வியாழன், 28 மே, 2009

பிரபாகரனின் மனைவி, மகள் தப்பிவிட்டனர்?

தினமணி
First Published : 28 May 2009 01:48:00 AM IST


கொழும்பு, மே 27: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலசந்திரன் என்ன ஆனார்கள் என்பது குறித்து இலங்கையிலிருந்து அன்றாடம் ஒன்றுக்கு ஒன்று முரணான தகவல்கள் வெளியாகின்றன. மதிவதனியும் இளைய மகனும் தமிழகம் வழியாக ஐரோப்பிய நாட்டுக்குத் தப்பிவிட்டனர் என்று பிரபாகரனுக்கு உதவியாக இருந்த ஒருவர் தெரிவித்ததாக ""பாட்டம்லைன்'' என்ற பத்திரிகைத் தெரிவிக்கிறது. அந்த உதவியாளர் யார் என்று அது தெரிவிக்கவில்லை. புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் உச்ச கட்டத்தை அடைந்தபோது பிரபாகரனின் மகள் அயர்லாந்து நாட்டில் படித்துவந்தார். அவர் அங்கிருந்து இலங்கைக்கு வர விரும்பியபோது வேண்டாம் என்று பிரபாகரன் தடுத்துவிட்டாராம். அயர்லாந்திலிருந்து ஆஸ்லோவுக்குச் செல்லுமாறு கூறினாராம். அங்கே அவருக்கு உதவி செய்யக்கூடியவர்கள் அதிகம் இருந்ததால் அப்படி கூறியிருக்கக் கூடும் என்று இலங்கை அரசு வட்டாரங்கள் கருதுகின்றன. ஆனால் இதை உறுதிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை. இப்போதும் அவர் ஆஸ்லோவில்தான் இருக்கிறார் என்று கூறிவிட முடியாது. தமிழகம் வழியாக: மதிவதனியும் பாலசந்திரனும் இலங்கையிலிருந்து படகு வழியாக தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்றதாகவும் அங்கு தயாராக இருந்த விடுதலைப்புலி ஒருவர் அவ்விருவரையும் விமானம் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்ததாகவும், அங்கிருந்து அவர்கள் ஏதோ ஒரு நாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் "பாட்டம்லைன்' பத்திரிகை தெரிவிக்கிறது. புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த கடுமையான சண்டையில் பிரபாகரன் கொல்லப்பட்டதாகக் கூறிய ராணுவம் அவருடைய உடலையும் காட்டியது. ஆனால் அப்போது அவர்களுடைய குடும்பத்தவர் பற்றி ஏதும் தெரிவிக்கவில்லை. சில நாள்கள் கழித்து நந்திக்கடல் பகுதியிலேயே பிரபாகரனின் மனைவி, மகள், இளைய மகன் ஆகியோரின் உடல்களும் இருந்ததாகக் கூறியது. ஆனால் மற்ற ராணுவ வட்டாரங்களோ பெண்களின் உடல்களோ சிறுவர்களின் உடல்களோ அங்கு காணப்படவில்லை என்று மறுத்துள்ளன. எனவே இவர்களின் தகவல்கள் தெளிவை அளிப்பதற்குப் பதில் மேலும்மேலும் குழப்பத்தையே அளிக்கின்றன. அடையாளம் கண்டது எப்படி? நந்திக்கடல் பகுதியில் பிரபாகரனுடன் இலங்கை ராணுவத்தின் அதிரடிப்படை வீரர்கள்தான் சண்டையிட்டனர். அவர்களுடைய மரபுப்படி இறந்த வீரர்களின் ஆயுதங்களை மட்டும் அவர்கள் கைப்பற்றி தங்களுடைய படைப்பிரிவுத் தலைவரிடம் அளிப்பார்கள். உடல்களைக் கைப்பற்றுவதோ அடையாளம் காண்பதோ அவர்களுடைய வேலை அல்ல. மே 18-ம் தேதி மாலை கமாண்டோ படையைச் சேர்ந்த இளம் வீரர் ஒரு பிஸ்டலையும் இடுப்பில் தொங்கவிட்டுக்கொள்ளும் துப்பாக்கி உறையையும் எடுத்துச்சென்று தனது படைத் தலைவரிடம் அளித்தார். அதில் ""டி.வி.பி. 001'' என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அதைப் பார்த்த அந்த படைப்பிரிவுத் தலைவருக்கு அதிர்ச்சி. அது பிரபாகரனுடையது என்பதால்தான் அந்த அதிர்ச்சி. அதில் இருந்த எழுத்துகளை அவர் மீண்டும் ஒருமுறை படித்தார். டி.வி.பி. என்பது தமிழ் விடுதலைப் புலிகள் என்பதன் சுருக்கம். 001 என்பது அந்த இயக்கத்தின் தலைமகன் என்பதால் பிரபாகரனுக்கு அளிக்கப்பட்ட எண். அதையடுத்தே அந்தச் சண்டையில் ""பிரபாகரன் இறந்ததை'' அவர்களால் அறிய முடிந்தது. பிரபாகரனின் உடலை அடையாளம் காண, அவருடனே பல ஆண்டுகள் இருந்த கருணா அம்மானும், தயா மாஸ்டரும் வரவழைக்கப்பட்டனர். பிரபாகரனின் உடலில் இருந்த மச்ச, மருவுகள் மற்றும் காயத் தழும்பு அடையாளங்களை நன்கு அறிந்த அவர்கள், அது பிரபாகரன்தான் என்பதை உறுதிப்படுத்தினர். இவ்வாறு "பாட்டம்லைன்' தெரிவிக்கிறது. தற்கொலைப்படையைச் சேர்ந்தவர்கள் இல்லை: வவுனியாவில் மாணிக்கம் பண்ணை என்ற இடத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பெரிய அகதி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 9,000 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து ராணுவத்திடம் சரண் அடைந்தவர்கள். முகாமிலேயே அவர்களுக்குத் தனி இடம் தரப்பட்டிருக்கிறது. அவர்களிடம் ராணுவ உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவர்கூட தற்கொலைப்படையைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று உறுதியாகிவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்களிலேயே சுமார் 100 பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள். அவர்கள் இன்னுமொரு இடத்தில் தனியாக வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு உளவியல் ரீதியில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு திருத்தப்படுகின்றனர். அனைத்து விடுதலைப் புலிகளுக்கும் அறிவுரைகளும் மாற்றுத் தொழில் பயிற்சிகளும் அளிக்கப்படுவதாக முகாம் அதிகாரிகள் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளில் குற்றம் செய்தவர்கள் இலங்கை நாட்டின் குற்றவியல் சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
கருத்துகள்

இவர்கள் உயிருடன் தோன்றும் வரை எத்தனையோ கிளைக்கதைகள், துணைக் கதைகள், புனைகதைகள், தொடர்கதைகள் வெளிவந்து கொண்டிருக்கும். நாம் இது குறித்து எல்லாம் சஞ்சலப்படக்கூடாது. இறந்தவர்கள் நினைவில் இருப்பவர்களேனும் நலமுடன் வாழ வாழ்த்துவோம்! மேதகு பிரபாகரனும் அவர் குடும்பத்தினரும் நலமாக இருந்து நாட்டு மக்களை வழி நடத்திச் செல்லட்டும்! ஈழம் மலரட்டும்! இந்திய ஈழ உறவு தழைக்கட்டும்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
5/28/2009 4:28:00 AM

TVP means THIRUVENKADAM VELUPILLAI PRABAKARAN

By Vennilen
5/28/2009 3:36:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக