வியாழன், 23 செப்டம்பர், 2010

பெரிய கோயிலின் மறு வடிவம்!


தஞ்சாவூர், ​​ செப்.​ 22:​ தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி அமைக்கப்பட்டு வரும் மேடை பெரிய கோயிலின் வடிவமோ என வியக்கும் வகையில்,​​ மரக்கட்டைகளைக் கொண்டு சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது.​ ​ ​ ​ கலைகளின் பெட்டகமாக விளங்கும் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சோழ மண்டலத்தின் தலைநகராம் தஞ்சையில் புதன்கிழமை தொடங்கியது.​ 5 நாள் நடைபெறும் இந்த விழாவில் தமிழகம் மட்டுமல்லாது,​​ பிற மாநில மக்களும் கண்டு ரசிக்கும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.​ ​ ​ தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 750 நாட்டுப்புறக் கலைஞர்கள்,​​ பிற மாவட்டங்களைச் சேர்ந்த 100 மரபுக் கலை கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள்,​​ தமிழ்ச் சான்றோர்களின் சொற்பொழிவுகள் இடம் பெறுகின்றன.​ ​ ​ விழாவையொட்டி,​​ பெரிய கோயில்,​​ அரண்மனை வளாகம் உள்ளிட்ட விழா நடைபெறும் இடங்களில் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு அழகுபடுத்தப்பட்டுள்ளன.​​ ​ இந்நிலையில்,​​ ஆயுதப் படை மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் நிறைவு விழா மேடையோ பெரிய கோயிலை அப்படியே பெயர்த்து கொண்டு வந்து வைத்து போல,​​ 200 அடி நீளம்,​​ 100 அடி அகலத்தில் சுமார் 400 தச்சு மற்றும் சிற்பக் கலைஞர்களின் அயராத உழைப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது.​ ​ ​ மேடையின் வலதுபுறம் ராஜராஜ சோழன் யானை மீது அமர்ந்து வர,​​ அவருடன் அரசவைப் புலவர்கள்,​​ பணிப் பெண்கள் புடைசூழ விழாவுக்கு வருவது போலவும்,​​ இடதுபுறத்தில் நாட்டியக் கலைஞர்கள் விழாவில் பங்கேற்க வருவது போலவும் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.​ ​ ​ கற்றளியால் எழுப்பப்பட்ட பெரிய கோயிலில் விமானத்தில் உள்ள சிற்பங்கள் போன்றே இங்கும் அமைக்கப்பட்டு வருகின்றன.​ இந்த விமானத்தில் வைப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட சிற்பங்கள்,​​ யாழி மற்றும் நாசிக் கூடுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.​ ​ ​ மாநாட்டுக்கு சிலை வடிப்பது மேடை அமைப்பது என்பது எளிது.​ ஆனால்,​​ கோயில் போன்ற ஒரு மேடை அமைப்பது பெரும் சவாலானது.​ அதுவும் உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோயில் வடிவில் மேடை அமைப்பதென்பது எளிதான செயல் அல்லவே.​ ​ ​ ஆனாலும்,​​ ஒரு கலைஞனின் திறமை இத்தகைய நெருக்கடியான சூழலில்தான் வெளிவரும்,​​ அப்போதுதான் அவனது முழுத் திறமையை வெளிக் காட்ட முடியும்.​ அப்படியொரு வாய்ப்பு இந்த மேடையை அமைக்கும் கலைஞர்களுக்கு தற்போது வாய்த்துள்ளது.​ ​ ​ கலைகள் மீது ஆர்வம் கொண்டு கலைஞனாகத் திகழும் தமிழக முதல்வர் மேடை அமைப்பு குறித்து ஆலோசனை வழங்கி,​​ அவர் வரைந்து கொடுத்த மாதிரி வரைபடத்தை கொண்டு பெரிய கோயில் போன்ற மேடை அமைக்கப்பட்டு வருகிறது.​ ​ ​ அவரின் ஆலோசனையின் பேரிலேயே தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன.​ இந்தப் பணி வியாழக்கிழமை முடிக்கப்படும் என்கிறார் மேடை அமைக்கும் பணியை தலைமையேற்று நடத்தி வரும் கலை இயக்குநர் ஜெ.பி.​ கிருஷ்ணா.​ ​ ​ பெரிய கோயில் முன்பு 420 அடி நீளத்தில்,​​ 230 அடி அகலத்தில் சுமார் 15,000 பேர் அமரும் வகையில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.​ அரண்மனை முன்புறத் தோற்றம் போல பனை ஓலைகளில் வண்ணம் தீட்டப்பட்டு பந்தல் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது.​ பந்தல் உள் பகுதி 4 ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது.​ எவ்வளவு மழை பெய்தாலும் பாதிக்காத வகையில் பந்தல் அமைப்பு உள்ளது.​ ​ ​ ​ பந்தல் மேல் பகுதியில் ராஜஸ்தான்,​​ குஜராத் மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட வண்ணத் துணிகள் கட்டப்பட்டுள்ளன.​ தரையில் வெல்வெட் துணிகள் போடப்பட்டுள்ளன.​ ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா காணும் தஞ்சை பெரிய கோயில் பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகளோடு மேலும் சிறப்பு பெறுகிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
கருத்துக்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக