Last Updated :
சென்னை, மார்ச் 13: தமிழக எம்.எல்.ஏ.க்களும் அரசு அதிகாரிகளும் பெரிய அளவில் புதிய ஆக்கப்பூர்வ உத்திகளைக் கையாண்டு, நாட்டுக்கே முன் மாதிரியாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவுறுத்தினார்.சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.500 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டப் பேரவை - தலைமைச் செயலக வளாகத்தை சனிக்கிழமை திறந்து வைத்து பிரதமர் பேசியதாவது:சமூக நீதி, சமத்துவத்தை வலியுறுத்தும் திராவிட இயக்கத்தின் பாரம்பரியத் தன்மையின் வழி வந்த பெருமை உங்களுக்கு (தமிழக எம்.எல்.ஏ.க்கள்) உண்டு.சமூக நீதி, சமத்துவம் இன்றி எந்தச் சமுதாயமும் முன்னேற்றம் காண முடியாது. எனவே இவற்றை இலக்காகக் கொண்டு தமிழக சட்டப் பேரவையும் தமிழக அரசும் தொடர்ந்து செயல்படும் என நம்புகிறேன்.சட்டப் பேரவைகள் புனிதமான இடம். மக்கள் தங்களுக்காக பிரதிநிதிகளை அனுப்பி செயலாற்றும் இடமாகும். அரசியல் சாசனத்தின் கொள்கைகளைக் கடைப்பிடித்து, அவற்றுக்குச் செயலாக்கம் தரும் இடமாகும்.இப்போதுள்ள சட்டங்களை மதிப்பீடு செய்வது, புதிய சட்டங்களை நிறைவேற்றும் பணியை பேரவை உறுப்பினர்கள் செய்கின்றனர். அனைத்து விஷயங்கள் குறித்தும் விவரமாக அறிந்து வைத்திருப்பதோடு, விழிப்புடன் பேரவை உறுப்பினர்கள் தங்களது கடமையை திறம்பட நிறைவேற்ற வேண்டும்.பொது மக்களின் தேவை குறித்த உணர்வு பேரவை உறுப்பினர்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும்.அரசுப் பணத்தை...: அரசுப் பணம் வீணடிக்கப்படாமல் செலவழிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடமை பேரவை உறுப்பினர்களுக்கு உண்டு.பேரவை உறுப்பினர்கள் ஒற்றுமையாகச் செயல்பட்டு ஊழலை ஒழிக்க முற்படுவதோடு, அரசு நிர்வாகத்தில் உள்ள திறமையின்மையை எதிர்க்க வேண்டும்.நான் (பிரதமர்) மேலே குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் சவாலான விஷயங்கள்தான். எனினும் இந்தப் புதிய தமிழக சட்டப் பேரவையில் நடைபெற உள்ள பேரவை நிகழ்வுகள், திறமை, நேர்மை ஆகியவற்றில் புதிய சிகரத்தை எட்டுவதோடு சாமானிய மனிதனுக்கு நன்மைகள் கிடைக்கும் வகையில் விவாதங்கள் இடம்பெறும் என உறுதியாக நம்புகிறேன் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.கருணாநிதியிடம் அடிக்கடி ஆலோசனை கேட்கிறேன்: பிரதமர்முதல்வர் கருணாநிதியிடம் அடிக்கடி ஆலோசனை கேட்பது உண்டு என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.புதிய சட்டப் பேரவை-தலைமைச் செயலக வளாகத்தை அவர் திறந்து வைத்துப் பேசியபோது இது தொடர்பாக கூறியது:புதிய சட்டப் பேரவை வளாகத்தை கட்டும் முடிவை அரசியலில் முதுபெரும் தலைவர் கருணாநிதி எடுத்தது மிகவும் பொருத்தமானது. தமிழக சட்டப் பேரவையில் 11 முறை உறுப்பினராகவும் இதுவரை 5 முறை முதல்வராகவும் உள்ள ஒருவரால் புதிய பேரவை வளாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.பொது வாழ்வில் 50 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள முதல்வர் கருணாநிதியிடம் நான் அடிக்கடி ஆலோசனை மேற்கொள்வேன். அவரது புத்திக் கூர்மை மற்றும் தலைமைப் பண்பு காரணமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதிக பலன்களை அடைந்துள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் முதல்வர் கருணாநிதியின் அனுபவத்தை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள முடிவது உண்மையிலேயே நல்ல வாய்ப்புதான் என்றார் பிரதமர்.
By Ilakkuvanar Thiruvalluvan
3/14/2010 5:40:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்