சனி, 25 செப்டம்பர், 2010

மலையாள இலக்கியவாதி குரூப்புக்கு ஞானபீட விருது


புது தில்லி, செப். 24: பிரபல மலையாள இலக்கியவாதி ஓ.என்.வி.குரூப் (79) மற்றும் உருது கவிஞர் அக்லக் கான் ஷாரியார் (74) ஆகிய இருவரும் முறையே 2007 மற்றும் 2008-ம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இலக்கியத் துறையில் அவர்கள் ஆற்றிய சிறப்பான பணிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.இலக்கியத்துக்கான நாட்டின் உயரிய விருதான ஞானபீட விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. பிரபல ஒரியா எழுத்தாளரும், ஞானபீட விருது பெற்றவருமான சீதாகாந்த் மஹாபாத்ரா தலைமையிலான ஞானபீட தேர்வு கமிட்டி இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.ஓ.என்.வி. குரூப்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த குரூப், 20க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். அவரது உஜ்ஜயினி, ஸ்வயம்வரம் ஆகிய பாடல் தொகுப்புகள் மிகவும் பிரபலமானவை. சமூக தத்துவார்த்தப் பாடல்களில் இவர் மிகவும் பிரபலமானவர்.கேரள சாகித்ய அகாதெமி விருது, சாகித்ய அகாதெமி விருது, வயலார் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.அக்லக் கான் ஷாரியார்: உத்தரப் பிரதேச மாநிலம், ரேபரேலியில் முஸ்லிம் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்த ஷாரியார், அறிவுஜீவி கவிஞராக வர்ணிக்கப்பட்டவர். தனது கவிதைகளில் கொள்கை, கோட்பாடுகளை விட்டுக்கொடுக்காதவர்.தற்கால உருது கவிதைகளுக்கு வடிவம் கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநில உருது அகாதெமி விருது, சாகித்ய அகாதெமி விருது, தில்லி உருது அகாதெமி விருது மற்றும் ஃபிராக் சம்மான் விருதுகளைப் பெற்றுள்ளார்.
கருத்துக்கள்

உரிய காலங்களில் விருதுகளை வழங்கக் கூடாதா? இனி 2009, 2010 ஆண்டிற்குரிய விருதுகளை 2012 இல் வழங்குவார்களா? அகவை முதிர்ந்த பின் காலங் கடந்து தருவதை முன்னரே தரலாம் அல்லவா? விருதாளர்களுக்குப் பாராட்டுகள். 
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 3:21:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக