சென்னை, செப்.22: மருத்துவப் படிப்புக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை மாற்றியமைக்க முதல்வர் கருணாநிதி முயற்சி எடுக்காததில் இருந்து, அவருக்கு தமிழக நலன்களில் அக்கறை இல்லை என்பது தெரிகிறது என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 17.9.2010 அன்று மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான (Post Graduate Medical Courses) சேர்க்கை பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் அமைய வேண்டும் என்கிற இந்திய மருத்துவக் குழுவின் (Medical Council of India) கருத்துருவை தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய அரசு ஆதரிக்கிறது என்றும், இதற்கான அறிவிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருப்பதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. மருத்துவச் சேவையின் தரத்தையும், மருத்துவக் கல்வியின் தரத்தையும் உயர்த்தும் நோக்கத்தில் பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதோடு நின்றுவிடாமல், மருத்துவ படிப்பிற்கான (M.B.B.S.) சேர்க்கையும் பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வரைவு சட்ட திட்டங்கள் நீதிமன்றத்தின் முன்பு சமர்ப்பிக்கப்படும் என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறது. இது மட்டுமல்லாமல், இது குறித்த உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலையும் அரசு தலைமை வழக்குரைஞர் கோரி இருக்கிறார். “அரசின் கொள்கை முடிவில் எங்களை இணைக்காதீர்கள்" என்றும், "கருத்துருவை சமர்ப்பிக்காமல் எப்படி அனுமதி அளிக்க முடியும்?” என்றும் உச்ச நீதிமன்றம் பதில் அளித்து இருக்கிறது. “மாணவர்கள் மாறுகின்ற தன்மை உடையவர்கள்; படிப்படியாக செல்லுங்கள்; முதலில் பட்டமேற்படிப்பில் இதை நடைமுறைப்படுத்துங்கள்” என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இது மட்டுமல்லாமல், இந்திய மருத்துவக் குழுவின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பொது நுழைவுத் தேர்வுக்கான சட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும்; பொது நுழைவுத் தேர்விற்கு பிறகு ஒருங்கிணைந்த ஆலோசனை வழங்கப்படும் என்றும்; மருத்துவப் படிப்பினை முடித்து வெளியேறும் போது அவர்களுக்கு ஒரு தேர்வு வைக்கப்படும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இந்த வழக்கை ஒரு வாரம் கழித்து பட்டியலிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த இந்த வாதங்கள் எல்லாம் கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் மூலமாக எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு மவுனியாக இருக்கிறார் கருணாநிதி. பொது நுழைவுத் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. சமூக நீதிக்கு எதிரான இந்த கொள்கை முடிவை எடுத்த மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. சமூகநீதியை காப்பதற்கான அக்கறை கருணாநிதியிடம் இருப்பதாகத் தெரியவில்லை. 69 விழுக்காடு இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை கருணாநிதிக்கு இருந்திருந்தால், பொது நுழைவுத் தேர்வு என்ற மத்திய அரசின் கொள்கை முடிவை மாற்றியமைக்க முயற்சி எடுத்து இருக்க வேண்டும். இல்லையெனில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இதைச் செய்யாததிலிருந்து தமிழ்நாட்டின் நலன்களை, தமிழர்களின் நலன்களை காப்பதற்கான அக்கறை கருணாநிதிக்கு இல்லை என்பது தெரிகிறது. மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் என்ற வகையில், கூட்டு அதிகாரப் பட்டியலில் (Concurrent List) உள்ள ‘கல்வி’ மாநிலப் பட்டியலில் (State List) சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வரும் சூழ்நிலையில், இருக்கின்ற அதிகாரங்களையும் பறிக்கின்ற வகையில் மத்திய அரசு இது போன்ற நடவடிக்கையை எடுத்திருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல்.எனவே ஏழை, எளிய, கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவ - மாணவியர் நலன்களுக்கு எதிரான பொது நுழைவு தேர்வு முறையை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசை ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துக்கள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/22/2010 12:36:00 PM
9/22/2010 12:36:00 PM


By periya karuppan.kadalur
9/22/2010 12:15:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *9/22/2010 12:15:00 PM