புதன், 27 மே, 2009

"தமிழ் புளூராக்' படைத்த சைமன் காசிச் செட்டி

First Published : 26 Apr 2009 11:42:00 PM IST







தமிழகத்தில் 1812-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சென்னை கல்விச் சங்கம் என்பது தமிழ்நாட்டில் ஆங்கிலமும் தமிழும் அறிந்த ஒரு புதிய மாணவத் தலைமுறையை உருவாக்கியது. இதே காலகட்டத்தில் இலங்கையின் யாழ்ப்பாணப் பகுதியில் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு கிறிஸ்தவ நிறுவனங்கள் நிறைய பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி, ஆங்கிலமும் தமிழும் கிறிஸ்தவ மதத் தத்துவங்களும் அறிந்த மாணவர்களைப் பல்லாயிரக்கணக்கில் உருவாக்கத் தொடங்கின. இந்தப் பின்புலத்திலிருந்து வெளிவந்த மாணவர்களில் பலருக்குத் தமிழ்மொழியின் பழைமையையும் தமிழ்ப் புலவர்களின் வரலாற்றையும் ஐரோப்பியப் புலவர்களின் வரலாறு போன்று உலகத்தினருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்களில் ஒருவர்தான் சைமன் காசிச் செட்டி என்ற பல்துறை அறிஞர்.

இவர் 1859-இல் "தமிழ் புளூராக்' என்ற பெயரில் ஆங்கிலத்தில் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் அவர்களின் வரலாறு குறித்தும் ஒரு நூல் எழுதினார்.

புராண மயமாகச் சொல்லப்பட்டு வந்த தமிழ்ப் புலவர்களின் கதைகளை ஒரு வரலாற்று நூலாக்கும் முதல் முயற்சி இதுதான். கி.பி. 45-இல் ஏதென்ஸ் நகரைச் சேர்ந்த புளூராக் என்ற அறிஞர் கிரேக்க நாட்டுப் புலவர்களைப் பற்றி எழுதிய வரலாற்று நூல்தான் உலகில் தோன்றிய முதல் இலக்கிய வரலாறாகக் கருதப்படுகிறது. பிற்காலத்தில் ஐரோப்பிய மொழிகளின் இலக்கிய வரலாறுகளுக்கெல்லாம் மூலமாக அமைந்து பெயர் பெற்றவரான புளூராக்கை தமிழ்ப் புலவர்களின் வரலாற்றைக் கூறும் நூலுக்குப் பெயராக இட்டு மகிழ்ந்தார் சைமன் காசிச் செட்டி. இவர் 1807-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21-ஆம் தேதி ஈழவளநாட்டில் கற்பிட்டி என்னும் ஊரில் கவிரியேல் காசிச் செட்டியின் புதல்வராகப் பிறந்தார். கற்பிட்டி வடமேல் மாகாணத்தில் உள்ளது. புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கிய காசிச் செட்டி, 1828-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம் மணியக்காரராகவும் 1833-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தில் முதலியாராகவும் கடமை செய்தார். 1838-ஆம் ஆண்டு முதல் 1845-ஆம் ஆண்டுவரை இலங்கைச் சட்ட நிரூபண சபை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, 1848-ஆம் ஆண்டு முதலாகத் தாற்காலிக நீதிபதியாகவும் 1852-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார். அரசியலில் ஈடுபட்டுப் பல பணிகளில் உழைத்தபோதும் காசிச் செட்டி, தமது மொழிக்கும் நாட்டுக்கும் தம் எழுத்துகள் மூலம் சிறப்புத் தேடித் தருவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய தமிழ்த்தொண்டை அவர் வாழ்ந்த காலத்துத் தமிழறிஞர்கள் போற்றியுள்ளனர். பழந்தமிழ் நூல்களைப் பற்றியும் அதன் ஆசிரியர்கள் குறித்தும் அறிவியல் பூர்வமான தகவல்களைத் தரவேண்டும் என்பதே தமது விருப்பம் என்று புளூராக் நூலின் ஆங்கில முகவுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் அத்தகைய ஆய்வுக்குத் தேவையான நாட்டு வரலாறுகளோ புலவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளோ தமிழ்மொழியில் இல்லை. எனவே, புராணமயமான செய்திகள், செவிவழிச் செய்திகள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு அவற்றிலுள்ள மிகையான புனைவுகளை நீக்கிவிட்டுத்தான் இந்த வரலாற்றை உருவாக்கியதாகக் கூறுகிறார். எனவே, தாம் எழுதிய வரலாறு குறைபாடுகள் நிறைந்ததாக இருக்கும் என்று எழுதுகிறார். ஆயினும் வருங்காலத் தலைமுறையினர் எதிர்காலத்தில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு சரியான வரலாற்றை உருவாக்க இந்நூல் துணைபுரியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார். "ஆசியா ஆய்வுகள்' என்னும் பத்திரிகை திருவள்ளுவர் காலம் கி.பி. 8-ஆம் நூற்றாண்டு என்று கூறியது. இதைக் காசிச் செட்டி மறுக்கிறார். சிவவாக்கியர், திருமழிசையாழ்வார் வாழ்ந்த காலமான 8-ஆம் நூற்றாண்டு என்றனர். சிவவாக்கியர் பாடலில் முகம்மதியரைப் பற்றிய குறிப்பு வருவதால் தமிழ்நாட்டில் முகம்மதியர் படையெடுப்புக்குப் பிந்தைய காலத்தவராகத்தான் வாழ்ந்திருக்க முடியும் என்று கருத்துரைக்கிறார். மண்டலபுருடரின் காலத்தைப் பற்றிக் கூறுமிடத்து, தமது நிகண்டின் ஒன்பதாம் தொகுதியில் கிருஷ்ணதேவராயரைப் பாராட்டுவதால் கி.பி. 1508 முதல் கி.பி.1530 வரை ஆட்சி புரிந்த ராயரின் காலமே மண்டலபுருடரின் காலம் என்கிறார். இதேபோன்று "ஞானவெட்டியான்' என்ற நூலைத் திருவள்ளுவர் எழுதினார் என்று கூறுவதும், "அல்லி அரசாணிமாலை' புகழேந்திப் புலவர் எழுதியது என்று கூறுவதும் அவ்விரு பெரும் புலவர்களை இழிவுபடுத்தியதாகும் என்று கருத்துரைக்கிறார். 1848-ஆம் ஆண்டில் "தமிழ்நூற் பட்டியல்' என்னும் கட்டுரையில் சிலப்பதிகாரம், சிந்தாமணி, வீரசோழியம், மாறனலங்காரம், சீறாபுராணம் போன்ற நூல்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார். ஆனால் இந்நூலின் ஆசிரியர்களைப் பற்றி இவருக்கு எந்தச் செய்தியும் தெரிந்திருக்கவில்லை. 1876-ஆம் ஆண்டு சிலப்பதிகாரம் புகார் காண்டத்தை உரையுடன் வெளியிட்ட தி.ஈ.இராகவாச்சாரியார், "சேரமான் பெருமாணாயனார் இயற்றிய சிலப்பதிகாரம்' என்று அச்சிட்டார். 1929-இல் தொல்காப்பியம் சொல்லதிகாரம் தெய்வச்சிலையார் உரையை பேராசிரியர் உரை என்று அச்சிட்டுவிட்டுப் பின்னர் திருத்தி அமைத்து வெளியிட்டனர். 1920-இல் உ.வே.சா. பரிபாடல் நூலைப் பதிப்பித்தபோது அதன் உரையாசிரியர் யாரென்று அறியாமல் இருந்தார். ரா.ராகவையங்கார்தான், பரிபாடலின் உரையாசிரியர் பரிமேலழகர் என்பதை நிறுவுகிறார். அதனை உ.வே.சா.வும் ஏற்றுக்கொள்கிறார். இத்தகைய வரலாற்றையெல்லாம் நோக்கும்போது காசிச் செட்டிக்கு மேற்கூறிய நூல்களின் ஆசிரியர்கள் பெயர் தெரியாமலிருந்தது வியப்பானதல்ல. வரலாறு, சமூகவியல், மானிடவியல், மொழியியல் போன்ற துறைகளிலும் புலமையாளராகத் திகழ்ந்தார். "கற்பிட்டியில் கண்டெடுத்த நாணயங்கள்' "பண்டைக்காலம் தொட்டு ஒல்லாந்தர் காலம் வரையிலுள்ள வரலாறு' ரேணர் எழுதிய இலங்கை வரலாறு பற்றிய நூலின் மொழிபெயர்ப்பு போன்ற கட்டுரைகளும் நூலும் அவருடைய வரலாற்று ஆர்வத்தைக் காட்டுகின்றன. "முக்குவர் வரலாறு' "இலங்கை இசுலாமியரின் பழக்கவழக்கங்கள்', "சிலோன் கெஸட்டியர்' போன்ற நூல்கள் இவருடைய சமூகவியல் அறிவை வெளிக்காட்டுவன. மாலத்தீவு மொழிக்கும் சிங்கள மொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைக் காட்டும் சொற்பட்டியல், ஜாவா மொழிக்கும் வடமொழிக்கும் இடையேயுள்ள ஒற்றுமை, மலையகராதி (1840) என்னும் அகராதி ஆகியன இவருடைய மொழியியல் அறிவை விளக்குகின்றன. காசிச் செட்டி, 1860-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் தேதி காலமானார். இத்தகைய வலுவான அறிவியல் துறைகளின் துணையுடன் இவர் ஆக்கித் தந்த தமிழ்ப் புலவர் வரலாறான "புளூராக்' பிற்காலத்தில் அறிவியல் பூர்வமாகத் தமிழ் ஆய்ந்த அறிஞர்களுக்கெல்லாம் ஒளிவிளக்காக இருந்தது என்று சொன்னால் அது மிகையன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக