வியாழன், 14 ஏப்ரல், 2011

Dinamani editorial about the tears of the elephantதலையங்கம்: யானையின் கண்ணீர்!

முன்னாள் முதல்வர் யானையின் மீதுதான்  கவனம் செலுத்தினார் எனப் பேசியவர்களுக்கு மறுமொழியாக இத்தலையங்கம் அமைந்துள்ளது. எனினும் நன்று. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / 
எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!
தலையங்கம்: யானையின் கண்ணீர்!


தேர்தல் காலத்தில் நமது பார்வையில் படாமல் விடப்பட்ட பல விஷயங்களில் ஒன்று யானைகளால் தாக்கப்பட்டு இறந்த கிராம மக்களின் துயரம். கடந்த ஒரு மாதமாக ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்ததுடன், தோட்டத்துக்குக் காவலாக இருந்த மனிதர்களை மிதித்தும் தூக்கி வீசியும் கொன்று வருகின்றன.அண்மையில் சூளகிரி நகருக்குள்ளாகவே நடந்து சென்று மக்களை யானைக்கூட்டம் அச்சுறுத்தியது. குருபரபள்ளி அருகே மாந்தோப்புக்குக் காவல் இருந்த தாத்தாவும் பேரனும் கொல்லப்பட்டனர். இப்போது, தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் ஒரு விவசாயியை யானை மிதித்துக் கொன்றுள்ளது. தேர்தல் அல்லாத சாதாரண நாள்களில் இத்தகைய மரணங்கள் நேரிட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், யானைகளை விரட்டும் நடவடிக்கையை விரைவுபடுத்தவும் செய்யும். ஆனால், தேர்தல் பணியில் அனைத்து அதிகாரிகளும் மும்முரமாக இருப்பதால், இத்தகைய துயர்துடைப்புப் பணிகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன. வனத்துறை சார்பில் வெடிகள் வைத்து யானைகள் விரட்டப்பட்டாலும், அவை வெடியோசைக்குப் பழகிவிட்டன. அச்சப்படுவதே இல்லை. மேலும், யானைகள் கடக்க முடியாதபடி பள்ளம் தோண்டும் திட்டங்கள் சில இடங்களில் பெயரளவில் செய்யப்பட்டாலும், அவை பயனளிக்கவில்லை.ஆண்டுதோறும், யானைகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதால் 5 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும், யானைக்கும் மனிதர்களுக்குமான இந்த அத்துமீறலில் ஆண்டுதோறும் சுமார் 400 மனிதர்களும், 150 யானைகளும் பலியாவது நிகழ்கிறது என்கிறது வனத்துறையின் கணக்கெடுப்பு. தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின் எல்லைகள் சந்திக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில்தான் அதிக அளவு யானைகள் உள்ளன. தோராயமாக 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்தப் பகுதியில், சுமார் 8,500 யானைகள் உள்ளன. ""யானைகள் தாழ்வாரம்'' எனப்படும் யானைகள் நடமாடும் பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்வதால்தான் யானைகள் தங்கள் வழக்கமான பாதையைவிட்டு விலகி வரவும், இதனால் மனிதர்களுடன் பிணக்கு ஏற்படவும் நேர்கிறது. யானைகளின் வாழ்விடப் பகுதிக்குள் நாம் நுழையாமல் இருந்தால், யாருக்குமே பாதிப்பில்லை. ஆனால் அதைச் செய்ய முடியாததற்குச் சில காரணங்கள் உள்ளன.யானைகள் நடமாடும் பகுதி முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது முதல் காரணம். இதில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அல்ல. ஆகவே, இங்கே மனிதர்கள் சாகுபடி செய்ய ஏற்கெனவே அரசின் அனுமதியைப் பெற்று, பயிர் செய்து வருகிறார்கள்.அடுத்ததாக, இந்தப் பகுதிகளில் தேயிலை, காப்பித் தோட்டத் தொழில்களும் உள்ளன. ஆகவே இவர்கள் யானை நடமாடும் பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். இதனால் யானைக்குத் தேவையான உணவு, நீர் இரண்டுக்கும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த யானைகள் ஒரே இடத்தில் நிலையாக வாழ்வன அல்ல. அவை இனப்பெருக்கம் நடத்திக்கொண்டே மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து வந்து மீண்டும் திரும்புகின்றன. யானைகள் நடமாடும் பகுதி அல்லது "எலிபென்ட் காரிடார்' எனப்படும் முழு பரப்பையும் அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதுதான் இதற்கான முதல் நடவடிக்கையாக இருக்க முடியும். அதைச் செய்வதற்கு தேசிய யானைகள் பாதுகாப்பு ஆணையத்தை உருவாக்க வேண்டும். அவ்வாறு ஆணையம் ஏற்படுத்தப்பட்டால், தற்போது பயிர் செய்வோர், தேயிலை, காப்பித் தோட்டம் வைத்திருப்போர் தங்கள் தொழிலைச் செய்யாமல் வெளியேற வேண்டியிருக்கும். இதற்காக மத்திய அரசு அவர்களுக்கு இழப்பீடு, மாற்றிடம் வழங்க நேரிடும். மேலும் யானைகளுக்கான வாழ்விட வசதிகளை மேம்படுத்த வேண்டிய பணிகளையும் இந்த ஆணையம் செய்யும். இதற்கெல்லாம், பத்தாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி தேவைப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கு அரசியல் உறுதிப்பாடு தேவை. அதுதான் தற்போது இல்லாமல் இருக்கிறது.புலிகள் காப்பகம் ஏற்படுத்தி, அதற்கான நடவடிக்கைகள் எடுத்தபோது, இந்தியாவில் குறைவாகக் காணப்பட்ட புலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், இந்தத் திட்டத்தைக் காட்டி ஆதிவாசிகள் அவர்கள் வாழிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். அதேபோன்று யானைகள் பாதுகாப்பு ஆணையத்திலும் நிகழலாம் என்ற அச்சம் இருக்கிறது.யானைகளை உணவு உண்ணவிடாமல் விரட்டும்போதுதான் மனிதர்கள் தாக்கப்படுகிறார்கள் என்பதையும், யானை மாமிசம் உண்பதில்லை என்பதையும் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தின்கீழ் குடியிருப்புகளை வெளியேற்றாமல், அவர்கள் வாழ்க்கைக்கு வேறு தொழில்களும், அவர்கள் விரும்புகிற பட்சத்தில் பயிர்செய்ய மாற்றிடமும் அளிக்கலாம். மேலும், குடியிருப்புகளைக் காட்டிலும் அதிக அளவு யானைத் தாழ்வாரத்தை ஆக்கிரமித்திருப்போர் தோட்டத் தொழிலதிபர்களே. அரசியல்வாதிகளின் தயக்கத்துக்குக் காரணமும் இதுதான். ஏற்கெனவே தந்தங்களுக்காக ஆண் யானைகள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுவிட்டன. தற்போது யானைகள் நடமாடும் பகுதியைப் பாதுகாக்கத் தவறினால், புலிகள் அருகிய உயிரினமாக மாறியதுபோல, யானைகளும் எண்ணிக்கையில் குறைந்துவிடக்கூடிய அபாயம் உள்ளது. யானைகள் எந்த அளவுக்கு அதிக எண்ணிக்கையில் உள்ளனவோ அந்த அளவுக்குக் காடும் பல்லுயிர்ப் பெருக்கமும் சரிவிகிதத்தில் நடந்துகொண்டே இருக்கும். உலகம் மனிதனுக்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. ஏனைய உயிரினங்களுக்கும் நம்மைப்போல சமஉரிமை உண்டு. இயற்கையைச் சீண்டிப் பார்க்காமல் இருப்பதுதான் மனித இனத்துக்கு நல்லது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக