கள், சுற்றுச்சூழல், அனைவர்க்குமான கல்வி முதலான அனைத்துக் குறித்தும் மக்களிடையே தொடர் பரப்புரையை மேற்கொண்டால் அடுத்த தேர்தலுக்குள் மக்கள் விழிப்புணர்வு அடைய வாய்ப்பு இருக்கிறது. வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/ தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கன்னியாகுமரி, ஏப். 11: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக 10 தீர்மானங்கள் அடங்கிய சுற்றறிக்கையை தமிழக ஆயர் பேரவை வெளியிட்டுள்ளது. இது கட்சிகளை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழக ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் ஏ.எம். சின்னப்பா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தீர்மானங்கள் விவரம்: இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து சமய சுதந்திரத்திற்கும், சமய உரிமைகளுக்கும் எதிராக சிறுபான்மையினரை அச்சுறுத்தி சமூகத்தைப் பிளவுபடுத்தும் மதவாத அரசியல் கட்சிகளை எதிர்ப்போம். மதவாத அரசியலை முன்னிறுத்தும் கட்சிகளையும், அக்கட்சிகள் சார்ந்துள்ள அணியையும் மக்கள் புறக்கணிக்க வேண்டுகிறோம். பட்டியல் சாதியினருக்கும், பழங்குடியினருக்கும் அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மதம் மாறிய சீக்கியர்களுக்கும், பெüத்தர்களுக்கும் தரப்படுகின்றன. இவ்வுரிமைகள் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் மறுக்கப்படுகின்றன. கிறிஸ்தவ, இஸ்லாமிய தலித்துகளுக்கும் சமநீதி வழங்க வேண்டுமெனில், 1950-ம் ஆண்டு இந்திய குடியரசுத் தலைவரின் ஆணை பிரிவு 3-ல் திருத்தம் கொண்டு வரவேண்டும். இதை ரங்கநாத் மிஸ்ரா ஆணையமும், தேசிய சிறுபான்மை ஆணையமும் வலியுறுத்தியுள்ளன. இருப்பினும், மத்திய அரசு தனது கடமையைத் தொடர்ந்து தட்டிக் கழித்து வருகிறது. மாநிலக் கட்சிகள் இது தொடர்பாக முனைந்து செயல்பட மறுக்கின்றன. இக்கோரிக்கையை செயல்படுத்தாத அரசியல் கட்சிகளைப் புறக்கணிப்போம். தமிழகத்தில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டு உரிமைகள் மதத்தின் பெயரால் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்படுகின்றன. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். கல்வி பெறும் உரிமை குழந்தைகளின் அடிப்படை உரிமை. ஆனால், அரசு கல்வி நிறுவனங்களுக்கு நிகரான நீதியையும், உரிமைகளையும் தமிழக அரசு சிறுபான்மையினர் நடத்தும் தமிழ்வழிக் கல்வி நிறுவனங்களுக்கும், அறிவியல் கலைக் கல்லூரிகளுக்கும் பல வழிகளில் மறுத்து வருகிறது. இத்தகைய போக்கை தொடர்ந்து கடைபிடித்து வரும் கட்சிகளைப் புறக்கணிப்போம். வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வாக்குகளை விலை பேச முற்படுவது ஜனநாயகத்தின் உயிரை அழிக்கும். எனவே, பணம் கொடுக்கும் கட்சிகளைப் புறக்கணிப்பதோடு, பணம் வாங்குவது தவறு என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டுகிறோம். ஈழத் தமிழ் மக்களைக் கொன்றொழித்து அவர்களை சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கி, இந்நாள் வரை அவர்களை மீளக் குடியமர்த்தாமல் அவர்களின் நிலங்களையும், வாழ்வையும் பறித்து வரும் சிங்கள அரசுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணை போகும் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்போம். அனைத்து மக்களின் வாழ்வாதாரமான சுற்றுச்சூழலை அழித்து மண்வளம், நிலவளம், நீர்வளம் இவற்றைச் சிதைப்பதுடன், விவசாயத்தைப் பாழாக்கும் மணல் கொள்ளையில் தொடர்புடைய கட்சிகளையும், வேட்பாளர்களையும் புறக்கணிப்போம். கடல் வளங்களை அழித்தும், கடற்கரையைப் பெரும் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்தும் மக்கள் விரோத கடற்கரை மேலாண்மைச் சட்டங்களைப் புகுத்த முயல்கின்ற கட்சிகளையும், மின்வெட்டாலும், நூல்விலை ஏற்றத்தாலும் நெசவாளர்களின் வாழ்வைச் சீரழிக்கின்ற கட்சிகளையும் அதற்கு உடந்தையாகச் செயல்படும் வேட்பாளர்களையும் புறக்கணிப்போம். தமிழ் மீனவர்களை நடுக்கடலில் தொடர்ந்து படுகொலை செய்து, அவர்களின் உயிரோடு விளையாடும் சிங்கள அரசுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் துணைபோகும் அனைத்து அரசியல் கட்சிகளையும் புறக்கணிப்போம். மதுவிலக்கை முன்னெடுக்கும் கட்சிகளை ஆதரிப்போம். இலவச திட்டங்கள் வழியாக மக்களைத் தொடர்ந்து சோம்பேறிகளாக்கி உழைப்பின் மதிப்பைக் கொச்சைப்படுத்தி மேலோட்டமான கண்துடைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதில் குறுகிய கால நோக்கங்களை அடைய முயலும் கட்சிகளைப் புறக்கணிப்போம். இந்த சுற்றறிக்கை, கன்னியாகுமரி மாவட்ட அனைத்து கடலோரக் கிராமங்களில் வசிக்கும் மக்களின் கைகளைச் சென்றடைந்துள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் திகைப்பில் ஆழ்ந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக