சனி, 20 மார்ச், 2010

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு தனித்துறை: விடுதி மாணவர்களுக்கு உணவுப்படி உயர்வு



சென்னை, மார்ச் 19: ""மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, முதல்வர் கருணாநிதியின் நேரடிப் பார்வையில் தனித்துறை அமைக்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப்படி ரூ.200 லிருந்து ரூ.450 ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.2010-2011-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: உடல் ஊனமுற்றோர் என்று அழைப்பதற்குப் பதிலாக, அவர்களை "மாற்றுத் திறனாளிகள்' என்று அழைக்கின்ற முறை ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கப்பட்டு கடந்த 2007}ம் ஆண்டிலேயே அது தொடர்பான இணக்க ஒப்பந்தம் ஏற்கப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளது.இதன்படி, கல்வி, மருத்துவ வசதி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு வாழ்வாதார உரிமைகள் அனைத்திலும் அவர்கள் உரிய பங்கு பெற்றவர்களாகவும், சமூகத்தில் சம உரிமையும் வாய்ப்பும் பெற்றவர்களாகவும் வாழ வழி வகுக்க இந்த அரசு ஆவன செய்யும்.1995-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஊனமுற்றோருக்கான சட்டத்தை ஐக்கிய நாடுகள் இணக்க ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் மாற்றி அமைக்க மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.பல்வேறு சலுகைகள்: மாநில அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ""மாற்றுத் திறனாளிகள்'' பெற்றிட நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்சவரம்பு முற்றிலும் நீக்கப்படும்.மாற்றுத் திறனுடையோர் உயர்கல்வி பயில்வதற்கு ஏதுவாகக் கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டில் இருந்து தனிக்கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படும்.அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மாற்றுத் திறனாளி மாணவர் இல்லங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு உணவுச் செலவாக மாதத்துக்கு இப்போது ரூ.200 உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.450 ஆக உயர்த்தப்படும்.மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்த வரும் நிதியாண்டில் ரூ.176 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் தனித்துறை அமைக்கப்படும்'' என்றார் அமைச்சர் அன்பழகன்.
கருத்துக்கள்

ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு ஏறத்தாழ 5 உருபாய்தான் படித் தொகை என்பது மிக மிகக் குறைவு. இன்றையா விலை வாசியைக் கருத்தில் கொண்டு இத் தொகையை உயர்த்த வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 2:45:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக