வியாழன், 14 ஏப்ரல், 2011

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏமாற்றம்

அனைவரையும் வாக்களிக்கச் சொல்லும் தேர்தல் ஆணையம் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அனைவர் பெயர்களும் வாக்காளர்  பட்டியலில் தவறாமல் இடம் பெற்றிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாப்பூர் தொகுதியில்   எங்கள் வீட்டிலுள்ள நால்வருக்கும்  - அடையாள அட்டைகள் இரு்பபினும் - வாக்காளர் பட்டியலில் பெயர்கள் காணாமல் போய்உள்ளன. வேறு சிலரும் இவ்வாறு தெரிவித்தார்கள். எனவே, தேர்தல் ஆணையம் இப்பொழுது முதலே அனைவர் பெயரும்  வாக்காளர் பட்டியலில் இடம் பெறவும் இடம் பெற்ற பெயர்கள் நீக்கப்படும் முன்னர் நீக்கப்டுவதை ஆராயவும்  உரியவர்களுக்குத்தெரிவித்து விவரம் கேட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் 
/ தமிழே விழி! தமிழா விழி! / எழுத்தைக் காப்போம்!  மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! 


 
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏமாற்றம்


செங்கல்பட்டு, ஏப்.13: நடைபெற்ற தேர்தலில் செங்கல்பட்டு நகரில் மட்டும் பல வார்டுகளில் பல ஆண்டுகளாக வசித்து வரும் வாக்காளர்களின் பெயர்கள் ஒட்டுமொத்தமாக பட்டியலில் இடம்பெறாததைக் கண்டு வாக்காளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். செங்கல்பட்டு அண்ணாநகர், அழகேசநகர், மேட்டுத் தெரு மலைப்பூங்கா, வேதப்பர் தெரு, மசூதி தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் பல ஆண்டுகளாக அதே இடத்தில் வசித்து வந்தும் தங்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது திட்டமிட்ட செயல் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.குறிப்பாக அதிமுகவிற்கு ஆதரவளிக்கும வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக வாக்களிக்கும் தகுதியை இழந்த அவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.மேலும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியில் அந்தப் பகுதியின் வார்டு உறுப்பினர்கள் தலையீடு காரணமாகவே இது போன்று நடந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.வாக்காளர் பெயர் பட்டியலில் இடம் பெறுவதற்கான வழிமுறைகளை தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தும் இது போன்ற குறைபாடுகளுக்கு காரணம் யார் என்பது தங்களுக்குப் புரியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். இதுஒருபுறம் இருக்க புதன்கிழமை குறிப்பாக தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று ஆட்கள் கூட்டம்கூட்டமாக சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் லாரிகளில் பயணம் செய்வதை பார்க்க முடிந்தது. இதுவரை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் நாளன்று இதுபோன்று ஏராளமானோர் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் தொடர்ந்த அழைத்துச் செல்வது வாக்களிக்கவா அல்லது பஸ் கிடைக்காததால் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காகவா என்பது தெரியவில்லை.இந்த லாரிகள் எங்குச் செல்கின்றன என்பதும் அதில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பதும் மக்களுக்குப் புரியாத புதிராக இருந்தது.காக்களூர் ஊராட்சியில்...காக்களூர் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 12 வாக்குச் சாவடிகளில் அப்பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் கடும் அதிருப்தியில் சென்றனர். திருவள்ளூரை அடுத்த பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட காக்களூர் ஊராட்சியில் உள்ள 5 வார்டுகளுக்கு காக்களூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 12 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு காலை 7.30 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களிக்க காத்திருந்தனர். 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியவுடன் விறுவிறுப்பாக பதிவு நடைபெற்றது. இதனிடையே இங்குள்ள பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் பலர் அதிருப்தியுடன் வாக்குச் சாவடி அலுவலர்களிடம் தகராறு செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டிஎஸ்பி பாலச்சந்திரன் அங்கு வந்து மக்களை சமாதானம் செய்தார். மேலும் சில மாதங்களாக ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம் என முக்கிய அலுவலகங்களில் வாக்காளர்கள் பெயர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போதே பார்த்திருந்தால் இதுபோல் ஏமாற்றம் அடைவதை தவிர்த்திருக்கலாம். இனிமேல் எதுவும் செய்ய முடியாது என பெயர் இல்லாத அனைவரையும் திருப்பி அனுப்பினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காக்களூர் ஊராட்சிக்கு உட்பட்ட 4 வார்டு வாக்குச் சாவடியில் ஓட்டுப் பதிவு மந்தமாக இருந்தது. பகல் 11 மணியளவில் வாக்குச் சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. அப்போது அங்கு இருந்த வாக்குச் சாவடி அலுவலர்கள் தாங்களாகவே இயந்திரத்தில் ஓட்டு போடுகிறார்கள் என பூந்தமல்லி தொகுதி இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் தேன்மதி தேர்தல் அலுவலர் சித்திரசேனனிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து பூந்தமல்லி தேர்தல் அலுவலர் சித்திரசேனன் நேரில் வந்து வாக்குச் சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை, பெறப்பட்டுள்ள வாக்காளர் அடையாளச் சீட்டு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார். பின்னர் அங்கு முறைகேடுகள் எதும் நடைபெறவில்லை. தேவையென்றால் பூத் ஏஜென்டுகளும், வேட்பாளர்களும் கணக்கு பார்த்துக் கொள்ளலாம் என கூறிவிட்டுச் சென்றார். இதனால் அந்த வாக்குச் சாவடியில் சலசலப்பு ஏற்பட்டது.கடலூரில் முற்றுகையிட்ட வாக்காளர்கள்கடலூரில் தொகுதி வாக்காளர் பட்டியலில் ஏராளமானோர் பெயர் விடுபட்டதால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். கடலூர் தேவனாம்பட்டினத்தில் மீனவர்களும், வன்னியர்களும் அதிகமாக வசிக்கிறார்கள். இங்குள்ள வாக்குச் சாவடிகளில் 1,840 பேருக்கு வாக்களிக்க வாய்ப்பு இல்லாமல், பட்டியலில் பெயர்கள் விடுபட்டு இருந்ததாகக் குற்றம்சாட்டினர். இதனால் அங்குள்ள தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 3 சாவடிகளில் வாக்குப் பதிவு சிறிது நேரம் தடைபட்டது. அங்கு கூடிய 1000-க்கும் மேற்பட்டோர் (மீனவர்கள்) வாக்குச்சாவடி முன்பு கூடி, நுழைவாயிலை இழுத்து மூடினர். உடனடியாக போலீஸôர், தேர்தல் அலுவலர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களையும் அவர்களது வாகனங்களையும், வாக்காளர்கள் முற்றுகையிட்டனர்.சாலை மறியலிலும் ஈடுபட்டனர். மக்களவைத் தேர்தலில் வாக்களித்த தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து வேண்டுமென்றே நீக்கப்பட்டதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். கடலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், கோட்டாட்சியர் முருகேசன், வட்டாட்சியர் அசோகன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு லேப்டாப் கொண்டு வரப்பட்டு, இணையதளத்தில் இருந்து மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலும், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலும் பதிவிறக்கம் செய்யப்பட்டு, ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. இறுதியாக சுமார் 120 பேர் வாக்களிப்பதில்தான் பிரச்னை என்று கண்டறியப்பட்டது. இதுகுறித்து கோட்டாட்சியர் முருகேசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2,860 பேருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்பது தவறு. இங்குள்ள பலர் சுனாமிக்கு பிறகு இடம் பெயர்ந்துள்ளனர். பலர் இறந்துள்ளனர். பலர் இங்கும் சுனாமி குடியிருப்புகளிலுமாக வசிக்கிறார்கள். இங்கு பெயர் இல்லா விட்டால், வேறு பகுதிகளில் பெயர் இருக்கும். இப்பிரச்னை அரசியல் ஆக்கப்பட்டு மிகைப்படுத்தப்பட்டு விட்டது என்றார். இறுதியாக வாக்காளர் பட்டியில் பெயர் இடம்பெற்றவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். எனினும் அ.தி.மு.க.வினர் கூறுகையில் வேண்டுமென்றே பலரது பெயர்களை, திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் நீக்கி விட்டதாக குற்றம்சாட்டினர். இப் பிரச்னை காரணமாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. வாக்குப் பதிவு முடிந்து மாலையில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் போதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக