சனி, 25 செப்டம்பர், 2010

திராவிட கட்டடக் கலையின் சிகரம் பெரிய கோயில்: மு.க. ஸ்டாலின் புகழாரம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆய்வரங்கைத் தொடக்கிவைத்து, சோழர் கால ஓவியங்கள் நூலை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட, அதைப்
தஞ்சாவூர், செப். 24: திராவிடக் கட்டடக் கலைக்குச் சிகரமாக தஞ்சாவூர் பெரிய கோயில் விளங்குகிறது என்றார் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்.  தஞ்சாவூர் பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இந்தியப் பெருமைக்கு தஞ்சையின் பங்களிப்பு என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை ஆய்வரங்கம் நடைபெற்றது.  ஆய்வரங்கைத் தொடக்கி வைத்து மு.க. ஸ்டாலின் மேலும் பேசியது: பிற்காலச் சோழர்களில் மிகச் சிறந்த மன்னராகவும், உலக வரலாற்றில் பேரரசன் என்னும் அடைமொழியைப் பெற்றவராகவும் விளங்கிய தமிழ் மன்னர் முதலாம் ராஜராஜன். இவரது ஆட்சியில் தமிழகம் பல புதுமைகளைக் கண்டது.  அரசு நிர்வாகம், வேளாண்மை, கலைகள் சிறக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ராஜராஜன் மேற்கொண்டார். இவரது ஆட்சியில் சைவ, வைணவ சமயங்கள் மட்டுமன்றி, அனைத்து சமயங்களுக்கும் முக்கியவத்துவம் அளிக்கப்பட்டது.   ராஜராஜன் கட்டிய பெரிய கோயில் அவருக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க புகழைத் தேடித் தந்தது. கி.பி. 1003-ம் ஆண்டில் தொடங்கி, கி.பி. 1010-ம் ஆண்டில் இக்கோயில் கட்டுமானப் பணி நிறைவடைந்தது. இக்கோயில் கருவறை, இடைசுழி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், முன் மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு விளங்குகிறது. இத்தகைய அமைப்புடன் 1,000 ஆண்டுகளுக்குப் பின்னும் நிலைத்து நின்று, தமிழனின் கட்டடக் கலை மாண்பை பறைசாற்றும் இந்த பெரிய கோயிலுக்கு இணையான ஒரு முழுமையான கட்டமைப்பை இந்தியாவில், ஏன், உலகிலேயே வேறெங்கும் காண முடியாது என்பது தஞ்சை பெரிய கோயிலுக்குரிய தனிச் சிறப்பாகும்.  சோழ மன்னர்கள் ஆட்சியின் சிற்பக் கலை வல்லமையைக் காட்டும் அரிய பல சிற்பங்களும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளன. முழுவதும் கற்றளியாக விளங்கும் இக் கோயிலின் கருவறையைச் சுற்றி அமைந்துள்ள திருச்சுற்று மாளிகையில் சோழர்கால ஓவியங்கள் காணப்படுகின்றன. முதல் தளச் சுற்றிலும் 81 நாட்டியச் சிற்பங்களுடன் ஓவியங்கள் இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகின்றன. இப்படி கட்டடக்கலை, நாட்டியக் கலை, சிற்பக் கலை, இசைக் கலை, ஓவியக்கலை உள்ளிட்ட அனைத்துக் கலைகளுக்கும் நிலைக்களனாக அமைந்த ஒரு பல்கலைக்கூடமாக ராஜராஜன் இத் திருக்கோயிலைக் கட்டியுள்ளார்.  பெரிய கோயிலைக் கட்டி, அதில் நாள்தோறும் தமிழில் வழிபாடு நடத்த வேண்டுமென கருதி, தமிழ் வழிபாட்டுக்காக திருமுறைகளை இசையோடு பாட ஓதுவார்களை நியமித்து, அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் செய்தவர் ராஜராஜன். காலப்போக்கில் தமிழ் வழிபாடு முறை மறைந்து, வடமொழியில் வழிபாடுகள் செய்யும் நிலை ஏற்பட்டு, நிரந்தரமாகி, ராஜராஜன் விரும்பிய தமிழ் வழிபாட்டு முறை தடைபட்டு விட்டது.  அதன் பின்னர், 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் எழுந்த மொழி இனமான உணர்வுகள் காரணமாகத்தான், திருக்கோயில்களில் தமிழிலும் வழிபாடு செய்யப்படும் என ஓர் அட்டையை மட்டும் தொங்கவிட்டனர்.  அந்த நிலையில், கருணாநிதி தலைமையில் திமுக அரசு தமிழிலும் என்பதில் உள்ள "உம்' என்பதை நீக்கி, தமிழில் வழிபாடு நடத்தப்படும் என ஆணை பிறப்பித்து, தமிழில் போற்றி நூல்களை வெளியிட்டது. இது தேவாரத் திருமுறைகளுடன் இந்தப் பெரிய கோயிலிலும், தமிழகத்தில் உள்ள ஏனைய திருக்கோயில்களிலும் தமிழில் வழிபாடு நடைபெற வழிவகுத்தது. எனவே, இதுபோன்ற ஆய்வரங்களில் பங்கேற்கும் அறிஞர்கள், ராஜராஜ சோழன் ஊட்டிய தமிழ்மொழி உணர்வை தெளிவுபடுத்த வேண்டும் என்றார் ஸ்டாலின். ஆய்வரங்கத்துக்கு மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி தலைமை வகித்தார்.  தமிழ்ப் பல்கலைக்கழகம் சார்பில், சோழர் கால ஓவியங்கள் என்னும் நூலை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியை இரா. ஜம்பகலட்சுமி பெற்றுக் கொண்டார்.  நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, திமுக தில்லி பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன்,  மத்திய இணையமைச்சர்கள் எஸ்.எஸ். பழநிமாணிக்கம், காந்திசெல்வன், மாநில அமைச்சர்கள் பூங்கோதை ஆலடி அருணா, தங்கம் தென்னரசு, மைதீன்கான், செல்வராஜ், ரவிக்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. ராசேந்திரன் வரவேற்றார். பல்கலைக்கழகப் பதிவாளர் ச.பி. சரவணன் நன்றி கூறினார்.
கருத்துக்கள்

தமிழனின் கட்டடக்கலை மாண்பைப் பறைசாற்றும் எனத் தாலின் பேசியுள்ளார். அவ்வாறே தலைப்பு அளித்திருக்கலாமே! தமிழ் என்பது தவறுதலாகத் திராவிடம் என உச்சரிக்கப்பட்டது. அந்த அளவில் முன்பு திராவிடம் எனக் குறிக்கப்பட்டதை நாம் தமிழ் என்றே குறிப்பதுதான் வரலாற்று உண்மையாக இருக்கும். தமிழ்ப்பணி ஆற்றும் தினமணி தமிழுணர்வுடன் தலைப்பு வெளியிட வேண்டும். அதே நேரம் தமிழ் வழிபாட்டுக்கு வழி வகுத்துள்ளதாகக் கூறியுள்ளதெல்லாம் நடைமுறைக்கு மாறானவையே. தமிழ் வழிபாடு கேட்டாலும் ஆரிய மொழியில் பல சொல்லியபின்பே சில தமிழில் சொல்லப்படுகிறது. தமிழில் மட்டுமே வழிபாடு என்னும் நிலை வரவேண்டும். அவ்வாறு கொண்டு வரும் எண்ணம் அரசிற்கு இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, ஓயாமல் இதனைப் பெருமையாகப் பேச வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 3:11:00 AM
திராவிட கட்டடக் கலையின் சிகரம் தஞ்சை பெரிய கோவில் என நினைந்து தஞ்சையும் திராவிட இனமும் பெருமை கொள்ளும் வேளையில் ...உலகமகா ஊழலின் சிகரம் உன் அப்பன் என நினைந்து தஞ்சையும் திராவிட இனமும் வெட்கப் படுகிறது ! @ rajasji
By rajasji
9/25/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக