திங்கள், 20 செப்டம்பர், 2010

தலையங்கம்: தஞ்சை தாங்காது, ஜாக்கிரதை!

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு விழாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது தஞ்சாவூர் நகரம். தமிழர் கலைமரபின் மதிப்புமிக்க சாதனையான பெருவுடையார் திருக்கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா சமகால வரலாற்றில் முக்கியமான விழாவாக அமையப்போகிறது என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. ஒரு மாபெரும் விழாவுக்குத் தயாராக பெருவுடையார் திருக்கோயில் கம்பீரமாக நிற்கிறது. ஆனால், நாம் தயாராக இருக்கிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது.  தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு சாதாரணமாக ஒவ்வொரு நாளும் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். பிரதோஷ வழிபாட்டு நாள்களில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வரை கூடுகிறார்கள். சிறப்பு வழிபாடுகளின்போது 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கூடுகிறார்கள். இந்த எண்ணிக்கையின் பெரும் பகுதியானது உள்ளூர் பக்தர்கள் எண்ணிக்கையாகும்.   இந்நிலையில் நடைபெறவுள்ள ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவின் ஒவ்வொரு நாளும் லட்சத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சாவூர் வர வாய்ப்புள்ளது. விழா நாள்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும் சூழலில், உள்ளூர் மக்களே பெருந்திரளாக விழா நிகழ்ச்சிகளில் குவியக்கூடும். குறிப்பாக, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் மாலை நேரங்களில் பல்லாயிரக் கணக்கானோர் பெருந்திரளாகக் கூடுவது இயல்பாக எதிர்பார்க்கக்கூடியதாகும்.   ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்தைச் சமாளிப்பதற்கேற்ற ஏற்பாடுகளை அரசு நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவில்லை.   ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, செப்டம்பர் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பல்வேறு கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது அரசு. பெரிய கோயில் வளாகம், அரண்மனை வளாகம், திலகர் திடல், ஆயுதப் படையினர் பயிற்சித் திடல் எனப் பல்வேறு இடங்களிலும் இந்த நிகழ்ச்சிகள் பிரித்து நடத்தப்பட்டாலும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் பெரிய கோயில் அல்லது அதற்கு மிக அருகில் உள்ள திலகர் திடல் மற்றும் ஆயுதப்படையினர் பயிற்சித் திடலிலேயே நடைபெறுகின்றன.   இதனால், விழாவுக்கு வரும் வாகனங்கள் மற்றும் கூட்ட நெரிசலால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதுடன் விழாவில் பங்கேற்கும் பல்லாயிரக்கணக்கானோரும் சில சதுர கிலோ மீட்டர் வட்டத்துக்குள் அடைபடும் சூழலும் உருவாகியுள்ளது.   மேலும், பிரபலங்கள் - சுதா ரகுநாதன், சீர்காழி சிவசிதம்பரம், அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், நர்த்தகி நடராஜ், நிதியமைச்சர் க. அன்பழகன் - பங்கேற்கும் நிகழ்ச்சிகள் யாவும் பெருவுடையார் கோயில் வளாகத்திலேயே நடைபெறுகின்றன. குறிப்பாக, விழாவின் முக்கிய அம்சமாகக் கூறப்படும் முனைவர் பத்மா சுப்பிரமணியன் குழுவினரின் ஆயிரம் நடனமணிகள் பங்கேற்கும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.   இந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி குறித்து ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவை பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வில் முதல்வரும் பங்கேற்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் பல்லாயிரக் கணக்கானோர் கோயிலுக்குள் திரண்டால் அதை எதிர்கொள்வது மிகவும் சிக்கலான சூழலாகும்.   தஞ்சாவூரில் 1995-ல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது எவ்வளவோ விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. லட்சக்கணக்கானோரின் வருகை எதிர்பார்க்கப்பட்டது. நகரின் ஓர் எல்லையிலிருந்து மற்றோர் எல்லை வரை உள்ள பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டன. அப்படியெல்லாம் இருந்தும் நிறைவு நாள் நிகழ்ச்சியன்று திரண்ட பெரும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து போயினர் காவல் துறையினர்.  துயரச் சம்பவங்கள் நிகழவில்லை என்றாலும் உலகத் தமிழாய்வுக் கழகத் தலைவர் நொபுரு கரஷிமாவே பின்னாளில் மோசமாகக் குறிப்பிடும் அளவுக்கு இருந்தது கூட்டத்தை நாம் கையாண்ட விதம்.  ஆனால், அப்போது மேற்கொள்ளப்பட்ட அளவுக்குக்கூட இப்போது திட்டமிடல்கள் இல்லை; அசம்பாவிதங்கள் நேரிட்டால் சமாளிக்கக்கூடிய இடங்களாகவும் தேர்ந்தெடுக்கப்படவில்லை; அதனால், கூட்டம் குவியப்போகிறது என்பது கவலை கொள்ளச் செய்கிறது.   இந்தியா கடந்த சில ஆண்டுகளில் எதிர்கொண்ட மிகப் பெரிய கூட்ட நெரிசல் துயரச் சம்பவங்கள் யாவுமே கோயில் விழாக்கள் சம்பந்தப்பட்டவை. போதிய முன்னெச்சரிக்கை இல்லாததாலேயே குண்டா ராம் ஜானகி கோயிலில் 71 உயிர்களை இழந்தோம்; ஜோத்பூர் சாமுண்டா தேவி கோயிலில் 147 உயிர்களை இழந்தோம்; பிலாஸ்பூர் நைனா தேவி கோயிலில் 162 உயிர்களை இழந்தோம்.   தமிழகத்துக்கும் - குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்துக்கும் கூட்ட நெரிசல் துயரச் சம்பவங்கள் புதிதல்ல. 1992-ல் கும்பகோணம் மகாமகக் கூடலின்போது 60 உயிர்களைப் பறிகொடுத்ததும், 1997-ல் இதே தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு யாகசாலை பந்தலில் நேரிட்ட தீ விபத்தின் தொடர்ச்சியாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 37 பேர் உயிரிழந்ததும் அத்தனை சீக்கிரம் மறந்துவிடக்கூடியவை அல்ல.   ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விழா - பின்னாளில் இந்த அரசையும் இன்றைய ஆட்சியாளர்களையும் நினைவூட்டக்கூடிய விழாவும்கூட - அதன் மகிழ்ச்சியான தருணங்களுக்காக நினைவுகூரப்பட வேண்டும் என்கிற அக்கறையின் அடிப்படையில் கூறுகிறோம்: தஞ்சை தாங்காது; இன்னும் முன்னெச்சரிக்கை தேவை! மேலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
கருத்துக்கள்

நல்ல அறிவுரை. கண்டிப்பாக அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கிறோம். ஆடுவோரே ஆயிரம் பேர் இருக்கும் பொழுது எஞ்சிய பார்வையாளர் பகுதி பல்லாயிரவர் அமர்ந்து காண ஏற்றதாக இருக்குமா? வெளியே நடத்தலாமே! எவ்வாறோ தினமணியின் எச்சரிக்கை மணி செவிடன் காதில் ஊதிய சங்காக இராமல் அரசிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நன்று. 
வேண்டுதலுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
9/20/2010 3:20:00 AM
தஞ்ஞை குறுகிய நிலப்பரப்புள்ள பூமி.இங்கு கூட்ட நெரிசலை எப்படி தவிர்ப்பது என அரசுக்கு எச்சரிக்கையினை சுட்டிக்காட்டி யிருப்பது சிறப்பு.அரசு இதை அலட்சியம் செய்யாமல் உரிய நடவடிக்கை எடுப்பதும்,மக்களுக்கு சிரமமின்றி பெருவுடையர் கோயில் திருவிழாவை நடத்த சீரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும்.
By ஆரிசன்,கீழ்க்கொடுங்காலூர்.
9/20/2010 2:10:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக