ஞாயிறு, 14 மார்ச், 2010



தலை வணங்காத் தமிழ்ச் சிங்கம்
பேராசிரியர்இலக்குவனார்

டாக்டர் ப. காளிமுத்து எம்.ஏ., பிஎச்.டி. விடுதலை ஞாயிறுமலர் 13-03-2010

தமிழகம் ஏறக்குறைய மறந்துவிட்ட நிலையில் பேராசிரியர் இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவை நினைவுபடுத்தி வரலாற்றைத் திருப்பிப் பார்க்க வைத்திருக்கிறது திராவிடர் கழகம்! மற்றவர்கள் செய்யாததை, மற்றவர்-களால் செய்ய முடியாததைத் திராவிடர் கழகம் செய்து காட்டும் என்று தமிழர் தலைவர் முழங்கிவருவது எவ்வளவு பொருத்தமுடைய வரலாற்று உண்மை என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் உணர்ந்துகொள்ள வேண்டும். பேராசிரியர் இலக்குவனாரைப் பற்றி எவரும் நினைக்காது போய்விட்டனரே என்று வருந்திக் கொண்டிருந்த நேரத்தில் விடுதலை ஏடு இலக்கு-வனாரைப் பற்றி மிக அருமையான முறையில் எழுதி எம்மை மகிழ்வித்தது!

தமிழக வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது 1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்-டமாகும். இப்போராட்டம் மதுரையில் கால்கொண்டு பெரும் புரட்சியாக வெடிப்பதற்குப் பேராசிரியர் இலக்கு-வனாரும் காரணமாவார். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து மதுரையிலிருந்து சென்னை வரை நடைப்பயணம் மேற்கொள்ளவிருந்த பேராசிரியர் இலக்குவனாரை அன்றைய காங்கிரசு அரசு இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் (ஞிமிஸி) கைது செய்து சிறையில் அடைத்-தது. இதனால் மாணவர் உலகம் கொந்-தளித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்-டம் தீவிரமடைந்தது.

மாண்புமிகு கலைஞர் நடத்தி வந்த முத்தாரம் இதழின் முன் அட்டையில் சிறைக்கம்பிகளுக்குள் இலக்குவனார் இருப்பதைப் போன்று பெரிய படம் ஒன்றை வெளியிட்டுத் தமிழ்த் தாயே சிறையில்! என்று அதற்குத் தலைப்புக் கொடுத்திருந்தார். மாண்புமிகு கலைஞர் அவர்கள் பேராசிரியர் இலக்குவனாரின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலையாகி வெளியே வந்தபோது பேராசிரியர் இலக்குவனார்க்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. காங்கிரசுக் கட்சி முதலமைச்சராக இருந்த பக்தவத்சலத்தின் தொல்லை தாங்க முடியாமல், கருமுத்து தியாகராசர் விருப்பமின்றிப் பேராசிரியர் இலக்கு-வனாரை வேலையிலிருந்து விலக்கி விட்டார். காங்கிரசாட்சியின் வரலாற்-றில் தமிழ் இன உணர்வு கொண்டோர் பணிநீக்கம் செய்யப்படுவதும் ஊர் ஊராய் இட மாற்றம் செய்யப்படுவதும் அன்று வாடிக்கையாக இருந்தது!

மிகுந்த தொல்லைக்கிடையே குறள்நெறி இதழை விடாது நடத்தி-வந்தார் இலக்குவனார். அவருக்குப் பொருளுதவி செய்ய வேண்டும் என்று மாணவர்களும் தமிழ் அன்பர்களும் கூடி முடிவு செய்தோம். மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் பொன். தினகரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்-பட்டது. இலக்குவனாரின் அன்புக்குரிய மாணவராக விளங்கிய திரு.வீ. முத்து-சாமி அவர்கள் பொருளாளராக இருந்-தார். அல்லும் பகலுமாய் அலைந்து மாணவர்களும், மற்றையோரும் பொருள் திரட்டினர்.

நிதியளிப்பு விழாவிற்குப் பேரறிஞர் அண்ணா வந்திருந்தார். மதுரை தமுக்-கம் கலையரங்கில் விழா மிகச்சிறப்பாக நடந்தது. அண்ணா, இலக்குவனார்க்கு நிதிவழங்கிச் சிறப்புரையாற்றினார். இலக்குவனாரின் பணிகளையெல்லாம் மனந்திறந்து பாராட்டிய அண்ணா, வேலை போய்விட்டது என்று கவலைப் படாதீர்கள்; 67_ இல் தி-.மு. கழகம் ஆட்சிப் பொறுப்பேற்கும். அப்போது பேரா. இலக்குவனார்க்கு உயர்ந்த பதவி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளி-யிட்டார். கலையரங்கமே கையொலி-யால் அதிர்ந்து போயிற்று!

அண்ணா அறிவித்ததைப் போலவே தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. சென்னை மாநிலக்கல்லூரியின் தலைமைத் தமிழ்ப் பேராசிரியராக இலக்குவனார் நியமிக்-கப்பட்டார். தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ந்-தன!

ஓராண்டுக் காலம் மாநிலக் கல்லூரியில் பணியாற்றி விட்டு, அதன் பின்னர் ஆந்திராவிலுள்ள உசுமானி-யாப் பல்கலைக் கழகப் பேராசிரிய-ரானார் இலக்குவனார்.

எதிர்பாராத விதமாக அறிஞர் அண்ணா நோய்வாய்ப்பட்டார். அண்ணா மறைந்த நாளன்று பேரா-சிரியர் இலக்குவனார் நேராக என் அறைக்கு வந்துவிட்டார். (அப்போது திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் நான் தயங்கியி-ருந்தேன். அது மாநிலக் கல்லூரியின் மாணவர்-விடுதி) என் அறையே கண்ணீ-ரால் நிறைந்திருந்ததைக் கண்ட பேராசிரியர், ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதார். அவருக்கு நாங்கள் ஆறுதல் சொல்ல வேண்டிய-தாகிவிட்டது.

இதற்குச் சில திங்கள் முன்பாக இலக்குவனாரின் இனிய மாணவரான திரு. வீ. முத்துசாமி அவர்களையும் மதுரை தியாகராசர் கல்லூரி நிருவாகம் பணி நீக்கம் செய்துவிட்டது. பேரா-சிரியர் இலக்குவனார் தொலைபேசி-யில் என்னை அழைத்து முத்துசாமிக்கு உதவுங்களையா என்றார். பேரா-சிரியர் மிகவும் மனம் வருந்தியிருந்தார் என்பதை அவருடைய குரல் உணர்த்-தியது. திரு.வீ.மு. அவர்கள் மாசில்லாத தமிழன்பர், தன்மான உணர்ச்சி மிக்க-வர். தந்தை பெரியார் மீது அளவற்ற அன்பு கொண்டவர். பேராசிரியர் இலக்கு-வனார் என்னைத் தொலை பேசியில் அழைத்துப் பேசிக் கொண்-டிருந்த போதே திரு. வீ.மு. அவர்கள் என்னைப் பார்ப்பதற்கு வந்துவிட்டார்.

உடனடியாக அவரை அழைத்துக் கொண்டு தமிழர் தலைவரிடம் சென்று நிலைமையை விளக்கினேன். தமிழர் தலைவரின் நன்முயற்சியால் இரண்டே நாட்களில் திரு. வீ.மு. அவர்களுக்கு அரசினர் கல்லூரியில் விரிவுரையாளர் பணி கிடைத்தது. பேராசிரியர் இலக்குவனார் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.

ஊசுமானியாப் பல்கலைக் கழகத்திலிருந்து தமிழகத்திற்குத் திரும்பிய பேராசிரியர் இலக்குவனார் தமிழ்நாட்டில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ஆவதற்குப் பெரிதும் முயற்சி செய்தார். இரவு பகலாகப் பல்வேறு துறை வல்லுநர்-களையும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துத் தன் பெயரைத் துணை வேந்தர் பதவிக்குப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார். பேராசிரியரின் பையைத் தூக்கிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து நான் ஓடினேன்!

பேராசிரியர் இலக்குவனார் தமிழுக்-காகவும், தமிழ் இனத்திற்காகவும் பல்வேறு ஈகங்களைச் செய்தவர். அவர் கேட்காமலேயே துணைவேந்தர் பதவியை நாம் அவருக்குக் கொடுத்-திருக்க வேண்டும். அவர் கேட்டும் அது கிடைக்காது போயிற்று. ஆடை-யில் அழுக்குப் படாமல் தமிழ்த்-தொண்டு செய்தவர்களுக்குத் துணை-வேந்தர் பதவி கிடைத்தது. திராவிடர் இயக்க வரலாற்றில் நாம் கவனிக்காமல் விட்ட அறிஞர் பெருமக்கள் பலராவர். அது தனி ஆய்விற்குரியது! சிறையில் வாடிய செந்தமிழ்ச் சிங்கமாம் இலக்குவனார்க்குத் துணை வேந்தர் பதவி மட்டுமல்ல, எந்தப் பதவியும் கிட்டவில்லை. அவரையும் மொழி-நூல் மூதறிஞர் தேவநேயப் பாவாண-ரையும் பன்மொழிப்புலவர் அப்பாத்-துரையாரையும் நாம் சரியாகப் பயன்-படுத்திக் கொள்ளாமல் போய்-விட்டோம்.

பேராசிரியர் இலக்குவனார் தொல்-காப்பியத்தை ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவருடைய ஆய்-வேட்டை இரண்டு முறை திருப்பி அனுப்பிவிட்டார்கள். தொல்காப்பியரின் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று இலக்குவனார் தம் ஆய்வேட்டில் நிறுவியிருந்தார். இக் கருத்தினை ஏற்காத_விரும்பாத பார்ப்-பனச் சார்புடைய தேர்வுக்குழுவினர் தொல்காப்பியர் காலத்தைக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குக் கொண்டு-வருமாறு தெரிவித்தனர். ஆனால் பேரா. இலக்குவனார் தம் கருத்தை மாற்றிக் கொள்ளாமல், டாக்டர் பட்டத்தை விடத் தொல்காப்பியர் காலமே இன்றியமை-யாதது என்று கருதினார். அதனால் மேலும் பல சான்றுகளை எடுத்துக் காட்டித் தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று துணிவுடன் எடுத்துக் கூறினார். வேறுவழியின்றிப் பேராசிரி யரின் கருத்தை ஏற்றுக் கொண்டு சென்னைப் பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

பேராசிரியர் இலக்குவனாரின் ஆய்வேடு _ ‘Tholkappiam in English with ciritical studies’ என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. அந்தக் காலத்தில் தமிழைப் பற்றி ஆராய்ச்சி செய்தாலும் ஆங்கிலத்தில்தான் ஆய்-வேட்டை எழுதித்தரவேண்டும். பேரறி-ஞர் அண்ணா இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

அண்ணா மேல் நாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது தொல்-காப்பியத்தையும் திருக்குறளையும் உடன் எடுத்துச் சென்றார்கள். பேராசிரியர் இலக்குவனார் ஆங்கிலத்தில் மொழி-பெயர்த்த தொல்காப்பியத்தை மதுரையி-லிருந்து வரவழைத்து அதனைக் கொண்டு சென்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழக வடமொழிப் பேராசிரி-யாக இருந்த பி. சுப்பிரமணிய சாஸ்திரியும் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். எது சிறந்தது, எது நம்முடையது என்பதை அண்ணா நமக்கு அடையாளம் காட்டுவதற்காக இலக்குவனார் மொழி பெயர்த்த தொல்காப்பியத்தை எடுத்துச் சென்றார் என்பதை அன்பர்கள் உற்று நோக்க வேண்-டும். யேல் பல்கலைக் கழக மாண-வர்களுக்கு இலக்குவனாரின் புத்தகத்-தையே அண்ணா பரிசாக அளித்துள்-ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சென்னை மாநிலக் கல்லூரியில் இலக்குவனார் பணியாற்றியபோது அவரிடம் பயின்ற மாணவர்கள் அவரு-டைய படத்தைத் தமிழ்த்துறையில் திறந்து வைக்க வேண்டும் என்று விரும்பினார்கள். அப்போது மாநிலக் கல்லூரித் தமிழ்ப் பேரவையின் மாணவர் தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டிருந்தேன். பேராசிரியரிடம் படத்திறப்பு நிகழ்ச்சியைப் பற்றிக் கலந்துரையாடினேன். முதலமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்களை அழைத்துத் தன் படத்தைத் திறக்குமாறு பேரா. இலக்குவனார் அறிவுறுத்தினார். மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நேரம் கிடைக்காது போனமையால் மாண்புமிகு மதியழகன் அவர்களையும் அமைச்சர் கோவிந்தசாமி அவர்களை-யும் அழைத்து வந்து இலக்குவனாரின் படத்தையும் திருவள்ளுவர் படத்தையும் திறந்து வைத்து விழாவைச் சிறப்புடன் நடத்தினோம்.

கல்வி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் பயிற்றுமொழிச் சிக்கல் வந்தபோது ஆங்கிலத்திற்குச் சார்பாகச் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். கொதிப்படைந்து போன பேரா. இலக்-குவனார், உடனே தமிழ் நாவலர் ஆங்கி-லத்தின் காவலராகிவிட்டார் என்று துணிவுடன் அறிக்கை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார். (அறிஞர் வ.சுப.மாணிக்கம் அவர்களும் கூட நாவலரின் கருத்தைக் கண்டித்து நீண்ட-தோர் அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை அன்பர்கள் யாரிட-மாவது இருந்தால் அதன் நகல் ஒன்றினை எனக்கு அனுப்பி உதவுமாறு வேண்டுகிறேன்.) பேரா. இலக்குவனார் தம்மைக் கண்டித்து அறிக்கை வெளி-யிட்டுவிட்டாரே என்று நாவலருக்கு அவர்மீது வருத்தம்!

பேரா. இலக்குவனார் யாருக்கும் அஞ்சாது தம் கருத்துகளை வெளிப்-படுத்தியவர். பதவிக்காகத் தம் கருத்து-களை அவர் ஒருபோதும் மாற்றிக் கொண்டதில்லை. தமிழ்மொழியை ஆரியத்-தின் பிடியிலிருந்து விடுவிப்ப-தற்காக உழைத்த பெருமகன் அவர். தன் மகனுக்கு மறைமலை என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர். தன்மான உணர்ச்சி மிக்கவர். தமிழுக்குத் தீங்கு வருகிறது என்றால் அதனைக் களைவதற்காக களம் அமைத்தவர். பணியிழப்பைப் பற்றியோ சிறைச்சாலையைப் பற்றியோ அவர் சிறிதும் கவலைப் பட்டதில்லை.

தந்தை பெரியார் தமிழைக் காட்டு-மிராண்டி மொழி என்று கூறியவுடன் சிலருக்குச் சினம் பொத்துக் கொண்டு வந்தது. இந்து நாளிதழில் கூட அவர்கள் தந்தை பெரியாரின் கருத்தைக் கண்டித்துக் கடிதம் எழுதினார்கள். பேரா. இலக்குவனார் அவர்களை அழைத்துத் தந்தை பெரியார் ஏன் அவ்-வாறு கூறினார் என்பதை அவர்களுக்கு எடுத்துக் கூறித் தெளிவுபடுத்தினார். அடடா அவசரப்பட்டு இந்துவுக்கு எழுதிவிட்டோமே என்று வருத்தப்-பட்ட பேராசிரியர்களை நான் அறி-வேன்.

யாருக்கும் தலைவணங்காது வாழ்ந்த தன்மானத் தமிழ்ச் சிங்கமாம் பேரா-சிரியர் இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவைத் தமிழக அரசு சிறப்புடன் நடத்தவேண்டும் என்பது தமிழன்பர்-களின் வேண்டுகோளாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக