கோலாலம்பூர், மார்ச் 18: முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அவ்வளவு எளிதில் மன்னிக்க மாட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச திட்டவட்டமாகக் கூறினார்.இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபட்சவை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் சரத் பொன்சேகா.தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனே அவர் கைது செய்யப்பட்டார். ராணுவப் பணியில் இருக்கும்போதே அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டார் என்று அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ராணுவத்துக்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த நிலையில், பொன்சேகாவை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிபர் ராஜபட்ச. அவரை முட்டாள் என்றும் வர்ணித்துள்ளார். "கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில், இந்த இடத்தில் வலது பக்கம் அவர் அமர்ந்திருந்தார். அப்போது நான் அவரிடம், அதிபர் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு விருப்பம் உள்ளதா என்று கேட்டேன். இல்லை. அதற்கு நான் தயாராக இல்லை என்று கூறினார். பணியிலிருந்து ஓய்வு பெறுவற்கு கடைசி நாள் கூட அவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக என்னிடம் சொல்லவில்லை' என்று ஆதங்கப்பட்டார் ராஜபட்ச.சிங்கப்பூர் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.அரசியல் வேறு, ராணுவம் வேறு என்று நான் பொன்சேகாவுக்கு அறிவுரை கூறினேன். ராணுவத்தில் உங்கள் உத்தரவை அப்படியே ஏற்றுச் செயல்படுவார்கள். ஆனால் அரசியல் அப்படியல்ல. நீங்கள் ஒரு உத்தரவைப் போட்டால் அவர்கள் வேறொரு வகையில் செயல்படுவார்கள் என்று கூறினேன். நீங்கள் என்ன முடிவு செய்திருந்தாலும் சரி. ஆனால் அரசியல் விளையாட்டு எனக்கு அத்துபடி. எதிரி யாராக இருந்தாலும் இந்த விளையாட்டில் (தேர்தல்) வெற்றி பெறப் போவது நான் தான் என்பதை அவருக்குத் தெளிவாகக் கூறினேன் என்றார் ராஜபட்ச.ஓய்வு பெறுவதற்கு பொன்சேகாவுக்கு அனுமதி கொடுக்காமல், அவர் தேர்தலில் போட்டியிடுவதை என்னால் தடுத்திருக்க முடியும். ஏனெனில் நான் அனுமதி கொடுக்கும் வரை அவரால் ஓய்வு பெற முடியாது. வேட்புமனு தாக்கல் முடியும் வரை அவரது ஓய்வு விண்ணப்பத்தை நிறுத்தி வைத்திருக்க முடியும். பொன்சேகாவை அவ்வளவு எளிதில் மன்னிக்க முடியாது. அவருக்கு மன்னிப்பு வழங்கினால் ராணுவ ஒழுக்க நெறி என்னாவது?. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய விதி. அதை நான் மாற்றி அமைக்க முடியாது. இந்தியாவிலும் இலங்கையிலும் பிரிட்டிஷாரின் சட்டங்கள்தான் இன்னும் நடைமுறையில் உள்ளன என்றார்.ராணுவ நீதிமன்ற விசாரணையில் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். பொன்சேகாவுக்கு மன்னிப்பு கொடுத்தால் மற்றவர்கள் கேள்வி கேட்கமாட்டார்களா என்றார் அவர்.சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் ராஜபட்ச கூறினார்.
கருத்துக்கள்
நாளைக்கு உமக்கும் இந்த நிலை வரும். அப்பொழுது நீர் மன்னிப்பு கேட்காமல் இருந்தால் சரி. ஆனால், பொன்சேகா முட்டாள்தான். கொலைகாரக் கூட்டணியின் மூளையான வஞ்சக இந்தியாவின் உதவியால் பெற்ற வெற்றியைத் தன் வெற்றி என எண்ணியதும் பேரினப் படுகொலை முதலான வஞ்சகச் செயல் திட்டங்கள் வெளிவராமல் இருக்க இராசபக்சேவே வெற்றி பெற்றதுபோல் காட்ட இந்தியம் உதவும் என எண்ணாமலும் தான் வெற்றி வாகை சூடுவோம் எனக் கனவு கண்டதால் சேகா முட்டாள்தான். இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/19/2010 3:53:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்3/19/2010 3:53:00 AM