தஞ்சாவூர், செப். 23: தெய்வ உலோகத் திருமேனிகள் தயாரிப்பு சோழர் காலத்தில்தான் செழுமை பெற்றுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.தமிழகத்தை ஆண்ட பல்லவப் பேரரசு காலத்தில் திருக்கோயில்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆயினும், அடுத்து வந்த சோழர்கள் காலத்தில்தான் கோயில்கள் கட்டுமானம் ஒரு மாபெரும் இயக்கமாகவே மேற்கொள்ளப்பட்டது.சோழ மன்னர் ராஜராஜன் தஞ்சாவூரில் பிரம்மாண்டமான கலை நுட்பத்துடன் கூடிய பெரிய கோயிலைக் கட்டிய காலத்தில், சோழப் பேரரசின் பல்வேறு பகுதிகளிலும் திருக்கோயில்கள் கட்டுமானப் பணிகள் பெருமளவில் மேற்கொள்ளப்பட்டன.தஞ்சாவூர் பெரிய கோயில் கல்லில் வடிக்கப்பட்ட கண்கவர் கலை பொக்கிஷம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதேகாலத்தில்தான் தெய்வ உருவங்களை உலோகத் திருமேனிகளாக, உலோகச் சிற்பங்களாக வடிக்கும் பணியும் இங்கு உருவானது. அதற்கு முந்தைய காலத்தில் செப்புத் திருமேனிகள் செய்யப்பட்டிருந்தாலும், சோழர்கள் காலத்தில்தான் இந்தத் தொழிலுக்கு மெருகேற்றப்பட்டது என்கின்றனர் ஆய்வாளர்கள்.சிறந்த அரசுக்கும், அரசியலுக்கும் பெயர் பெற்ற தஞ்சாவூர், அக்காலத்தில் இயல், இசை, நாடகம், கோயில் கலை, கட்டுமானத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு கலைகளுக்கும் ஊற்றுக்கண்ணாய் இருந்துள்ளது. உலோகத் திருமேனிகள் உருவாகும் விதம்: ஒரு திருக்கோயிலில் உள்ள மூலவரின் சிற்பத்தை உலோகத் திருமேனியாக (உத்சவராக) உருவாக்க முதலில் மூலவர் திருமேனியின் உடல் வடிவமைப்புகள் அளவீடுகள் செய்யப்பட்டு, சாஸ்திர முறைப்படி, அவை உலோகச் சிற்பங்களாக உருவாக்கப்படுகின்றன. தேன்மெழுகு எனப்படும் ஒரு வகை மெழுகில் செய்ய வேண்டிய திருமேனியை வடிக்கின்றனர் சிற்பிகள். அதில் முழு அளவில் திருப்தி ஏற்பட்டவுடன், அதன் மேல் வண்டல் மண் கொண்டு பூசி, அதை முழுவதுமாக மூடிவிட்டு, பின்னர் மிதமான சூட்டில் சுடுகின்றனர். அப்போது வெப்பத்தில் உள்ளே இருக்கும் மெழுகு உருகி, வைக்கப்பட்டுள்ள சிறு துவாரம் வழியாக வெளியேறுகிறது.அதன் பின்னர் துத்தநாகம், தாமிரம், தங்கம், வெள்ளி, வெள்ளீயம் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவுகளில் எடுத்துக் கொண்டு, அதனை குழம்பு போல் காய்ச்சி, அந்த குழம்பை, சுடப்பட்டு வைக்கப்பட்டுள்ள உருவ மாதிரியின் (மோல்டு) உள்ளே ஊற்றி, சூடு ஆறியதும், மெதுவாக வண்டல் மண் பூச்சை அகற்றி, உலோகத் திருமேனி வெளியே எடுக்கப்பட்டு, அதைச் சிற்பிகள் தங்களது உளியால் செதுக்கி மேலும் மெருகேற்றுகின்றனர். நிறைவாக நமக்கு அழகிய உலோகத் திருமேனிகள் கிடைக்கின்றன.சோழர் காலத்து உலோகத் திருமேனிகள்தான் சரியான அளவுகளிலும், உடல் அமைப்புகளில் அசலைப் போலவும், ஆபரணங்களால் அழகுறவும் உருவாக்கப்பட்டு, கண்களை வெகுவாக ஈர்த்து, மனதை வசீகரிக்கும் தன்மை உடையன என்கின்றனர் கலை விமர்சகர்கள்.இதுகுறித்து கலைவிமர்சகர் தேனுகா கூறியது:சோழர் காலத்தில்தான் உலோகத் திருமேனிகள் தயாரிப்பில் ஒரு புரட்சி ஏற்பட்டது என்று கூடச் சொல்லலாம். சோழ மன்னர் ராஜராஜன், நூற்றுக்கணக்கான உலோகத் திருமேனிகளை தனது சிற்பிகள் மூலம் உருவாக்கி, தனது ஆட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு அனுப்பி, அதற்கு உத்சவங்களை நடத்த வழிமுறைகளையும், மானியங்களையும் வழங்கினார்.தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலையில்தான் அதிக அளவில் இத்தொழிலை மேற்கொள்ளும் ஸ்தபதிகள் உள்ளனர். இந்தப் பகுதியில் உள்ள அரசலாறு மற்றும் காவிரி ஆற்றில் கிடைக்கும் வண்டல் மண்தான் இந்தத் தொழிலுக்கு மிகவும் உகந்தது. வேறு எங்கும் இது கிடைப்பது அரிது என்பதால், இந்தப் பகுதியில் அதிக அளவில் ஸ்தபதிகள் உள்ளனர். சுவாமிமலையில் ராஜவீதியில் உள்ள ஸ்தபதிகள் ஏறத்தாழ 20-க்கும் மேற்பட்டோர் தேசிய விருதுகள் பெற்றுள்ளனர். இங்கு உருவாக்கப்படும் உலோகத் திருமேனிகள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளும், உலக நாடுகள் பலவற்றுக்கும் செல்கின்றன.இன்றும் உலோகத் திருமேனிகள் என்றாலே, அது சோழர் ஆட்சி புரிந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சுவாமிமலைதான் என்ற பெரும் சிறப்பு இந்த மண்ணுக்கு உண்டு. அதற்குக் காரணம் சோழர் காலத்தில் உலோகத் திருமேனிகளுக்கு அளிக்கப்பட்ட ஊக்கமும், ஆக்கமும் என்றால் அது மிகையல்ல என்றார் அவர்.தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தில் சோழர்கள் உலோகத் திருமேனிகள் உருவாக்கத்தில் அளித்த பெரும் பங்களிப்பைப் போற்றும் வகையில், விழாவின் ஒரு பகுதியாக சோழர் காலத்தில் செய்யப்பட்ட உலோகத் திருமேனிகள் பலவும் சென்னை, திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு அருங்காட்சியகங்களிலிருந்து தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மகாலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதை தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்