வியாழன், 28 மே, 2009

பொது இடங்களில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்:
மலேசிய வாழ் தமிழர்கள் அரசுக்கு கோரிக்கை

தினமணி
First Published : 28 May 2009 08:58:00 PM IST


கோலாலம்பூர், மே 27: தமிழர்களின் கலாசாரம் மற்றும் தமிழ் மொழியை பாதுகாக்கும் விதத்தில் மலேசியாவில் விமான நிலையங்கள் உள்பட பொது இடங்களில் அறிவிப்புகளை தமிழ் மொழியில் வெளியிட வேண்டும் என மலேசிய வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மலேசிய வாழ் தமிழர்கள் அடங்கிய ஒரு குழுவினர், அந்நாட்டு மனித ஆற்றல் அமைச்சர் சுப்பிரமணியத்தை சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்போர்கள் தமிழர்களின் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் ஆடை அணிவதில்லை. அவர்கள் தமிழையும் சரியாகப் பேசுவதில்லை. வானொலி நிகழ்ச்சியிலும் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை. வானொலி நிகழ்ச்சியில் தமிழைப் பேசுபவர்களும் சரியாகப் பேசுவதில்லை என்றும் தமிழ்க் குழுவினர் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். அமைச்சர் உறுதி: மலேசிய வாழ் தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அமைச்சர் சுப்பிரமணியம், இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாக உறுதியளித்தார். அத்துடன், மேற்கத்திய ஊடகங்கள் இளைய சமுதாயத்தின் மீது பெரிய அளவில் கலாசாரத் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தமிழ் மொழிக்கான ஆதரவு குறைந்து வருகிறது. இதை அனுமதிக்காத வகையில் தமிழர்களின் கலாசாரத்தையும், தமிழ் மொழியையும் பாதுகாக்க மலேசிய வாழ் தமிழர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார். மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் சமய கல்வியை ஒரு பாடமாக இடம்பெறச் செய்வது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழுக்கு முதன்மை அளித்துவந்த மலேசியா அரசாங்கம் இந்திய நாட்டிலேயே அவ்வாறு முதன்மை அளிக்காமையால்தான் தன்நிலையை மாற்றிக் கொண்டது. மேலும் தமிழ் வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்படும் பொழுது இந்திய அரசால் அது இந்தி வளர்ச்சி அல்லது சமற்கிருத வளர்ச்சித் திட்டமாக மாற்றப்படுகிறது. தமிழக அரசு செம்மொழித் தமிழ் உயராய்வு மத்திய நிறுவனம் மூலம் தமிழ் வளர்ச்சிக்கும் தமிழ் மலாய் ஒப்பிலக்கிய வளர்ச்சிக்கும் தாராளமான தொகை ஒதுக்கித் தமிழ் மறுமலர்ச்சிக்கு வழி வகை காண வேண்டும். தமிழ் நாட்டில் ஆட்சியாளர்களின் குடும்ப ஊடகங்களே பண்பாட்டைச் சிதைக்கும பொழுது மலேசியாவாவது முன் மாதிரியாகத் திகழ்ந்து அதனை நாம் பின்பற்றுவோமாக!


அன்புடன் இலக்குவனார திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 4:39:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக