அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
/தமிழே விழி! தமிழா விழி! /
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அன்னா ஹசாரேவை புறக்கணிக்கும் தமிழகம்
நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான ஹசாரே அவர்களின் போராட்டம் வலுத்து வருகிறது ஆனால் தமிழகத்தில் எந்த பெரிய தாக்கமுமில்லை. அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக வட மாநிலங்களில் இதற்கு மக்கள் பேராதரவு தந்து இருக்கின்றனர் ஆனால் இதைப்போல ஒரு தாக்கம் நமது மாநிலத்தில் இல்லையே எனும் போது மிக மிக ஆத்திரமாக இருக்கிறது.
புறக்கணிக்கும் ஊடகங்கள்
தமிழக ஊடகங்கள் எப்படி சீரழிந்து போய் இருக்கிறது என்பதற்கு தற்போதையே நிலையே சாட்சி. தொலைக்காட்சி செய்தி தாள்கள் எதிலும் இந்தப்போராட்டத்திற்கு ஆதரவு இல்லை. தினமலர், தினமணி மட்டுமே இன்றைய தலைப்பு செய்தியில் முக்கியத்துவம் கொடுத்து ஆறுதலை தந்து இருக்கிறது. தினமலர் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் அதை நினைத்துப் பார்த்து பேசும் தருணம் இதுவல்ல. எந்த ஊடகமுமே இதற்கு உறுதியான ஆதரவு தராத போது இந்தபோராட்டத்திற்கு தினமலர் தினமணி கொடுத்த ஆதரவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
சன் டிவி செய்திகளில் நேற்றும் [7-4-2011] எதுவும் கூறவில்லை.. வெறுத்துப் போய் விட்டேன். இந்தியாவே இந்தப் போராட்டத்திற்காக அலறிக்கொண்டு இருக்கிறது ஆனால் எதுவுமே நடக்காத மாதிரி வழக்கமான செய்திகளை கூறிக்கொண்டு இருக்கிறார்கள் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல். எந்த அளவிற்கு கேவலமாக போய் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
மற்ற ஊடகங்கள் ஏன் இது பற்றி பெரிதாக பேசவில்லை? எதற்கு தயங்குகிறார்கள்? சராசரி குடிமகனைப் போல தயங்கும் ஊடகத்திற்கு இது கேவலமாக இல்லையா! கொஞ்சம் கூடவா சூடு சொரணை இல்லை. மக்களால் தான் அவர்கள் வளருகிறார்கள் ஆனால் இன்று மக்களுக்காக ஒரு போராட்டம் வெடித்து இருக்கும் போது ஏன் ஆதரவு தர மறுக்கிறார்கள். ஊடகங்கள் செய்திகளை அதுவும் இதைப்போல செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது முக்கிய கடமையில்லையா! ஏன் கூற மறுக்கிறார்கள்? ஏன் மக்கள் இது பற்றி தெரிந்து கொள்ள உதவ மறுக்கிறார்கள்?
கூறுபவர்கள் கூட எதோ மூலையில் “இன்று கோவை இரண்டாவது வார்டில் மக்கள் குடி தண்ணீருக்காக போராட்டம் நடத்தினார்கள்” என்கிற ரேஞ்சுக்கு சப்பையாக கூறிக் கொண்டு இருக்கிறார்கள். எழுத்தில் ஒரு ஆவேசம் வேண்டாமா! முக்கியத்துவம் வேண்டாமா! ஏன் தமிழக மக்களை மாக்களாக வைக்க இவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்.
பதிவர்களுக்கு (Bloggers) ஒரு பகிரங்க கேள்வி
ஈழத் தமிழர்களுக்காக, இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்களுக்காக எழுத்தின் மூலம் போராட்டம் செய்தீர்கள் அது ஏன் இந்திய மக்களுக்காக தற்போது ஒரு போராட்டம் நடக்கும் போது எதுவுமே நடக்காத மாதிரி வெட்டி அரசியல் பேச்சை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நமக்கு தமிழர்கள் முக்கியம் என்பது போல இந்தியாவும் முக்கியமில்லையா! வட மாநிலங்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை அவர்கள் தமிழகத்தை புறக்கணிக்கிறார்கள் என்று கூறுகிறீர்கள். தமிழகம் இந்தியாவில் இல்லையா என்று உணர்ச்சி பொங்க கேட்டீர்கள். தற்போது பதிவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தால் தமிழகம் இந்தியாவில் இல்லாததைப் போல தான் தோன்றுகிறது.
ஹசாரே போராட்டத்திற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல வழக்கமான அரசியல் பதிவுகளாக எழுதி தள்ளிக்கொண்டு இருக்கிறீர்கள். தற்போதையே தேவை ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு ஆனால் அதிகமாக எழுதப்படும் பதிவுகள் என்னவென்றால் கலைஞர், ஜெயா, கேப்டன், வைகோ, சீமான், வடிவேல், குஷ்பூ இவர்களைப் பற்றியே இருக்கிறது. இன்று திரட்டிகளில் சூடான இடுகைகள் (post) முழுவதும் இவை பற்றியே ஒன்று கூட ஹசாரே போராட்டத்தை பற்றி இல்லை. ஊடகங்களை காசுக்காக கேவலமாக எழுதுகிறார்கள் என்று திட்டும் உங்களை ஹிட்ஸ்க்காக நீங்கள் எழுதுகிறீர்கள் என்று ஏன் ஊடகங்கள் நினைக்கக்கூடாது?
இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்தப் போராட்டம் வெற்றி பெற்று நமக்கு ஒரு தீர்வு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அது எதைப் பற்றியும் கவலைப்படாமல் வழக்கமான அரசியல் பதிவுகளாக எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். தற்போதையே தேவை ஊழல் இல்லாத இந்தியாவா அல்லது யார் ஆட்சிக்கு வந்தாலும் செய்யும் ஊழலா! இதில் யாருக்கு ஆதரவாக எழுதி நமக்கு என்ன பயன்.
ஹசாரே போராட்டத்தைப்பற்றி வெகு சிலரே எழுதி வருகிறார்கள். ஒரு நான்கு பேர் பேசிக்கொண்டு இருப்பதால் என்ன பயன்? நாடு நன்றாக இருக்க வேண்டுமாம், ஊழலுக்கு எதிராக அரசியல்வாதிகள் பற்றி திட்டி எழுதி பொங்குவார்களாம் ஆனால் ஊழலுக்கு எதிராக ஒரு போராட்டம் நடந்தால் அது பற்றி கண்டுகொள்ள மாட்டார்களாம். என்னய்யா உங்க லாஜிக்? எதோ சாதாரண போராட்டம் என்றதால் கூட பரவாயில்லை இந்தியா முழுக்க பரவி அனைவரும் ஆர்வமாக பங்கு கொண்டு வருகிறார்கள் ஆனால் இங்கே!!! போங்கயா வயித்தெரிச்சலாக இருக்கிறது.
ரஜினி கமல் எங்கே?
தமிழகத்தில் சாதாரண மக்களுக்குத் தான் இது பற்றி தெரியவில்லை அல்லது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் ஊடகங்கள் செய்து கொண்டு இருக்கின்றன ரஜினி கமல் போன்ற பிரபலங்களுக்கு என்ன வந்தது? ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது. மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறவர்கள் ஏன் இதைப் போன்ற அருமையான வாய்ப்பை பயன்படுத்தக்கூடாது? இருவரும் அரசியல்வாதிகள் வீட்டிற்கு வந்தால் வாழ்த்துக் கூறுகிறார்கள் அதே போல ஹசாரேவும் வந்து நேரடியாக கேட்டால் தான் வாழ்த்துக் கூறுவார்களா!
இனியும் அமைதி காப்பது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல் அல்ல. மக்கள் இருவரையும் உயர்ந்த இடத்தில் வைத்ததற்கு இருவரும் நன்றி கடன் பட்டு இருக்கிறார்கள் அதை இதைப்போன்ற தருணங்களில் இவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
ரஜினி கமல் என்றில்லை ஒருத்தர் கூட ஆதரவு தரவில்லை. பாலிவுட்டில் அமிர்கான், ஹிர்திக், சேகர் கபூர் என்று ஏகப்பட்ட பிரபலங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து துணை நிற்கிறார்கள் ஆனால் இங்கே ஒரு நடிகர் கூட வாயைத் திறக்கவில்லை. ரசிகர்களே உங்கள் ரசிக பாசத்தை காட்ட இது தருணமல்ல தற்போது நமக்கு தேவை ஊழலற்ற இந்தியா. நாளைக்கு ஊழல் இல்லாத இந்தியா இருந்தால் தான் நமது குடும்பத்தினர் நிம்மதியாக இருக்க முடியும் இவர்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை காரணம் இவர்களிடம் பணம் இருக்கிறது அதிகாரத்தின் ஆதரவு இருக்கிறது. எனவே இவர்களுக்காக பரிந்து பேசுவதாக நினைத்து உங்கள் வாழ்வை அழித்துக் கொள்ளாதீர்கள். நாளைக்கு நமக்கு ஏதாவது கஷ்டம் என்றால் இவர்கள் யாரும் வரப்போவதில்லை நம்முடைய பிரச்னைக்கு நாம் தான் போராட வேண்டும்.
எங்கே சென்றனர் தமிழக பிரபலங்கள்?
எந்த விஷயம் என்றாலும் வாய் கிழிய பேசும் பல தமிழக பிரபலங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்கின்றனர். தமிழகத்தில் இருந்து ஒருத்தர்… ஒருத்தர் கூட இதற்கு ஆதரவு தரவில்லை. ஏன் தமிழகம் இவ்வளவு கேவலமாக இருக்கிறது? அண்டை மாநிலமான கர்நாடகாவில் பட்டையைக் கிளப்பிக்கொண்டு இருக்கிறார்கள். நேற்று ஆந்திராவிலும் இதற்கு பேராதரவு தர துவங்கி விட்டார்கள் ஆனால் ஏன் தமிழகம் மட்டும் எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருக்கிறது.
இணையத்தில் நம்மைப்போல கொஞ்ச பேர் தான் இது பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் இதனால் என்ன பயன்? பொது மக்கள் ஆதரவு இல்லாதவரை இங்கே என்ன கத்தியும் பிரயோஜனமில்லை என்னையும் சேர்த்தே கூறுகிறேன்.
இந்தியா முழுவதும் பேராதரவு (தமிழகம் தவிர்த்து)
இந்தியா முழுவதும் மக்கள் மிக ஆர்வமாக இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள். கிண்டலடித்துக்கொண்டு இருந்த இளைஞர்கள் கூட ஆதரவு பெருகி வருவதைக்கண்டு தங்கள் ஆதரவை வழங்கி வருகிறார்கள். அலுவலகம் செல்பவர்கள், குடும்பத் தலைவிகள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், இளைஞிகள், வயதானவர்கள் என்று பல்வேறு தரப்பினரும் ஹசாரேக்கு ஆதரவு தந்து அவரை அன்பில் திக்குமுக்காட வைத்து வருகிறார்கள்.
இது ஒரு நடுத்தர மக்கள் போராட்டம்
இந்தியாவில் நடுத்தர மக்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். ஹசாரே போராட்டம் நடுத்தர மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதால் அவருக்கு ஆதரவு பல்கிப்பெருகி வருவதாக வட இந்திய ஊடகங்கள் கூறி வருகின்றன. இது உண்மையும் கூட! ஒரு சராசரி குடிமகன் ஒவ்வொருவரின் எண்ணமும் ஊழல் இல்லாத இந்தியா தான்.
சக்கைப்போடு போடும் சமூகத்தளங்கள்
facebook, Twitter, Buzz போன்றவற்றில் நேற்று நொடிக்கு பத்து செய்தி இதைப்பற்றி பேசப்படுவதாக கூறப்பட்டுள்ளது. கூகுள் தேடுதலில் ஹசாரே பெயரே முதல் இடத்தை பிடித்துள்ளது. இதுவே மக்கள் இப்போராட்டத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு சாட்சி. facebook ல் இரு நாளில் ஒரு லட்சம் பேர் இதில் இணைந்துள்ளார்கள்.
பொதுமக்கள் ஆர்வம்
முன்பெல்லாம் போராட்டத்தில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் பேச்சோடு நிறுத்தி விடுவார்கள் ஆனால் இப்போது குடும்பத்தலைவிகள், மாணவர்கள், வயதானவர்கள் என்று அனைவரும் நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படி போராட்டத்தில் கலந்து கொள்வது? என்று ஆர்வமாக கேட்டு பங்கெடுத்து வருகிறார்கள். சென்னையில் கூட பலர் யாராவது இதை முன்னெடுக்க மாட்டார்களா என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். பலர் அலுவலகத்திற்கு விடுமுறை போட்டுச் செல்லக்கூட தயாராக இருக்கிறார்கள். அந்த அளவிற்கு ஹசாரே போராட்டம் மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமாக இந்த அளவிற்கு ஆதரவு பெருகும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இதில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் மக்கள் ஊழல் அரசியல்வாதிகளால் எந்த அளவிற்கு நொந்து போய் இருக்கிறார்கள் என்று. ஒவ்வொரு சராசரி குடிமகனின் கோபம் தான் தற்போது இந்த எழுச்சியாக வெடிக்கிறது.
எகிப்து போல நம்ம நாட்டிலும் ஒரு மாற்றம் ஏற்படத்துவங்கியுள்ளது. இதை நீர்த்து போக விடாமல் வெற்றி பெற நாம் உதவ வேண்டும் அது நமது கடமை.
ஹசாரே
சரத் பவார் ராஜினாமா பற்றி ஹசாரே விடம் கேட்ட போது “சரத் பவார் போனால் இன்னொருத்தர் வரப்போகிறார்..எந்த மாற்றமும் வரப்போவதில்லை” என்று நச்சென்று கூறி இருக்கிறார். போராட்டம் வலுத்து வருவதைப் பார்த்து பயந்து போய் இருக்கிற மத்திய அரசு இந்தக்குழுவில் மக்கள் பாதி இருப்பார்கள் என்று ஏற்றுக்கொண்டு ஹசாரே இதன் தலைவராக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாக நான் இதன் தலைவராக இருக்கப்போவதாக கூறவில்லை அப்படிக் கூறினால் மக்கள் நான் இந்தப் பதவிக்காகத் தான் இதை செய்ததாக நினைத்து விடுவார்கள் எனவே இதில் நான் உறுப்பினராக மட்டுமே இருப்பேன் தலைவராக அல்ல என்று சரவெடியாக கூறி இருக்கிறார் அதோடு ஏற்றுக்கொண்டதை எழுத்துப்பூர்வமாக தராத வரை போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
இத்தனை நாள் எங்கே சார் போனீங்க!
நான் இதற்கு முன்பு ஹசாரே போராட்டம் பற்றி எழுதியவை
- April 8, 2011 at 9:05 AM
- தினமணியிலும் அண்ணா தான் தலைப்புச் செய்தி. ஆனால் மற்றவை புறக்கநிக்கிறன. குறிப்பாக தொலைக்காட்சிகள்.
- April 8, 2011 at 10:11 AM
- இன்று தினமலரில் நான் பார்த்த ஒரு கமென்ட் (எழுதியவர் கைப்புள்ள)
“நான் என்னோட பசங்க எல்லார்க்கிட்டையும் சொல்லி ஆதரவு திரட்டி விட்டேன். எல்லாவனும் ஆளாளுக்கு ஒரு புறம் ஆங்காங்கே நடக்கும் ஆதரவு இடங்களுக்கு போறோம்ன்னு சொல்லிட்டானுக. என்னோட பசங்க எல்லாரும் இது மாறி ஒரு சந்தற்பத்துக்காகதான் காத்துகிட்டு இருந்தானுக. இத்தனைக்கும் எல்லாவனும் கல்யாணம் ஆகி குடும்பம் குழந்தை குட்டின்னு இருக்கிற குடும்பஸ்தனுக. இருந்தாலும் வேலைக்கு லீவு போட்டுட்டு கூட போறேன்னு சில பேரு சொல்லி இருக்கானுக. என்னுடைய குடும்பத்தில் இருந்தும் போகிறார்கள். என்னுடைய பசங்க எல்லோருமே நம்மள மாறிதான், ஜாலியாகவும், சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்தான். ஆனால் இந்த விசயத்தை பற்றி பேசும் போது அவர்கள் குரலில் தெரிந்த ஒரு மகிழ்ச்சி, ஒரு அர்பணிப்பு இவ்வளவு நாள் எங்களுடைய நட்பில் பார்க்காத ஒரு விசயமாக இருந்தது. அடடா நம்ம பசங்க கூட நாட்டு மேல எவ்வளவு ஈடுபாடா இருக்கானுக என்று நினைத்த போது என்னுள் ஒரு சிலிர்ப்பு ஓடியது. என்னாலும் கூட என்னுடைய நாட்டுக்கு ஒரு சிறிய சேவை செய்ய முடிகிறதே என்று. டே மச்சிங்களா… என்னோட பசங்களா…. கெளம்புங்கடா என்று அவர்கள் சந்தோசத்தில் கூக்குரலிடும் சத்தம் இனிமையாக என்னுள் ஒலிக்கிறது”
- April 8, 2011 at 10:48 AM
- //ஈழத் தமிழர்களுக்காக, இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்களுக்காக எழுத்தின் மூலம் போராட்டம் செய்தீர்கள் அது ஏன் இந்திய மக்களுக்காக தற்போது ஒரு போராட்டம் நடக்கும் போது எதுவுமே நடக்காத மாதிரி வெட்டி அரசியல் பேச்சை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.//
அண்ணா ஹசாரே ஒரு இந்து என்ற நினைப்பாலும் இருக்கலாம்.
- April 8, 2011 at 11:28 AM
- அவரது போராட்டம் பேராதரவு பெற்று வெற்றி பெற வேண்டும்.
- April 8, 2011 at 11:46 AM
- தமிழ் மக்கள் என்றும் நல்ல செயலுக்கு துணை நிற்க மாட்டார்கள். வடிவேலுவுடன் ஒரு நாள் போன்ற நிகழ்ச்சிகளை ரசிக்க அவர்களின் நேரம் சரியாக உள்ளது. அவரது போராட்டம் பேராதரவு பெற்று வெற்றி பெற வேண்டும்.
- April 8, 2011 at 11:51 AM
- வாழ்க திருவாளர் அன்ன ஹசாரே அவர்கள் !
சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.
இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்
- April 8, 2011 at 12:10 PM
- ஒட்டுமொத்த தமிழகமும் புறக்கணிக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சென்னை மற்றும் கோவையில் போராட்டம் நேற்றே தொடங்கி விட்டது.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=220516
- April 8, 2011 at 12:49 PM
- நேற்றே இதைப் பத்தி பதிவு எழுதி விட்டேன். சென்னைப் போராட்டம் பற்றி எனக்குக் கிடைக்கும் தகவல்களை கூகிள் பஸ்ஸில் பகிர்ந்து வருகிறேன்
- April 8, 2011 at 1:23 PM
- http://www.avaaz.org/en/stand_with_anna_hazare/?g-bpi-s- இங்கு அன்னா ஹசாரேவிற்கு ஆதராவாக கையெழுத்து திரட்டப்படுகிறது.
- April 8, 2011 at 1:29 PM
- //ஈழத் தமிழர்களுக்காக, இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர்களுக்காக எழுத்தின் மூலம் போராட்டம் செய்தீர்கள் அது ஏன் இந்திய மக்களுக்காக தற்போது ஒரு போராட்டம் நடக்கும் போது எதுவுமே நடக்காத மாதிரி வெட்டி அரசியல் பேச்சை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.//
எல்லாம் ஒரு பரந்த மனப்பான்மைதான். இங்கு ஊழலை எடுத்துவிட்டால் அரசியலே இல்லையே!
பார்க்க..
ஸ்பெக்ட்ரம் ராசாவுக்கு நன்றிகள்…
http://vettipaechchu.blogspot.com/2011/04/blog-post.ஹ்த்ம்ல்
- April 8, 2011 at 1:41 PM
- சபாஸ் சரியான பதிவு….:-) இப்போதுதான் சரியான பாதையை பிடித்து இருக்கிறீர்கள் கிரி
வெட்டி அரசியல் மற்றும் மொக்கை பதிவு அரசியல் எழுதும் பதிவர்கள் மற்றும் அனைத்து (பெரிய)பதிவர்கள் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் தளங்களை நிரப்ப வேண்டும்.
எல்லா பதிவர்கள் தளத்திலும் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கெஜட் இருக்கவேண்டும்.
நன்றி.
- April 8, 2011 at 2:25 PM
- நான் நாளை இந்தியா செல்கிறேன். இரண்டு வாரங்கள் மட்டுமே விடுப்பு. மனைவியின் பிரசவத்திற்காக செல்கிறேன். இன்னும் பல சொந்த வேலைகளும் இருக்கிறது. இந்த போராட்டத்தில் எங்காவது ஓரிடத்தில் கலந்துகொண்டு ஒரு நாளாவது உண்ணாவிரதம் இருக்க விரும்புகிறேன். பார்ப்போம்.
- April 8, 2011 at 2:30 PM
- ஹசாரே,என்கின்ற தாத்தாவின் உண்ணாவிரதத்தால்,மிகப்பெரிய ராணுவபலத்தைக்கொண்ட இந்தியாவே உறைந்துப்போயிருக்கிறது.அவர் யார் என்றே தெரியாத இளய உலகம்.அவருக்காக மெழுகுவர்த்தி ஏந்தி நிற்கிறது.இபோது தெரிகிறதா அகிம்சையின் வழிமை.தீவிரவாதத்துக்கு வக்காலத்து வாங்குபவர்களே சிந்தியுங்கள்.
- April 8, 2011 at 2:34 PM
- சரியான நேரத்தில் வந்துள்ள மிக சரியான பதிவு! சன் டிவி செய்திகளில் எப்பவும் வடிவேலு விஜயகாந்த் திட்டுறது பத்தியே தான் போட்டுட்டு இருக்கான். எனக்கும் உங்களை போல தான் கிரி.. ஊடக செய்திகளை பார்த்தால் மிக வெறுப்பாக உள்ளது. ஆனா facebook , twitter மூலமாக ஆதரவுகளை அளித்து கொண்டு இருக்கிறோம்
- April 8, 2011 at 3:01 PM
- இதற்கு முக்கிய காரணம் பெரும்பாலான மக்களே இங்க ஊழல்வாதிகளாக இருப்பதுதான்.. அடுத்த காரணம் சினிமா,டி.வி…இன்னொரு முக்கியகாரணம் தினந்தந்தி.தினகரன் இரண்டுமே ஆளும்கட்சியின் பத்திரிகைகள் அவர்கள் இருவரும் திமுகவுக்கு மாமா வேலை பார்க்கவே நேரம் சரியாக இருக்கிறது.எல்லாவற்றையும் விட தமிழகத்தை ஒரு மோசமான நோய் பீடித்திருக்கிறது.. அது துணிச்சல் இல்லாத பெட்டைத்தனம் எனும் நோய்
- April 8, 2011 at 3:57 PM
- அன்னா ஹசாரேவை முதலில் கார்ப்ரேட் சுரண்டல்காரர்களை எதிர்த்து போரடச் சொல்லுங்கள் பிறகு கொடுக்கலாம் ஆதரவு. அவருக்கு ஆதரவு கொடுப்பவர்களில் வைத்திருக்கும் பதாகையில் ஒன்று இட ஒதுக்கீடு என்பது மோசமான ஜனநாயகம், இட ஒதுக்கீட்டை நீக்கும் நல்ல ஜனநாயகம் வேண்டும் என்று. எந்த விதமான சமூக பார்வையும் இல்லாமல் உண்மையான போராட்டங்களில் இருந்து திசை திருப்ப நடத்தப்படும் நாடகத்தின் கதாநாயகந்தான் இவர். சமூக நீதி பற்றி அறிவிருப்பதால்தான் தமிழகத்தில் இந்த காந்திய காமடி ஷோவைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. மொழுகுவர்த்தி ஏத்திகிட்டு டெல்லியில போராடினா அவர்கள் காந்தியாவாதியாம், தண்டகாரண்யாவில் போராடுறவன் எல்லாம் தீவிரவாதியாம்.
வட இந்தியா மீடியாவின் செய்திப் பசிக்கு இவர் அவல் பொறி.. ஐபில் ஆரம்பிச்சாச்சு. இனிமே இவர் அதிகம் தேவையில்லை
- April 8, 2011 at 4:47 PM
- சரியாக சொன்னீர்கள் முத்துக்குமரன்.
இந்தியாவையே சுரண்டிக்கொண்டுஇருக்கும் கார்ப்பரேட் கம்பனிகளை எதிர்த்தோ,அதை ஆதரிக்கும் இந்தியாவை கூறுப்போட்டு விற்றுகொண்டு இருக்கும் அரசியல் கட்சிகளை எதிர்த்தோ இவர் போராடவில்லை.இதனால் ஏற்பட்ட விளைவான ஊழலை எதிர்த்துபோராடுகிறார்.நல்ல காமெடி.
- April 8, 2011 at 5:41 PM
- அன்னா ஹசாரே அவர்களது போராட்டத்திற்கு ஆதரவை தரும் உங்களது இந்த பதிவு
தெளிவான சரியான ஒரு பதிவு கிரி
என்னால் முடிந்த இந்த போராட்டத்திற்கான ஆதரவை என் தளத்தில் தெரிவித்திருக்கிறேன்
http://kudanthaiyur.blogspot.com/2011/04/blog-post.html
அவரது இந்த போராட்டம் வெற்றி பெற அனைவரும் ஒருமித்த குரல் கொடுப்போம்
- April 8, 2011 at 7:38 PM
- நானும் இதை ஆரம்பத்தில் எதிர்பார்தேன் .. அவர் செய்யும் போராட்டம் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் … நாம் தமிழகத்தில் இருந்து ஆதரவு தர வேண்டும் ………
- April 8, 2011 at 7:56 PM
- சென்னை, ஏப்.8,2011
ஊழலுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் மேற்கொண்டுள்ள மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாராவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் சனிக்கிழமை கூட்டம் நடைபெறவுள்ளது.
டெல்லி, கோல்கத்தா, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களைப் போன்றே சென்னையிலும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு பெருகியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகே சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு மக்கள் கூடி, தங்கள் ஆதரவைப் பதிவு செய்ய வேண்டும் என மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள், சமூக வலைத்தளங்கள் மூலமாக சென்னைவாசிகளிடையே தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில் எவ்வித வேறுபாடுகளும் இன்றி அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அந்தத் தகவல்களில் தெரிவிக்கப்படுகிறது.
சென்னை மெரினாவில் நடைபெறவுள்ள அன்னா ஹசாரே ஆதரவுக் கூட்டத்தில் சமூக ஆர்வலர்களும், பிரபலங்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- April 8, 2011 at 8:01 PM
- ‘ஊழலுக்கு எதிரான இந்தியா!’
அதில் நீங்களும் ஒருவரா?
– ஜூனியர் விகடன் – 13-ஏப்ரல் -௨௦௧௧
‘இந்தியாவில் ஊழலை முற்றிலும் ஒழித்தே தீர வேண்டும்’ என்ற
உயர்ந்த நோக்கத்துடன் 72 வயதான மனிதர் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்க… ஒட்டுமொத்தத் தேசமும் சிலிர்த்து நிற்கிறது! எகிப்து, லிபியா, வளைகுடா நாடுகளில் எழுந்த மக்கள் எழுச்சி, இந்தியாவிலும் தோன்றிவிட்டதோ என்று எண்ணும் வகையில் நடக்கிறது போராட்டம். அவர் அன்னா ஹசாரே!
மகாராஷ்டிர மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் என்ற சிற்றூரை மாதிரிக் கிராமமாக மேம்படுத்தியவர். அதற்காக, 1992-ல் பத்ம பூஷண் வழங்கிக் கௌரவித்தது இந்திய அரசு. ‘ஊழல் புரிந்த ஆட்சியாளர்களை விசாரிக்கும் லோக்பால் மசோதாவை உரிய திருத்தங்களுடன் நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி உள்ளார் அன்னா!
ஊழல் புரியும் ஆட்சியாளர்கள் மீது விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கக் கோருவதுதான் லோக்பால் மசோதா. முதலில் இது, 1969-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், தங்களையே விசாரிக்க எம்.பி-க்கள் ஒப்புக்கொள்வார்களா? எதிர்ப்பு கிளம்பியதால், அது நிறைவேறவில்லை. அதன் பின்னர், 1971 முதல் 2008 வரை ஒன்பது தடவைகள் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டும், இன்று வரை நிறைவேறவே இல்லை!
அதனால், அந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்ய மத்திய அமைச்சர் சரத்பவார் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில், ‘பொது நல அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அன்னா ஹசாரேவும் பிரதமரிடம் இதை வலியுறுத்தினார். ஆனால், அதை மன்மோகன் சிங் நிராகரித்துவிட்டார்.
இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண், அக்னிவேஷ் உள்ளிட்டோர் சேர்ந்து, ‘ஜன் லோக்பால்’ என்ற மாதிரி மசோதா ஒன்றைத் தயாரித்தனர். அதில், எப்படிப்பட்ட விஷயங்கள் எல்லாம் இடம்பெற வேண்டும் என்பதைத் தெளிவாகக் கூறி இருந்தனர். இதையும் பிரதமர் நிராகரிக்கவே, அதிர்ச்சி அடைந்த அன்னா ஹசாரேவும் ஆதரவாளர்களும் இப்போது போராட்டத்தில்.
இது குறித்து ஹசாரே, ”லோக்பால் மசோதா தயாரிப்புக் குழுவில் சமூக அமைப்புகளில் உள்ளவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. முன்னாள் நீதிபதி, மூத்த வக்கீல்கள் போன்றவர்களையும் முக்கிய நபர்களாக அரசு கருதவில்லை. ஆனால், மகாராஷ்டிராவில் பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள வேளாண் துறை அமைச்சர் சரத்பவாரை இந்த கமிட்டிக்குத் தலைவராக நியமித்துள்ளனர். அரசு விதிகளுக்கு மாறாக, பல ஏக்கர் நிலத்தை வைத்துள்ள ஒருவரை இதற்குத் தலைவராக நியமித்து மசோதா தயாரிப்பது சரியாகுமா?
இந்த மசோதா தயாரிப்புக் குழுவில் 50 சதவிகிதம் அதிகாரிகளையும், 50 சதவிகிதம் சமூக நல அமைப்பினரையும், அறிவுஜீவிகளையும் நியமிக்க வேண்டும். ‘உங்களை மதிக்கிறேன், உங்களை நம்புகிறேன்’ என்று பிரதமர் என்னிடம் கூறுகிறார். ஆனால், கடந்த மாத சந்திப்புக்குப் பின்னர் எங்களுடன் கலந்தாலோசனை செய்ய ஏன் பிரதமர் மறுக்கிறார் என்று தெரியவில்லை!
முழுக்க முழுக்க அரசாங்கம் மட்டுமே இந்த மசோதாவைத் தயாரித்தால், அதில் ஜனநாயகம் இருக்காது. முழுமையான எங்கள் எல்லா ஷரத்துகளும் அடங்கிய லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் வரை என் உண்ணாவிரதத்தைக் கைவிட மாட்டேன்!” என்கிறார் உறுதியாக.
இந்தப் போராட்டத்துக்கு அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், உண்ணாவிரத இடத்துக்கே சென்று, ”இந்தியாவில் தற்போது தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட் இரண்டு மட்டுமே துடிப்பாக உள்ளன. ஊழலுக்கு எதிராக இதுபோன்ற துடிப்பான அமைப்பு நிச்சயம் தேவை என்பதால், ஹசாரோ மற்றும் குழுவினர் தயாரித்த மாதிரி லோக்பால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கிறோம். இதை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுசெல்ல முயற்சிப்பேன்…” என்றார்.
மேலும், முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி, சுவாமி அக்னிவேஷ், சந்திப் பாண்டே உட்பட பல பிரபலங்களும் உண்ணாவிரத இடத்துக்கு வந்து, ஆதரவுப் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். பீகார் துணை முதல்வர் எஸ்.கே.மோடியும் ஆதரவு அளித்துள்ளார்.
அன்னா ஹசாரேவின் சொந்த மாநிலமான மகாராஷ்டிராவில் பொதுமக்களும் இந்த மசோதாவை கொண்டுவருவதில் தீவிரம் காட்டுகிறார்கள். மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில், ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் உண்ணாவிரதம் தொடங்கி இருக்கிறார்கள். அந்த இயக்கத்தைச் சேர்ந்த மாயங்க் காந்தி, ”அன்னா ஹசாரேவுக்குப் பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு பெருகுகிறது. எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் மூலம் இந்தப் போராட்டம் மக்களிடம் வேகமாகப் பரவி வருகிறது. பலர் தங்கள் அலுவலகங்களிலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர். கோரிக்கை நிறைவேறினால் ஒழிய, இந்தத் தீ அணையாது!” என்கிறார்.
நல்ல விஷயத்துக்காக நடக்கும் போராட்டம், நாலா திசைகளிலும் பரவி வருவது நம்பிக்கை அளிக்கிறது!
- பா.பிரவீன்குமார்
- April 8, 2011 at 8:48 PM
- While I understand ur angst on media please don’t compare this agitation with the freedom struggle n fight against ethnic cleansing where we were all helpless -deeply hurts
- April 8, 2011 at 9:29 PM
- கிரி,
நான் எனக்கு தெரிஞ்சு அதன பெருகும் அனுபிட்டேன். கருமம் புடிச்ச பசங்க விஜயகாந்த் வடிவேலு மேட்டர் வீடியோ முடிஞ்சா அனுப்பு நு சொல்லுறாங்க
ரஜினி கமல் எல்லாருக்கும் மிடில் கிளாஸ் பிரெச்சனை பத்தி பேசின எங்க கலைஞர் கோபம் வரும் நு பயபடுரங்க போல. நிச்சயம் ஒவ்வொரு இந்தியன் நும் இதுக்கு அதரவு தெரிவுகனும்
மக்கள் கிட்ட இதை கொண்டு போகாத தமிழ் நாடு ஊடகம் ரொம்ப பெரிய பாவம் பண்ணு து . மக்கள் கிட்ட இதை கொண்டு போகாம ஏமாத்துறது என்ன பொறுத்த வரைக்கும் பெரிய crime இதுக்கு இந்த பணம் ஆசை பிடிச்ச பெருச்சாளிகள் வருத்த படுவாங்க ஒரு நாள்
- அருண்
- April 8, 2011 at 9:29 PM
- சென்னையிலும் (மெரினா கடற்கரை) இரண்டாயிரம் பேருக்கு மேல் கூடிய கூட்டத்தில் நானும் ஒருவன் என்பதில் பெருமை அடைகிறேன்.
- April 8, 2011 at 10:10 PM
- தி அண்ணா ஹசாரே இயக்கம் நமது ஏலேச்ஷுன் நேரத்தில் வந்துள்ளது. தமிழக மக்கள் ஹசறேவுக்கு ஆதரவை தேர்தல் தீர்ப்பாக தருவார்கள். மேலும் தமிழகத்தில் ஊழலுக்கு ஆயுசு நிறைய உண்டு. முதலில் ஊழலை ஆரம்பித்ததும் கடைசியில் முடிப்பதும் ஆகத்தான் தமிழகம் திகழும். அனால் ஊழலுக்கு முற்றிலுமான சாவு மணி தமிழகத்தில் அடிக்கப்படும்.
- April 8, 2011 at 11:55 PM
- கிரி சார் … இப்போ தான் கோவை போயி போராட்டதுல கலந்துகிட்டு வந்துறுக்கன்… 25000 பேர் சார் … சும்மா கோயம்பத்துரே அதிருனுச்சி ல …மேலுகுவர்த்திலாம் ஏத்தினோம்… அங்க பேசுன மேடம் சொன்னாங்க …ஹசரே தாத்தாவிற்கு பின் நிற்க நமக்கு தகுதி இல்ல … நாம எல்லாருமே ஊழல் வாதிகள் தான் னு சொன்னாங்க …மாற்றத்தை நம்மிடம் இருந்தே ஆரமிக்கனும்..
தெய்வம் எப்போதும் மாற்றத்திற்கான தாழ்பளை உள் பக்கமாகவே வைக்கிறார் …
- April 9, 2011 at 2:36 AM
- நான் நெனச்சத நீங்க எழுதி இருக்கீங்க..எப்பவும் நம்ப இந்தியாவோட மற்ற மாநிலங்களிலிருந்து தனிப்பட்டு செயல்படனும் அப்படின்னு கொள்கை எதாவது வச்சிருக்கமா? ஏன் ஹிந்து போன்ற முக்கியமான பேப்பர் எடிட்டர் ந ராம், சோ ராமஸ்வாமி, நம்ம திலகவதி ips எல்லறோம் சும்மா இருக்காங்க?? ஹிந்து முதல் பக்கத்துல தமிழ்நாடு elections எந்த அளவு கேவலமா நடக்க இருக்குன்னு நியூஸ் (43 கோடி பறிமுதல் இப்பவரைக்கும்), அதுக்கு மேல இது.. தமிழன்னு நிமிர்ந்த நன்னடை போய் ஐயோ தமிழன் நான்னு தல குனிய வெச்சுருவாங்க போல இருக்கு..
- April 9, 2011 at 6:53 AM
- தினமலரில் வந்துள்ள முன்னூறுக்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள் உலகம் முழுவதும் இருந்து மகத்தான ஆதரவு கிடைப்பதி உறுதிசெய்கிறது. இடது சாரிகளின் நிர்ப்பந்தத்தால் சென்ற ஆட்சியின் போது தகவல் உரிமைச்சட்டம் ஏழை மக்களின் ஆயுதமாக வந்தது. தற்போது அன்னா ஹசாரே மூலமாக இந்தியாவே ஊழலுக்கு எதிராக அணிவகுக்கும்போது நாமும் அதில் இணையவேண்டும்..இனியும் வாயச்செசொல்லில் வீரராக இருப்பதைக்கைவிட்டு நேரடி நடவடிக்கையில் எகிப்து மக்கள் போல இறங்கவேண்டும்..இன்று திருப்பூரில் கா ந்திய மக்கள் இயக்கத்தின் சார்பாக இரண்டு நாள் உண்ணாவிரதம்.. நானும் கலந்து கொள்கிறேன்..
தற்போதுள்ள அரசியல் வாதிகள்( இடது சாரிகளைத்தவிர) அனைவருமே ஊழல்வாதிகள்.இவர்கள் மீது விசாரனைக்கு ஒத்துக்கொள்வார்களா? போராட்டதை பரவாமல் இருக்க அனைத்து ஆசைவார்த்தைகள், பசுப்பு உத்திரவாதங்கள் என அள்ளி வீசப்போகிறார்கள்..கடைசியில்…..
- April 9, 2011 at 7:19 AM
- I really wanna join this …
- April 9, 2011 at 9:10 AM
- கிரி அவர்களே, இந்திய விடுதலை போராட்டத்தில் முதலில் ஈடுபட்டவர்கள் தமிழர்களே, நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் வீரர்கள் பெருமளவில் தமிழர்களே, அதற்கு பெருமளவில் பொருளுதவி செய்தவர்கள் தமிழர்களே. இந்திய இறையாண்மை, இறையாண்மை என்று இன்று கூச்சல் போடுகிறார்களே, அந்த இந்தியா உருவாவதற்கு முன்னரே அதை வென்றெடுக்கும் போராட்டத்தில் முன்னாள் நின்றவர்கள் தமிழர்கள். தங்கள் குழந்தைகளுக்கு காந்தி நேரு என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். ஆனால் நாடு விடுதலை அடைந்த பிறகு என்ன நடந்தது? ஒட்டு மொத்த அதிகாரங்களும் டெல்லியில் குவிக்கப்பட்டது. இறையாண்மை என்ற பெயரில் சிறுபான்மை மொழிகளை அழிப்பது, அந்த மக்களின் உரிமைகளை பறிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இன்னும் சொல்லப்போனால் விடுதலை அடைவதற்கு முன்னாள் அமைந்த காங்கிரஸ் அரசுகளே அந்த வேலையை தொடங்கின. அதற்கு எதிராக தமிழக மக்கள் பெரும் போராட்டம் நடத்தியதால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. (ஆனால் கத்தி போய் வால் வந்தது வேறு பிரச்சனை) ஆனால் என்ன நடந்தது? தமிழருக்கு எதிரான அனைத்து வேலைகளையும் இந்திய அரசு தீவிரமாக்கியது. தமிழர்களின் ஒவ்வொரு அடிப்படையான உரிமை போராட்டமும் பிரிவினைவாத முத்திரையிடப்பட்டன.
- April 9, 2011 at 9:29 AM
- all our movements including movements against Koodankula Atomic Power Station were criticised as anti-natition. the north indian media those are shouting now (though it is for good) not even turn their eyes from cricket that had been being held at Columbu, while thousands were being killed at Mullivaaikkaal, The support movement held at Tamilnadu was also blocked out. this is just few examples how the northern media behaves when tamils are concerned. More than 500 fihermen in Tamilnadu has been killed so far by the Srilankan Navy. It is peculiar that not even during one single instance Indian Navy was present in that scene. Can anybody give reasonable answer to that? Did anybody in the Northern Media raise the question? Will thay? People of Tamilnadu are now realising that they being isolated. The media those you are blaming are the same which are being used to supress the voice of Tamils. I think you should have mentioned this in your article. the north is ignoring us. so we are doing the same.
- April 9, 2011 at 9:34 AM
- ஊழலுக்கு எதிரான ‘அன்னா’ புரட்சிக்கு வெற்றி.. ‘லோக்பால்’ கோரிக்கையை ஏற்றது அரசு
புதுடெல்லி, ஏப்.8,2011
லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளதால், காந்தியவாதியும் மூத்த சமூகப் போராளியுமான அன்னா ஹசாரேவின் போராட்டத்துக்கு முதல் வெற்றி கிடைத்தது.
அன்னா ஹசாரே வெள்ளிக்கிழமை இரவு தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், மக்கள் முன்பு சில வார்த்தைகள் பேசிய அவர், “அரசு முறைப்படி, நமது உடன்பாடு தொடர்பாக அறிவிக்கையை அதிகாரப்பூர்வமா வெளியிட்டு, அந்த நகல் என் கையில் கிடைக்கும் வரை எனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்,” என்றார்.
பின்னர் தனது சார்பில் பேச்சு நடத்தியவர்களிடம் இருந்து உறுதியான தகவல் வந்த பிறகு, தனது உண்ணாவிரதத்தை சனிக்கிழமை காலை முடித்துக் கொள்வதாக அவர் அறிவித்தார்.
“இது மக்களுக்குக் கிடைத்த வெற்றி,” என்றார் அன்னா ஹசாரே.
முன்னதாக, ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை இயற்றுவதற்கான வரைவுப் பணியில் சமூக ஆர்வலர்களைக் கொண்ட சிவில் சொசைட்டி இடம்பெற அரசு ஒப்புதல் தெரிவித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்படி, ‘சமூக ஆர்வலர்கள் 5 பேரும், மத்திய அரசு சார்பில் 5 பேரும் இந்தக் கூட்டுக் குழுவில் இடம்பெறுவர். அதேபோல், இந்தக் கூட்டுக் குழுவுக்கு சமூக ஆர்வலர்களில் ஒருவர் தான் தலைமை ஏற்க வேண்டும் என்ற அன்னா ஹசாரேவின் கோரிக்கையும் ஏற்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கூட்டுக் குழுவில் சிவில் சொசைட்டி சார்பில் ஒரு தலைவர், மத்திய அரசு உறுப்பினர்கள் சார்பில் ஒரு தலைவர் என இரு தலைவர்கள் நியமிக்கப்படுவர். அதன்படி, சிவில் சொசைட்டிக்கு சாந்தி பூஷனும், அமைச்சர்கள் குழு சார்பில் பிரணாப் முகர்ஜியும் தலைமை வகிப்பார்கள்.
மேலும், சிவில் சொசைட்டி சார்பில் இடம்பெறும் 5 உறுப்பினர்களில், அன்னா ஹசாரேவும் ஒருவர். அதேபோல், லோக்பால் மசோதா வரைவுப் பணிக்காக அமைக்கப்படுகின்ற கூட்டுக்குழு தொடர்பாக அரசு முறைப்படி அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிடவும் ஒப்புக்கொள்ளப்பட்டது,’ என அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் வட்டாரங்களின் மூலம் தகவல்கள் வெளியாகின.
அரசை உலுக்கிய 4 நாட்கள்…
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.
இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவை விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு அதிகபட்ச அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது.
மாறாக, ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.
இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், அன்னா ஹசாரே.
லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக சமூக ஆவர்லர்கள் கொண்ட குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.
நாள் 1…
டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஏப்ரல் 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டத்தைத் தொடங்குகிறார் அன்னா ஹசாரே. ஊடகங்களின் கவனம் திரும்புகிறது. எதிர்கட்சிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆதரவு தெரிவிக்க தொடங்குகின்றனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட காங்கிரஸ், ஹசாரேவின் இந்த உண்ணாவிரதம் தேவையற்றது என்று விமர்சித்தது.மக்களை திசைத் திருப்பும் நோக்கத்துடன் தன்னை காங்கிரஸ் கட்சி விமர்சிப்பதாக சாடினார் ஹசாரே.
நாள் 2…
ஊழல் தடுப்பு மசோதாவுக்கான வரைவுப் பணியில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் குழுவின் மீது தனது அதிருப்தியை வெளியிட்ட ஹசாரே, ‘மகாராஷ்டிராவில் அதிக அளவில் நிலம் வைத்துள்ள சரத் பவார், லோக்பால் மசோதாவை உருவாக்கும் குழுவுக்கு தலைவராக இருப்பது நியாயமில்லை,” என்று முழங்கினார்.
அதன் தொடர்ச்சியாக, அமைச்சர்கள் குழுவில் இருந்து விலகுவதாக சரத் பவார் அறிவித்தார். ஆனால், அன்னாவோ, ‘சரத் பவார் தனது பதவியையே ராஜினாமா செய்வதுதான் நியாயம்,’ என்றார்.
அன்னாவுக்கு ஆதரவு பெருகியது. சமூக ஆர்வலர்களுடன், சமூக அக்கறை கொண்ட பிரபலங்களும் தலைவர்களும் நேரில் வாழ்த்து தெரிவிக்கத் தொடங்கினர்.
அன்னாவுக்கு பிஜேபி ஆதரித்தது குறித்து சர்ச்சை எழுந்தது. சங்பரிவார், ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் தான் ஹசாரே இயங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை முற்றிலும் மறுத்த ஹசாரே, ‘பிஜேபி தொடங்கியுள்ள ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆதாய நோக்கு கொண்டது. நான் தேசிய அளவில் போராட்டத்தைத் தொடங்கிய பிறகு, அதில் பிஜேபி ஆதாயம் அடையப் பார்க்கிறது. எனினும், எந்த அரசியல் கட்சிக்கும் அவர்கள் விருப்பப்படி செயல்பட சுதந்திரம் உள்ளது,’ என்றார்.
மேலும், பிஜேபி அரசில் ஊழலுக்கு எதிராக நான் போராடியபோது, என்னை காங்கிரஸ் கட்சி ஆதரித்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஹசாரேவின் இந்தப் போராட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, ஊழலுக்கு எதிரான மசோதா குறித்த கருத்துகளை பெறுவதில் அரசு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். ஹசாரேவும் லோக்பாலும் தலைப்புச் செய்திகளாகின.
நாள் 3…
அன்னா போராட்டத்தின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, அவருடன் பேச்சு நடத்த தயார் என்று அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக, சுவாமி அக்னிவேஷ் மற்றும் அரவிந்த் கஜ்ரிவால் ஆகிய சமூக ஆர்வலர்களுடன் மத்திய அமைச்சர் கபில் சிபல் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
தோல்வியில் முடிவடைந்த இந்த பேச்சுவார்த்தை குறித்து நிருபர்களிடம் பேசிய கபில் சிபல், “பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவாக பேசினோம். இரண்டு அம்சங்களால் மட்டுமே உடன்பாடு எட்ட முடியாமல் போனது.
லோக்பால் மசோதா வரைவுப் பணிக்கான கூட்டுக் குழு தொடர்பாக அரசு அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிடுவது, அந்தக் குழுவுக்கு ஹசாரேவை தலைமையேற்க வைப்பது ஆகிய கோரிக்கைகளே சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நாங்கள் மீண்டும் வெள்ளிக்கிழமை கூடி பேச்சு நடத்தி சுமுக முடிவுக்கு வருவோம்,” என்றார் கபில் சிபல்.
லோக்பால் மசோதா வரைவுப் பணிக்கான கூட்டுக்குழுவில் ஹசாரே தலைமையேற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்.
ஆனால், “உங்களுக்குத் தேவையெனில், அந்தக் குழுவில் ஓர் உறுப்பினராகவோ அல்லது ஆலோசகராகவோ இருக்கிறேன். மாறாக, அதற்குத் தலைமையேற்க முடியாது,” என்றார் ஹசாரே.
இந்த விவகாரம் மேலும் தீவிரமடையாமல் இருக்க ஆலோசனைகளை நடத்தியது மத்திய அரசு.
உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்த கோரிக்கையை, ஊழலுக்கு எதிராக போராடி வரும் மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நிராகரித்தார்.
நாள் 4…
அன்னா ஹசாரே நான்காவது நாளாக வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்தை தொடர்ந்த நிலையில், டெல்லியின் ஜந்தர் மந்தரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் குவிகின்றனர்.
அன்னா ஹசாரேவின் போராட்டம் குறித்து நாடு முழுவதும் விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. டெல்லி, சென்னை, கோல்கத்தா, மும்பை, பெங்களூர் என அனைத்து நகரங்களிலும் மக்கள் கூடி, ஆதரவுக் கரம் நீட்டுகின்றனர்.
மத்திய அமைச்சர் கபில் சிபல் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. போராட்டக் குழுவுக்காக காத்திருப்பதாக அவர் தரப்பு கூறுகிறது. அதேவேளையில், கபில் சிபலுக்காக காத்திருப்பதாக அன்னா ஹசாரே சார்பில் பேச்சு நடத்தும் சுவாமி அக்னிவேஷ் குழு தெரிவிக்கிறது.
இதையடுத்து, ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை வலுவாக இயற்றுவதற்கு மக்கள் பிரதிதிகளுடன் கூடிய கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்க மறுப்பதால், நாடு தழுவிய அளவில் வரும் 13-ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார், அன்னா ஹசாரே.
ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு, அன்னா ஹசாரே கடிதம் அனுப்புகிறார்.
இந்த விவகாரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்துகிறார்.
அன்னாவுக்கு நாடு தழுவிய அளவில் பெரும் ஆதரவு குவிந்து வரும் நிலையில், இப்பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.
சமூக ஆர்வலர்களுடன் மத்திய அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது. பின்பு சிபல், மொய்லி, குர்ஷீத் மூவரும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கின்றனர்.
இறுதியில், அன்னா ஹசாரேவின் சமூக ஆர்வலர்கள் குழு – மத்திய அரசு இடையே உடன்பாடு ஏற்படுகிறது.
ஆனால், அரசு அதிகாரப்பூர்மாக அறிவிக்க வெளியிட தாமதித்தால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை சனிக்கிழமை காலை வரை தொடர வேண்டியதாகிவிட்டது.
ஊழலுக்கு எதிரான விடுதலைப் போரில் அன்னா ஹசாரேவுக்கு முதல் வெற்றி கிட்டியிருக்கிறது என அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முதல் வெற்றி உறுதி செய்யப்பட்டதால், ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வரை ஹசாரே தனது போராட்டத்தை தொடர்வார் என்று பெருமிதம் பொங்க கூறுகின்றனர், அன்னாவின் ஆதரவாளர்கள்!
- April 9, 2011 at 9:36 AM
- அன்னாவுக்கு முழு ஆதரவு: ஜெயலலிதா
சென்னை, ஏப்.8,2011
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவையும், அதை நிறைவேற்றப் போராடி வரும் அன்னா ஹசேராவையும் தாம் முழுமையாக ஆதரிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார்.
இதுகுறித்து இன்று அவர் அளித்த பேட்டி ஒன்றில், “ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவுக்கு என் முழு ஆதரவு உண்டு. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தேவை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால், அத்தகைய சட்டங்களையும் முழுமையாக நிலைநாட்ட மத்தியில் ஒரு வலிமையான அரசும், ஒரு வலிமையான பிரதமரும் இருக்க வேண்டும். தற்போது நம்மிடம் உள்ள பிரதமர் அமைதியும் செயலற்ற தன்மையுடன் தான் இருக்கிறார். அவருக்கு தேச நலனில் அக்கறை இல்லை.
ஊழலால் நாட்டின் பொருளாதாரத்துக்கு மட்டுமன்றி தேச பாதுகாப்புக்கும் ஒற்றுமைக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. அதனால், மத்தியில் நமக்கு ஒரு வலிமையான அரசும் வலிமையான பிரதமரும் தேவை,” என்றார் ஜெயலலிதா.
முதல்வர் கருணாநிதி வேண்டுமென்றே ஊழல் குற்றச்சாட்டுகளை தன் மீது அடுக்குவதாக கூறிய அவர், “எனக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் 12 வழக்குளில் நான் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதனால் மேம்பாக்காக என் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்துவதை மறுக்கிறேன். நான் ஊழல் செய்யவில்லை. என் கட்சியும் ஊழல் செய்யவில்லை,” என்றார் அவர்.
மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட இமாலய ஊழல்களின் பின்னணியில் இருப்பது திமுகவே என்றார் ஜெயலலிதா.
- April 9, 2011 at 9:54 AM
- நம்ம தமிழ் நாட்டு மக்களை அரசியல் வாதிகளும், பத்திரிகைகாரர்களும், தமிழ் தொலைக்காட்சிகளும் சுயமாக சிந்திக்க விடாமல் வெறும் பொழுது போக்கு நிகிழ்சிகளை மட்டுமே காண்பித்து மக்களை முட்டாளாக ஆக்கிவிட்டனர். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட மீடியாக்கள் தரமான உண்மையான செய்திகளை வழங்க வேண்டும். அப்போதுதான் ஒரு ஊழழற்ற இந்தியாவை நாம் காண முடியும்.
வந்தே மாதரம்…
ரமேஷ் பஹ்ரைன்
- April 9, 2011 at 1:43 PM
- Mr.Dinmani Editor First U ask to U R wellwisher Mr.Jayalaitha after U ask to Rajini and Kamal ok we knowing about U R news paper
- April 9, 2011 at 3:31 PM
- தமிழ்நாடு பொலிடிகல் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு சாட்சி இல்லை.நாம் பீகாரைவிட முன்னேறுகிறோம் என்று தவறாக வழிநடதபடுகிறோம் என்பதுதான் உண்மை.ஏனென்றல் ஊழல்தான் இங்கு பிரதானம்.அதை மையமாக வைத்துதான் இப்போதைய பிரசாரம்.அனால் வைகோ,தமிலருவிமனியன் ,போன்ற பிரபலங்கள் இதற்கு குரல் கொடுக்காதது எனக்கு வருத்தம்தான்.சமுதாய முநேற்றதிர்க்காக போராடும் மனிதர்கள் இந்த விசயத்தில் எதுவும் பேசாமல் இருப்பது எனக்கு மட்டுமல்ல ,அப்படிப்பட்டவர்களை நேசிப்பவர்களுக்கும் இது ஏமாற்றம்தான்.ஈழ பிரச்சனைக்கு குரல் கொடுத்தவர்கள்,அதற்காக இரத்தம் சிந்தியவர்கள்,போன்றோர்கள் இது பற்றி வாய் திறக்காதது அவர்களும் வோடிர்க்காக இதை செய்கிறார்களோ என என்ன தோன்றுகிறது.அன்னா ஹசரவிர்கு என் ஆதரவு எப்பவும் உண்டு.
- April 9, 2011 at 3:47 PM
- பத்திரிக்கை பற்றி இன்கு நான் சொல்லியாக வேண்டும்.அவர்களை மக்கள் நம்பும் வரைதான் அந்த பத்திரிக்கைகள் மக்கள் ஊடே வளம் வர முடியும்.கடந்த லோக் சபை தேர்தலுக்கு முன் ஒரு முக்கியமான,வாரம் இரு முறை வெளிவரும் அரசியல் பத்திரிகை ஒரு கட்சி சார்புடையதாக எழுதி வந்தது.அப்போது அதன் விற்பனில் கடும் வீழ்ச்சி.அதை உணர்ந்துகொண்ட அப்பத்திரிகை தற்போது நடுநிலையாக செய்திகளை வெளியிடுகிறது.அதேபோல் இப்போது தினமர் செய்திகள் பலரை புன்படுதுவதகவும்,சிலரை திருப்தி படுதுவதர்க்க்காகவும் செய்திகளை வெளியிடுகிறது.இதற்கு முன்பு வேறு முத்திரை குத்தப்பட்டது .அந்த முத்திரையை மாற்றுகிறேன் பேர்வழி என்று அது வெளியிடும் செய்திகள் நடுநிலனை வகிக்கவேண்டும்.அல்லது தினதந்திபோல் யார்க்கவது ரூ.1000 பரிசு கொடுத்துவிட்டு முழு பக்கத்திற்கும் செய்தி என்ற போர்வையில் விளம்பரம் தேடாமல் இருந்தால் சரி.
- April 9, 2011 at 9:20 PM
- We have the mother of corruption and father of corruption, and Janiwalker trying to lead Tamil nadu. We have all movie men and women spoiling kids and adults and truing to get as much support as they can from these political party for their benefit (Actor Vijay’s father is latest addition in the garbage). We have media men and women giving wrong information to the people about these corrupted people. Of course we have people looking for freebies. What we can do. Just go with the stream
- April 9, 2011 at 10:48 PM
- அன்ன ஹசாரே அவர்களின் செயல் சரித்திர முக்கியதுவம் வாய்ந்த ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
அதே சமயம் தமிழ் நாடு என்பது இந்தியாவில் ஒரு தனி நாடாகவே இருந்து வருகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்
இன்றைய தமிழ் இளைஞர்கள் ஒன்றை மறந்துவிட கூடாது, இதே புரட்சி தமிழகத்தில் நடந்திருந்தால் எந்த வடநாட்டவன் நமக்கு குரல் கொடுதிருப்பன்? ஒரே காரணம் தமிழன் முன்னுக்கு வர கூடாது என்பதுதான்.
கடந்த காலத்தில் வட இந்தியாவில் நடந்த இயற்கை அழிவிற்கும் சரி, தீவிரவாத தாக்குதலுக்கும் சரி தமிழர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள்
ஆனால் எந்த தமிழக பிரச்சினைக்கு எந்த மாநிலத்தவன் நமக்கு ஆதரவு தந்தான்?
தமிழர்களின் நாகரிகம் ஒன்றும் நீங்கள் சொல்வது போல் கீழ்த்தரமானது அல்ல
ஆண்டாண்டு காலமாக உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, சொந்த நாட்டுக்குள்ளயே தனித்து விடப்பட்ட ஆறாத வடுவினால்தான் அவனால் எந்த வடநாட்டு நற்செயல்களையும் வெளிப்படையாக ஆதரிக்க மனமுவக்க வில்லை.
இந்த ஆதரவை கொஞ்சம் காவிரி பிரச்சினையிலும் முல்லை பெரியார் பிரச்சினையிலும், மீனவர் பிரச்சினையிலும் அளித்துவிட்டு அப்புறம் வந்து கேள்வி கேளுங்கள், அது சரி
- April 10, 2011 at 10:10 PM
- என்ன ஒரு அற்புதமான விமர்சனம். பேஷ் பேஷ் ரொம்ப நல்ல இருக்கு
- April 11, 2011 at 10:14 AM
- நாம் இந்த போரட்டத்திற்கு ஆதரவு அளிக்காவிட்டால் நிச்சியமாக வரலாறு நம்மை மன்னிக்காது என்பது உறுதி.வட நாட்டினர் நமக்கு ஆதரவு அளிக்காவிட்டால் என்ன?நாம் அவர்களை போல் அல்ல என்று இப்பொது நிருபிபோமே!
அன்புடன்
மணிகண்டன்/சீனா
- April 11, 2011 at 12:45 PM
- கிரி….
இங்கு பெரும்பாலும் கூட்டம் கூட வேண்டுமென்றால் பிரியாணி, குவாட்டர் தர வேண்டும்… அப்படித்தான் நம்மவர்களை பழக்கப்படுத்தி விட்டார்கள்… இவர்களுக்கு, இந்த ஊழல் ஒரு பெரிய விஷயமே அல்ல..
இவ்வளவு பெரிய ஸ்பெக்ட்ரம் (ரூ.1,76,000 கோடிகள்) நடந்த பின், அதே கொள்ளைக்கூட்டம் எல்லா இடங்களுக்கும் சென்று சிறிதும் வெட்கமில்லாமல் ஓட்டு கேட்கிறது… கூடவே பெரிய அளவிலான அல்லக்கை கும்பல், சில காமெடி பீஸ்கள் என்று…
இங்க போய், நீங்க சொல்றது மாதிரி சீறி எல்லாம் எழச்சொன்னா, எப்படி கிரி?
எவ்ளோ அமவுண்ட் வேணும்னா அடிச்சுக்கோ… எனக்கு குவாட்டர், கோழி / மட்டன் பிரியாணி, கை செலவுக்கு 2,000 இல்லன்னா 5,000 தந்துடு… அவ்ளோ தான்…
சினிமா தொழிலையே கபளீகரம் செய்து வைத்துள்ளதால், சினிமா சார்ந்தவர்கள் யாரும் அன்னா ஹசாரே அவர்களுக்கு துணை நிற்பதை விடுங்கள், வாய்ஸ் கூட தர முடியவில்லை…
விரைவில் மாற்றங்களை எதிர்பார்ப்போம்…
- April 11, 2011 at 12:55 PM
- மிகவும் அற்புதமா எழுதி இருக்கீங்க கிரி சார்…
- April 11, 2011 at 12:57 PM
- மிகவும் அற்புதமா எழுதி இருக்கீங்க கிரி சார்…உங்க அனுமதி இல்லாம என்வழி கமெண்ட்-ல இந்த லிங்க் கொடுத்து இருக்கேன்… தப்பா இருந்த மன்னிக்கணும் – சுவாமி
- April 11, 2011 at 1:30 PM
- April 11, 2011 at 4:04 PM
- <> அப்படியானால் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் இந்திய மக்கள் இல்லை என்கிறீர்களா? உங்கள் கருத்தை வெளியிடுங்கள். தேவையற்ற தவறான ஒப்பீட்டைத் தெரிவிக்காதீர்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! /எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
அன்புள்ள கிரி, உங்களின் மறுமொழியை எதிர்பார்க்கவில்லை. நல்ல கருத்துகளை எழுதும் உங்களுக்கு ஏன் பொறுமை இலலை. அதற்குப் பின்வரும் வரிகளுக்கு மாற்றாக அல்லவா நீங்கள் எழுத வேண்டும். ஒரு குறிப்பிட்டகருத்து பற்றிய பதிவிற்கு ஏன் நீங்கள் ஒட்டுமொத்த மறுப்பாக எடுத்துக் கொள்கிறீர்கள்? இதே போன்ற கருத்து முன்னரே மற்றும் சிலரால் எழுதப்பட்டு படிக்கப்பட்டதால் நான் மாறுபட்ட இடத்தைப் பற்றி மட்டும் குறிப்பிட்டேன். பாராட்டை மட்டும் எதிர்பார்க்காமல் மாற்றுக்கருத்தையும் எதிர்பாருங்கள். தொடர்க உங்கள் தொண்டு! வளர்க உங்கள் பணி!அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக