Last Updated :
மாவோயிஸ்டுகளின் வன்முறை நடவடிக்கைகளை சில அமைப்புகள் நியாயப்படுத்தப் பார்க்கின்றன. ஆனால் மாவோயிஸ்டு, நக்சல்களுக்கு அறிவார்ந்த வகையிலும் மற்றும்பொருளாதார ரீதியிலும் ஆதரவு தெரிவித்து வரும் மெத்தப் படித்தவர்களும் இந்த வன்முறையை மிகக்கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் 16-2-10 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.மாவோயிஸ்டுகள் அல்லது நக்சலைட்டுகள் போன்ற தீவிரவாத இளைஞர்கள் எங்கேயோ இருந்து வந்தவர்கள் அல்லர். அவர்களும் நமது சமுதாயத்தில் உருவானவர்கள். அவர்கள் ஏன் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்து, அந்தக் காரணங்களைச் சரிசெய்வதன் மூலம் இந்தப் போக்கைத் திருத்த முடியும். நோய் நாடி, நோய் முதல் நாடி மருந்து கொடுக்க வேண்டும்.சமூக, பொருளாதாரப் பிரச்னையாக இந்தப் பிரச்னையைக் கருதி அவற்றுக்கான மாற்று நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும். ஆனால் ப. சிதம்பரம் இதைச் சட்ட ஒழுங்குப் பிரச்னையாக மட்டுமே பார்க்கிறார். அவர் மட்டுமல்ல, அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் படைகளும், பல்வேறு மாநில அரசுகளின் காவல் படைகளும் அவ்வாறே பார்க்கின்றன. பயங்கரவாதத்தை ஒழிக்கப் போகிறோம் என்ற பெயரில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு, தங்குதடையில்லாத லஞ்ச ஊழல், சீரழிந்த நிர்வாகம், உளவு அமைப்புகளில் ஊடுருவிவிட்ட ஊழலின் விளைவாக அவைகள்அடைந்த தோல்வி, காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம், ஆளுங்கட்சி அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூகவிரோதிகள் ஆகியோரது கூட்டணியின் தங்குதடையற்ற கொள்ளை, ஏழை, எளிய மக்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுதல், வேலையில்லாத் திண்டாட்டம், எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இன்மை போன்ற பல நடவடிக்கைகள்தான், படித்த இளைஞர்களிடையே விரக்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தி அவர்களை வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்க வைத்துள்ளன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மையாகும்.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் போலி மோதல்கள், காவல் நிலையக் கொலைகள், சிறைச்சாலை கொலைகள் போன்றவை அனைத்தையும் அதிகார வர்க்கம்சமூகத்தின் கண்முன்னால் மூடி மறைக்கிறது. காஷ்மீர், பஞ்சாப், நாகலாந்து, மணிப்பூர், அசாம், மிஜோரம், திரிபுரா போன்ற இமயமலை மாநிலங்களில் இந்திய ராணுவமும், துணைப் படைகளும் நடத்தும் மனிதநேயமற்ற அட்டூழியங்கள், கொடூரங்கள் ஆகியவை குறித்து வெளியாகும் செய்திகள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. மணிப்பூரில் மனோரமா என்ற பெண்ணை அசாம் துப்பாக்கிப் படையினர் கூட்டாகச் சேர்ந்து பாலியல் கொடுமை செய்து அதனால் இறந்த அந்தப் பெண்ணின் உடலை வீதியில் வீசிய கொடூரத்துக்கு எதிராக மணிப்பூர் பெண்கள் அந்தப் படையினரின் அலுவலகத்துக்கு முன்னால் நிர்வாணப் போராட்டம் நடத்தி உலகை அதிர வைத்தார்கள். குஜராத் மாநிலத்தில் காவல் உயர் அதிகாரிகளின் துணையோடு சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலைகள், கலவரங்கள் நாகரிக சமுதாயத்தை வெட்கித் தலைகுனிய வைத்தன.மோதல் சாவுகள் என்ற பெயரால் காவல்துறை தொடர்ந்து நடத்தி வரும் படுகொலைகள் அரசு நடத்தி வரும் பயங்கரவாதத்தின் வெளிப்படையான அடையாளங்கள் ஆகும். பயங்கரவாதத்தை ஒழிக்க அனைவரின் ஒத்துழைப்பை நாடும் ப. சிதம்பரம், ராணுவம், துணைப்படைகள், காவல் படைகள் நடத்தி வரும் அரச பயங்கரவாதத்தைத் தடுத்து நிறுத்துவது குறித்து என்றைக்காவது சிந்தித்ததுண்டா? நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மோதல் கொலைகள், காவல் நிலையக் கொலைகள், சிறைச்சாலைக் கொலைகள், இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் எடுத்த நடவடிக்கை என்ன? மோதல் கொலைகள் குறித்து உச்ச நீதிமன்றம் வகுத்த நெறிகாட்டுதலை பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்ததற்கு ஒரே ஒரு சான்றை உள்துறை அமைச்சரால் தர முடியுமா? மாறாக சட்டங்களைத் துச்சமாக மதித்துச் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பல படி பதவி உயர்வும், விருதுகளும், பரிசுகளும் மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படுகின்றன.பொடா, தடா போன்ற மிகக்கொடிய சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் வாடிய என் மீதும் மற்றத் தோழர்கள் மீதும் இச்சட்டத்தைப் பயன்படுத்தியது தவறு என மத்திய அரசால் அமைக்கப்பட்ட பொடா மறுஆய்வுக் குழு தீர்ப்பளித்ததன் பேரில் இருண்ட சிறைகளில் இருந்து நாங்கள் வெளியே வந்தோம். ஆனால் பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, பொடா சட்டத்தின் கீழ் எங்களைச் சிறையில் அடைத்து, எங்களது மனித உரிமைகள் அத்தனையையும் பறித்த ஆட்சியாளர்கள், அவர்களின் ஏவல்படி எங்கள் மீது பாய்ந்த காவல் அதிகாரிகள் ஆகியோர் மீது இதுவரை ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இவ்வாறு பொடா சட்டத்தை அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தியவர்கள் மீது எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே ஏன்?ஒரு நாள் கூட சிறை சென்றறியாத சிதம்பரத்துக்குச் சிறைவாசக் கொடுமை என்ன என்பது புரியாது. செய்யாத குற்றத்துக்காகப் பல மாதங்கள் சிறையில் வாடியவர்களின் குடும்பத்தினர் எத்தகைய மனத்துன்பத்துக்கும் இழப்புகளுக்கும் ஆளாகியிருப்பார்கள் என்பதை சிதம்பரம் போன்றவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.வெள்ளையரின் போலீஸ் தடியடிக்கு தனது வயது முதிர்ந்த தாயான சொரூபராணி அம்மையார் ஆளானதை எண்ணி தான் துடித்துப் போனது குறித்து ஜவாஹர்லால் நேரு எழுதியிருப்பதையும், தனது தந்தையும், அத்தைமார்களும் சிறை சென்றபோது, சிறுமியான தான் தனித்து நின்று தவித்தது குறித்து இந்திரா காந்தி எழுதியிருப்பதையும் ப. சிதம்பரம் போன்றோர் படித்தால்தான் பாதிக்கப்பட்டவர்களின் வேதனையை ஒருசிறிதளவாவது புரிந்து கொள்ள முடியும்.1912-ம் ஆண்டில் வெள்ளையர் ஆட்சியின் போது சுதந்திரப் போராட்டத்தை நசுக்குவதற்காக "ரௌலட் சட்டம்' என்ற கொடிய சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜாலியன் வாலாபாக்கில் கூடிய கூட்டத்தின் மீது வெள்ளை ராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டது.நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை என்னும் இந்த நிகழ்ச்சி தான் சுதந்திரப் போராட்டத்தை உத்வேகப்படுத்தியது. இந்த "ரௌலட் சட்ட'த்துக்கு எதிராகத்தான் காந்தியடிகள் தனது முதல் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால் சுதந்திர இந்தியாவில் ரௌலட் சட்டத்தை மிஞ்சும் பல சட்டங்கள் இருந்தன. இன்னும் நடைமுறையில் இருக்கின்றன.பல கொடிய சட்டங்கள் இருந்தும்கூட, பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாதது ஏன் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்களின் எதிர்ப்புக்கிணங்க பொடா சட்டம் திரும்பப் பெறப்பட்டபோதிலும் கூட அச்சட்டத்திலிருந்த பல கொடுமையான பிரிவுகளை, சிறு திருத்தங்களுடன் உள்ளடக்கி சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புத் திருத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பட்டமான மனித உரிமை பறிப்புச் சட்டம் இது. சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கு அல்லது அவர்களை மிரட்டி அடக்கி வைப்பதற்குப் பதவி வெறிகொண்ட அரசியல்வாதிகளுக்கும், காவல்துறைக்கும் இந்தச் சட்டம் மிகமிக உதவும்.ஐ.பி., ரா, சி.பி.ஐ. போன்ற மத்திய உளவு நிறுவனங்கள் உள்ளன. ஆனால் இவை போதாது என்று தேசிய புலனாய்வு அமைப்பு ஒன்றை ப. சிதம்பரம் அமைத்துள்ளார். அதற்கு அளவு கடந்த அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், 13-12-2008 அன்று தில்லியில் நடைபெற்ற சர்வதேச நீதிபதிகள் மாநாட்டில் பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்:பயங்கரவாதத் தாக்குதல்களைப் பயன்படுத்தி தனி நபர்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறிப்பதை நியாயப்படுத்த முயற்சி நடைபெறுகிறது. பயங்கரவாத வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பதில் சந்தேகப்பட்டவர்களைக் காலவரம்பின்றி சிறையிலடைத்தலும், விசாரணை என்ற பெயரால் சித்திரவதை செய்தலும், நியாயமான விசாரணை நடப்பதை மறுப்பதும் நடைபெறுகின்றன.பயங்கரவாத தாக்குதல்களின் பின்விளைவாக மக்கள் மீது கட்டுப்பாடுகளும், கண்காணிப்புகளும் விதிக்கப்படுகின்றன. மக்களின் குடியேற்றத்துக்கு நியாயமற்ற கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முனையும்விசாரணை அமைப்புகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் தேவையற்ற நடவடிக்கைகளை நீதித்துறை மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. இவ்வாறு கூறுபவர்கள்நமது குற்றவியல் மற்றும் சாட்சியம் அளிக்கும் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார்கள். யாரையும் நீண்ட காலத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறை வைக்க வேண்டும் என்றும், காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் அளிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை நீதிமன்றங்கள் ஏற்கவேண்டும் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.இது குறித்து நாடாளுமன்றந்தான் முடிவெடுக்க வேண்டும். ஆனாலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு வழங்கியிருக்கும் தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்கும் எந்த நடவடிக்கையிலும் யாரும் ஈடுபடக்கூடாது''. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கூறியிருக்கும் இந்தக் கருத்துக்கு மாறாக உள்துறை அமைச்சர் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார். அதற்கு மக்கள் ஆதரவு தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.பிரதமர் பதவிக்கு அடுத்த நிலையில் உள்ள மிகமுக்கியமான பதவி உள்துறை அமைச்சர் பதவி ஆகும். இந்தியா சுதந்திரம் பெற்றபோது பிரதமராக ஜவாஹர்லால்நேருவும் உள்துறை அமைச்சராக வல்லபாய் படேலும் பொறுப்பேற்றனர். அவருக்குப் பின்னர் ராஜாஜி, பண்டித கோவிந்த வல்லப பந்த் போன்ற மிக மூத்த தலைவர்கள் உள்துறை அமைச்சர் பொறுப்பைத் திறம்பட வகித்தனர். இத்தகைய அறிவாற்றல் மிக்க தலைவர்கள் அமர்ந்த நாற்காலியில் ப. சிதம்பரம் அமர்ந்திருக்கிறார். அந்தத் தலைவர்கள் அமர்ந்த நாற்காலியில் அமர்ந்திருப்பதனாலேயே அந்தத் தலைவர்களுக்குத் தான் சமமாகிவிட மாட்டோம் என்ற உணர்வு ப. சிதம்பரத்துக்கு எப்போதும் இருக்க வேண்டும். அந்தத் தலைவர்கள் கடைப்பிடித்த நிதானம், நிர்வாகத்திறமை, மக்களை மதிக்கும் தன்மை ஆகிய நற்பண்புகளைக் கடைப்பிடிக்க வேண்டும். செஞ்சிக் கோட்டை ஏறியவரெல்லாம் தேசிங்கு ராசனாகிவிட முடியாது.
By Ilakkuvanar Thiruvalluvan
3/19/2010 4:35:00 AM
By REDSTAR
3/19/2010 4:20:00 AM
By robinson , usa
3/19/2010 4:15:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
*