சனி, 25 செப்டம்பர், 2010

62-வயது முதியவர் எந்நாட்டைச் சேர்ந்தவர்?


கோழிக்கோடு, செப்.24: 62 வயதுடைய குனியில் இப்ராஹிம் என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவரல்ல, இந்தியர்தான் என்பதை கேரளத்தின் வடகரா நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து முதியவர் குனியில் இப்ராஹிம், 7 ஆண்டுகால பிரச்னையில் இருந்து விடுபட்டுள்ளார். நீதிமன்றத்தின் தீர்ப்பால் அவர் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார். கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வெள்ளிகுல்லங்கராவில் மீன் விற்பனை செய்து வந்த குனியில் இப்ராஹிமை அந்த மாநில போலீஸார் 2003-ல் கைது செய்தனர். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், சட்டவிரோதமாக கால அவகாசத்தை மீறி  இந்தியாவில் தங்கியிருப்பதாகவும் கூறி, அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் நிறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குனியில் இப்ராஹிமை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க ஆணைப் பிறப்பித்தது. இதையடுத்து குனியில் இப்ராஹிமை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்க வாகா எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவரை தங்களது நாட்டுக்குள் நுழைய பாகிஸ்தான் அரசு அனுமதிக்கவில்லை. குனியில் இப்ராஹிமிடம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என்று கூறி, அவரை தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது. இதையடுத்து குனியில் இப்ராஹிம் மீண்டும் கேரளத்துக்கு அழைத்துவரப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு போலீஸார் அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்றது. குனியில் இப்ராஹிம் இந்தியாவைச் சேர்ந்தவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் பள்ளிச் சான்றிதழ், வாக்காளர் புகைப்பட அட்டை உள்ளிட்ட சில ஆவணங்களை அவரது வழக்கறிஞர் சமீபத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதை ஆய்வு செய்ய நீதிமன்றம், குனியில் இப்ராஹிம் இந்தியர்தான் என்பதை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்தது.
கருத்துக்கள்

நம் நாட்டவரா? அயல் நாட்டவரா? என அறிய இத்தனை ஆண்டுகளா? என்ன நாடோ? நீதி மன்றமோ? இத்தனை ஆண்டுகள் அவர் பட்ட பாட்டிற்கும் இழப்பிற்கும் அரசு என்ன இழப்பீடு தரப் போகிறது? 
வெட்கத்துடனும் வேதனையுடனும் 
இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
9/25/2010 3:28:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக