வியாழன், 23 செப்டம்பர், 2010

திருச்சி
பெரிய கோயில் ஓவிய அறை:​ பொதுமக்கள் பார்வையிடத் திறக்கப்படுமா?


தஞ்சாவூர், ​​ செப்.​ 22:​ தஞ்சாவூர் பெரிய கோயில் கருவறைச் சுற்றிலுள்ள சாந்தாரக் கூடத்திலுள்ள சோழர் கால ஓவியங்கள் மற்றும் நாட்டிய கரணச் சிற்பங்கள் உள்ள அறைகள் பூட்டப்பட்டுள்ளன.​ அந்த அறைகள் திறக்கப்பட்டு அதிலுள்ள ஓவியங்கள்,​​ சிற்பங்களைப் பார்த்து ரசிக்க முடியுமா என பொதுமக்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.​ ​ ​ மாமன்னர் ராஜராஜ சோழன் மிகச்சிறந்த கலாரசிகன் என்பதை அவரால் உருவாக்கப்பட்ட பெரிய கோயிலால் அறிகிறோம்.​ அவரது கலை ஆர்வம்,​​ சிற்பம் மற்றும் ஓவியக் கலையிலும் இருந்துள்ளது என்பதற்குச் சான்றாக இருப்பது பெரிய கோயில் கருவறைச் சுற்றில் சாந்தாரம் என்ற அறையிலுள்ள ஓவியங்களும்,​​ நடன கரணச் சிற்பங்களுமே.​ ​ ​ கோயில் கருவறை இரண்டு சுற்றுச் சுவர்களால் ஆனது.​ இடையே சாந்தாரம் என்னும் சுற்றுக் கூடம் உள்ளது.​ இரு தளங்களிலும் இந்தக் கூடங்கள் உண்டு.​ கீழ்த் தளத்தில் உள்ள சுற்றுக் கூடத்தில் கருங்கல் சுவரின் மேல் சுண்ணாம்புக் காரை பூசப்பட்டு,​​ அதன் மேல் ஓவியங்களை ராஜராஜ சோழனின் ஓவியர்கள் வரைந்துள்ளனர்.​ ​ பின்னர்,​​ இவற்றின் மீதே விஜயராகவ நாயக்கர் காலத்தில் மீண்டும் சுண்ணாம்புக் காரை பூசப்பட்டு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.​ ​​ ​ இதனால்,​​ சோழர்கால ஓவியங்கள் முழுவதும் நாயக்கர் கால ஓவியங்களால் மறைக்கப்பட்டிருந்தன.​ இந்நிலையில்,​​ கடந்த 1931 ஆம் ஆண்டு நாயக்கர் கால ஓவியங்களிலிருந்து காரை பெயர்ந்ததால் அந்த இடத்தில் சோழர் கால ஓவியங்கள் இருப்பது தெரிய வந்தது.​ ​ ​ பின்னர்,​​ இந்தியத் தொல்லியல் துறையினர் வேதியியல் நிபுணர்களைக் கொண்டு நாயக்கர் கால ஓவியங்கள் பலவற்றை அகற்றி,​​ ராஜராஜ சோழன் கால ஓவியங்களை வெளி உலகுக்கு தெரியப்படுத்தினர்.​ ​ சாந்தாரம் அறையின் மேற்குப் பகுதியில் சந்தியா நிறுத்த மூர்த்திக்கு இடப்புறம் உள்சுவரில் தேவார மூவருள் ஒருவரான சுந்தரர் வரலாற்றைக் கூறும் ஓவியம் உள்ளது.​ ​ ​ தவிர,​​ உருத்திரனின் சிற்பம்,​​ அகத்தியர் ஓவியம்,​​ சுந்தரரின் திருமணத்தை சிவ பெருமான் ஆவண ஓலையைக்காட்டி தடுத்த காட்சி,​​ திருக்கயிலாய காட்சி,​​ நாட்டிய மங்கைகள் காட்சி,​​ ஆலமரத்தின் அடியில் முனிவர்கள் அமர்ந்துள்ள காட்சி,​​ மரக்கிளை மீது விலங்குகள் உள்ள ஓவியங்கள் உள்ளன.​ ​​ ​ ​ ஓவியம் மற்றும் கரணச் சிற்பங்கள் இருக்கும் அறையை யாரும் பார்க்க முடியாது.​ ​​ ​ ​ ​ பூட்டி வைக்கப்பட்டுள்ள அந்த அறை அதிகாரம் மற்றும் வசதி படைத்தவர்கள் மட்டுமே பார்த்து ரசிக்கும் வகையில்,​​ அவ்வப்போது திறக்கப்படுகிறது.​ சாமானியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.​ ​​ ​ ​ ​ ​ எவ்வித அறிவியல் வளர்ச்சியும் இல்லாத காலத்தில் இவ்வளவு சிறப்பாக அழிக்க முடியாத வண்ண மைகளைக் கொண்டு தீட்டியிருக்கக் கூடிய ஓவியங்கள் உலகமே வியந்து பார்க்கக் கூடியவை.​ இந்த ஓவியங்கள் மற்றும் கரணச் சிற்பம் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள பெரிய கோயிலுக்குள் இருப்பதை பொதுமக்கள் பார்த்து மகிழ வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில்,​​ அது மக்கள் பெற்ற பயனாகவே கருதப்படும்.​ ​ ​ கட்டடக் கலை,​​ சிற்பக் கலை,​​ கல்லெழுத்துக் கலை ​(கல்வெட்டு),​​ இலக்கியங்கள் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு திட்டமிடப்பட்டிருக்கும் என யோசித்துப் பார்த்தால்,​​ இன்றைய அறிவியல் வளர்ச்சியில் மெய்சிலிர்க்க வைக்கிறது.​ கட்டடம் மற்றும் சிற்பக் கலையை வெளியிலிருந்து பார்த்து மகிழும் போது கருவறைச் சுற்றில் உள்ள ஓவியத்தை பார்த்து ரசிக்க முடிவில்லை.​ ​ அஜந்தா,​​ எல்லோரா,​​ சித்தன்னவாசல் ஆகிய இடங்களிலெல்லாம் ஓவியங்களைப் பார்க்க முடிகிறது.​ ஆனால்,​​ பெரிய கோயிலுக்குள் உள்ள ஓவியங்களைப் பார்க்க முடியவில்லை.​ கலை ஆர்வம் உள்ளவர்களால் கூட அங்கு போக முடியாத சூழல் உள்ளது.​ ​​ ​ ஓவியம் பாதிக்கப்படாத வகையில் நவீன முறையைக் கையாண்டு மாமன்னரின் பெருமைகளை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையிலான,​​ வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறக்க வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.​ ​ பெரிய கோயில் கருவறையிலுள்ள சோழர்கால ஓவியங்களை தமிழ்ப் பல்கலைக்கழகம் நூலாகத் தொகுத்துள்ளது.​ ​ பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி,​​ செப்.​ 24 -​ ஆம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதி தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் "இந்தியப் பெருமையின் தஞ்சையின் பங்கு' என்ற தலைப்பில் நடைபெறவுள்ள ஆய்வரங்கைத் தொடக்கிவைத்து,​​ இந்நூலையும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கள்

ulagathil ulla ella tamilrum parka vendiyathu pls arrange
By srikrishna
9/23/2010 3:33:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக