சனி, 20 மார்ச், 2010

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி



சென்னை, மார்ச் 19: பொறியியல் படிக்கும் 1,200 ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்கப்படும் என்று நிதி அமைச்சர் க. அன்பழகன் அறிவித்தார்.வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அவர் வெளியிட்ட அறிவிப்பு:ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். 20 ஆயிரம் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாநில அரசின் சிறப்பு நிதியாக ரூ. 25 கோடி ஒதுக்கப்படும்.பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் 1,200 ஆதிதிராவிடர் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில் கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்கப்படும்.ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு மொத்தமாக ரூ. 894 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் துணைக் கூறு திட்டத்துக்கு 2005-06-ல் ரூ. 567 கோடி ஒதுக்கப்பட்டது.இந்த நிதிநிலை அறிக்கையில் அதற்கான நிதி ரூ.3,828 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மொத்த ஆண்டு திட்ட ஒதுக்கீட்டில் இது 19 சதவீதமாகும்.25 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் விடுதிகளுக்கு ரூ. 12.5 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டப்படும். தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க ரூ.198 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.தனியார் கட்டடங்களில் இயங்கி வரும் 25 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர் இல்லங்களுக்கு ரூ. 12.5 கோடியில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக் கழகம் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினரைச் சேர்ந்த தொழில்முனைவோர்களுக்கு ரூ.35 கோடி தொழில் கடன் வழங்கப்படும்.வரும் நிதியாண்டில் சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த 12,500 தொழில்முனைவோர்களுக்கு ரூ. 25 கோடி தொழில் கடன் வழங்கப்படும்.கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்களையும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க இந்திய அரசியல் சட்டத்தில் தகுந்த திருத்தம் செய்ய வேண்டும் என்றார் அன்பழகன்.
கருத்துக்கள்

சாதி, பண வேறுபாடின்றி வேண்டப்படும் அனவைருக்கும் இலவச ஆங்கிலப் பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கும் முன்னதாக அனைவருக்கும் தமிழ்ப்பயிற்சியும்அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பயின்றும் தமிழ் தெரியாத நிலை தமிழர்க்கும் அயலவர்க்கும் உள்ள இழிவை முதலில் துடைத்தெறிய வேண்டும்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 3:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக