கட்டுரைகள்
பரத்தையர் கண்டிப்பின் உச்சம்
First Published : 24 May 2009 12:53:00 AM IST
சங்க இலக்கியங்கள் ஐந்திணை அடிப்படையில் பாடப்பட்டுள்ளன. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு வகையான ஒழுக்கம் தொல்காப்பியரால் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மருதத் திணைக்குரிய உரிப்பொருளாக ஊடலும் ஊடல் நிமித்தமும் கூறப்பட்டுள்ளது. தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தின் காரணமாக இத்திணையில் ஊடல் நிகழும். தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையரிடம் செல்வதும் அவன் திரும்பி வரும்போது தோழியோ தலைவியோ கண்டித்தலும் மருதத்திணைப் பாடல்களின் தன்மையாகும். சங்க இலக்கியத்துள் 251 மருதத்திணைப் பாடல்கள் உள்ளன. இவற்றின் 33 பாடல்கள் பரத்தமை தொடர்பாகப் பேசவில்லை. தலைவி கருவுற்றிருந்த காலத்திலும் அவள் குழந்தை பெற்றிருந்த காலத்திலும் தலைவன் பரத்தமை ஒழுக்கம் மேற்கொண்டதை மருதத்திணைப் பாடல்கள் சுட்டியுள்ளன. சிறுபான்மையாக வேறு காரணமும் உண்டு. மேற்சுட்டிய இரண்டு வகையான சூழல்களில் தலைவன் பரத்தையரை நாடினாலும், அவர்களோடான அவன் தொடர்பு தொடர்ந்து இருந்ததையும் ஒருசில பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. தலைவி குழந்தை பெற்றிருந்ததை அறிந்து, பரத்தை வீட்டிலிருந்து வந்த தலைவனையும் ஒருசில பாடல்கள் சுட்டியுள்ளன. பரத்தமை ஒழுக்கம் மேற்கொண்ட தலைவனைத் தலைவியும் தோழியும் கண்டிப்பதைச் சங்க இலக்கிய மருதப் பாடல்கள் எங்கும் காணமுடிகிறது என்றாலும், முற்றும் முழுதாக அவனை ஒதுக்கி வைக்கும் போக்கு இல்லை. ஆதலால் தான் தலைவி தலைவனுக்கு வாயில் மறுத்தால் தோழி வாயில் ஏற்பதும், தோழி வாயில் மறுத்தால் தலைவி ஏற்பதும் இருந்துள்ளது. என்னதான் தலைவன் தவறு செய்தாலும் அவர் தமக்கு "அன்னையும் அத்தனும் அல்லரோ' என்று பேசுவதைக் (குறு.93) காணமுடிகிறது. தலைவனைக் கண்டிப்பது அவன் திருந்த வேண்டும் என்பதற்காகவே ஆகும். இப்படிப்பட்ட சமூகச் சூழலில் குறுந்தொகையில் இருக்கும் ஒரு பாடல் (354) பரத்தையர் கண்டிப்பின் உச்சநிலையைப் பேசுவதாக உள்ளது. தலைவன் ஒருவன் பரத்தமை ஒழுக்கம் மேற்கொள்பவனாக இருக்கிறான். எவ்வளவு சொல்லியும் அவன் திருந்துவதாக இல்லை. இந்நிலையில் தலைவனிடம் தோழி பேசுவதாக அப்பாடல் அமைந்துள்ளது. என்பது அப்பாடல். இதற்கான உ.வே.சா. உரை விளக்கம் வருமாறு: தண்ணீரிலே நீண்டநேரம் துளைந்து மூழ்கி விளையாடினால் கண்களும் சிவப்பு நிறம் பெறும். பலமுறை உண்டோரது வாயினிடத்து இனிப்பான தேனும் புளிப்புச் சுவையுடையதாகத் தோன்றும். ஆதலால் நீயும் எம்மைப் பிரிவதற்கு விரும்பினாயானால் அழகிய குளிர்ந்த பொய்கையுடைய எம் தந்தையினது ஊரினிடத்தே நஞ்சுக் கடுமையுடைய பாம்புகள் திரியும் தெருவில் நீ முன்பு நடுங்குவதற்குரிய மிகுந்த துன்பத்தை நீக்கிய எம்மை வீட்டினிடத்துக் கொண்டு சேர்ப்பாயாக. பொதுவாகக் கணவன் மனைவிக்கிடையே சண்டை ஏற்படும் போது பெண்கள் கோபம் கொண்டு தாய்வீடு சென்றுவிடுவதும், "என்னை என் தாய்வீட்டில் விட்டுவிட்டு நீ எப்படி வேண்டுமானாலும் ஆடு' என்று பேசுவதையும் இன்றைய உலகில் காணமுடிகிறது. இதுவும் கூடக் கணவனின் தவறைச் சுட்டி அவனைத் திருத்துவதற்கான ஓர் உத்தியாகும். பெண்களிடம் இருக்கும் கணவனைத் திருத்துவதற்கான கடைசி ஆயுதமும் இதுதான். கோபத்தின் உச்சநிலை என்றும் இதனைக் கொள்ளலாம். இன்றைய சமூகத்திலிருக்கும் இந்நிலையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியப் பாடலும் பிரதிபலித்திருப்பது வியப்பாகத்தான் உள்ளது. எவ்வளவுதான் கணவன் தவறு செய்தாலும் "அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ' என்று பேசப்பட்ட அதே சமூகத்தில் தான் இந்தப் பதிவும் காணப்படுகிறது என்பது எண்ணிப்பார்க்கத் தக்கதாகும். உ.வே.சா. இப்பாடலைத் தோழி கூற்றாக வைத்துள்ளார். நச்சினார்க்கினியரும் அவ்வாறே கருதியுள்ளார். ஆனால் இளம்பூரணரோ, "தலைவனைத் தலைவி நீங்கித் தனிமையுறுதல் பெரிதாகலின் ஆண்டு அலமரல் பெருகிய காமத்தின் மிகுதிக்கண் தலைவி கூறியது' என்று குறிப்பிட்டுள்ளார். தலைமக்களைச் சேர்த்து வைப்பதில் தோழிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. கையுறை ஏற்றல் தொடங்கி, உடன்போக்கு அனுப்பிவைத்தல் வரை அவளது பாத்திரம் மிகச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளது. தலைமக்களின் கற்பு வாழ்க்கையிலும் தோழி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளாள். என்றாலும் கூட "எங்களை எங்கள் தந்தை வீட்டில் கொண்டு போய் விடு' என்று பேசும் அளவுக்கு அவளுக்கு உரிமை இருந்திருக்குமோ என எண்ணிப்பார்க்க வேண்டும். எவ்வளவு நடந்தாலும் தோழி தலைமக்களைச் சேர்த்து வைக்க முயல்வாளே தவிர, பிரித்து வைக்க முயல மாட்டாள். எனவே இக்கூற்றைத் தலைவி கூற்றாகக் கொள்வதுதான் பொருத்தமானதாக இருக்கும். எவ்வாறாயினும் தவறு செய்யும் தலைவனைக் கண்டிப்பதில் பெண்மையின் கோபம் இப்பாடலில் உச்ச நிலையை அடைந்துள்ளது என்பதை அறிய முடிகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக