சென்னை, மார்ச் 19: ""அரசு கல்லூரிகளில் எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுகலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இந்த முறை அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.2010-2011-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதியமைச்சர் க.அன்பழகன் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தார். அதில், உயர் கல்வி தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:""மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்காக மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் வரும் நிதியாண்டில் தொடங்கப்படும்.விழுப்புரத்தில்: விழுப்புரத்தில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையம் உருவாக்கப்படும். 4 புதிய கலை - அறிவியல் கல்லூரிகள்: மத்திய அரசின் நிதியுதவியுடன் நான்கு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தொடங்கப்படும்.மத்திய அரசு நிதி உதவியுடன் ஏழு புதிய பலதொழில்நுட்பக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் ஒரு பலதொழில்நுட்பக் கல்லூரியும் வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும்.முதுகலைப் பட்டப்படிப்பு: அரசுக் கல்லூரிகளில் எம்.ஏ., எம்.எஸ்சி., போன்ற முதுகலைப் பட்டப்படிப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும். இந்த முறை வரும் கல்வியாண்டில் இருந்து நடைமுறைபடுத்தப்படும்.அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் மூலம் பண்ரூட்டி, தஞ்சாவூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நகரங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.இந்தக் கல்லூரிகளுக்குத் தேவையான கட்டடங்கள் ரூ.93 கோடி மதிப்பில் வரும் நிதியாண்டில் கட்டப்படும். பொறியியல் மற்றும் பலதொழில்நுட்பக் கல்லூரிகளில் 50 வகுப்பறைகள் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்படும். 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆய்வகங்கள் கட்டுவதற்கும், 19 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் ரூ.3 கோடியே 89 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்புத் தகுதி மையம் அமைக்கப்படும்'' என்று அறிவித்தார் அன்பழகன்.
கருத்துக்கள்
அனைத்தும் நல்ல திட்டங்களே. பாராட்டுகள்.ஆனால், மழலைக் கல்வியிலேயே தனியார் அடிக்கும் கொள்ளை அரசு அறியாதது அல்ல. தனியாரின் கல்விக் கொள்ளைக்கும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
3/20/2010 2:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *3/20/2010 2:57:00 AM