சனி, 25 செப்டம்பர், 2010

"பெரிய கோயிலை கட்டியது யார்?'

தஞ்சாவூர், செப். 24: தஞ்சை பெரிய கோயிலைக் கட்டியது யார் என்று முன்பு நிலவிய பல்வேறு உண்மைக்குப் புறம்பான கருத்துகளுக்கு துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கமளித்தார்.தஞ்சை பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 'இந்தியப் பெருமைக்குத் தஞ்சையின் பங்களிப்பு' என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை ஆய்வரங்கம் நடைபெற்றது.ஆய்வரங்கத்தைத் தொடக்கிவைத்து மு.க. ஸ்டாலின் பேசியது:நாம், நம்மவர், நம்முடையவை என்ற உணர்வுகள் குறைவதால், நம்முடைய உரிமைகளை நமக்கு உரிமையுள்ள உடைமைகளையெல்லாம் இழந்துவிடுகிறோம். மறந்துவிடுகிறோம் என்பதற்கு இந்தப் பெரிய கோயில் தொடர்பான ஒரு செய்தியே சான்றாக அமைந்துள்ளது.இந்தப் பிரம்மாண்ட பெரிய கோயிலைக் கட்டியது யார் என்பது குறித்து பல்வேறு கதைகள் கூறப்பட்டுள்ளன. கிருமி கண்ட சோழன் என்னும் கரிகாலனால் கட்டப்பட்டது என்றும், அவனுக்கு இருந்த குட்ட நோய் இங்குள்ள சிவகங்கை குளத்தில் நீராடியதால் நீங்கியது என்றும், ப்ரஹதீஸ்வர மஹாத்மியம் என்னும் வடமொழிப் புராணமும், தஞ்சாபுரி மஹாத்மியம் என்னும் மராட்டிய மொழி நூலும் கூறியுள்ளன.ஜி.யு. போப்கூட, காடுவெட்டிச் சோழன் என்பவர் கட்டியதாக எழுதுகிறார். இதுகுறித்து மேலும் சிலர் இந்தப் பெரிய கோயில் குறித்த உண்மைக்குப் புறம்பான பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.இக் கோயில் கண்ணில்படாமல் மறைக்கப்படக் கூடிய அளவுக்குச் சிறியதல்ல. மறக்கப்படக் கூடிய சாதாரணத் தோற்றம் கொண்டதும் அல்ல. இத் திருக்கோயில் கட்டப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் இதைக் கட்டியது யார் என அறிந்திருப்பார்கள். அவர்களால் பிரம்மாண்டமான இத் திருக்கோயில் பற்றிய செய்திகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குச் செவிவழியாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும். என்ன காரணத்தாலோ அது தடைப்பட்டுவிட்டது.இந்நிலையில், 1886-ம் ஆண்டில், அந்த நாளைய சென்னை ஆங்கிலேய அரசாங்கம், ஹூல்ஸ் என்ற ஜெர்மன் அறிஞரைக் கல்வெட்டு ஆய்வாளராக நியமித்தது. அவர் பெரிய கோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்து படித்து, இதைக் கட்டியவர் ராஜராஜனே என முதல் முதலாக கூறினார். என்றாலும் 1892-ல் வெங்கையா என்பவரால் பதிப்பிக்கப் பெற்ற தென்னிந்தியக் கல்வெட்டுகள் என்னும் நூலின் இரண்டாம் தொகுதியில் உள்ள முதல் கல்வெட்டில், "பாண்டிய குலாசனி வளநாட்டுத் தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீஸ்வரம்' என்னும் தொடர்தான் இக் கோயிலைக் கட்டியவர் மாமன்னர் ராஜராஜன்தான் என்பதைச் சற்றும் ஐயமின்றி உறுதி செய்திருக்கிறது என்றார் மு.க. ஸ்டாலின்.
கருத்துக்கள்

குறிப்பை எடுத்துத்தந்தவர்க்குப் பாராட்டுகள். கருத்தரங்கத்தைக் கருத்தரங்கமாக ஆக்கியுள்ள துணை முதல்வருக்கும் பாராட்டுகள். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக