விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மரணத்தை அந்த அமைப்பின் சர்வதேச விவகாரத் தலைவர் பத்மநாதன் உறுதி செய்துள்ளார். ஆனால், இதை ஏற்காத ஒரு பிரிவினர், சர்வதேச உளவு நிறுவனங்களின் பிடியில் சிக்கியுள்ள பத்மநாதன் திட்டமிட்டு பொய் தகவலை பரப்புகிறார்' என குற்றம் சாட்டியுள்ளனர்.
பத்மநாதன் ஆதரவு, எதிர்ப்பு என இரு கோஷ்டிகளாக புலிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. "இனி வன்முறைப் போராட்டத்திற்கு இடம் கொடுப்பதில்லை. புதிய தலைமை, ஒரு குழு வடிவில் அமைக்கப்படும். ஆயுதங்களின் பாவனையை மவுனிக்க வைத்து விட்டோம்' என்று பத்மநாதன் தெரிவித்தார். வைகோ உள்ளிட்ட புலி ஆதரவு தலைவர்களும், புலிகள் ஆதரவு இணைய தளங்களும் இதை மறுத்துள்ளன. பத்மநாதன் சதி வலை செய்வதாகவும், துரோகியாக மாறிவிட்டதாகவும் புது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பத்மநாதனுக்கு ஆதரவு, எதிர்ப்பு என புலிகள் தரப்பில் இரு கோஷ்டிகளாக பிரிந்து, கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக புலிகள் ஆதரவு இணைய தளங்களில் கூறப்பட்டுள்ளதாவது:
முள்ளி வாய்க்கால் பகுதியில் உக்கிரமாக போர் நடந்து கொண்டு இருக்கையில், ஒன்றன் பின் ஒன்றாக புலிகளின் கப்பல்கள் அழிக்கப் பட் டன. கடைசி நிமிடம் வரை, யாரோ காப்பாற்றுவர் என்ற நம்பிக்கை, நெருக்கமானவர்களால் தலைமைக்கு ஊட்டப்பட்டுள்ளது. அது, கே.பத்மநாதனாக (கே.பி.,) இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு தாய்லாந்தில் கே.பி., கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது; இரு நாட்களில் அது மறுக்கப்பட்டது. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அன்று தாய்லாந்தில் இருந்தார். இவற்றைச் சேர்த்து பார்த்தால், சர்வதேச ரீதியாக பெரிய சதி நடந்திருப்பதாகத் தோன்றுகிறது. முள்ளி வாய்க்கால் பகுதியில் ராணுவம், கடந்த 17ம் தேதி கோரத் தாண்டவம் ஆடியது. அதற்கு முந்தைய நாள் 16ம் தேதி, பத்மநாதனின் அறிக்கை வெளியானது. அதில், தான் பிரபாகரனுடன் தொடர்ந்து நான்கு மணி நேரம் பேசியதாகவும், மக்களுடன் ஒன்று சேர்ந்து வன்னி பகுதியில் பிரபாகரன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
பிரபாகரனின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுப்பதற்காகத் தான் இந்த அறிக்கை வெளியானது. போர்க்களத்தில் இருந்த சூசை கடைசியாக அளித்த பேட்டியில், "நான் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்ததற்கு, கே.பி., தரப்பில் சரியான பதில் வரவில்லை' என்று தெரிவித்துள்ளார். மக்களோடு போராளிகள் கலந்து இருப்பதாகக் கூறி, காட்டிக் கொடுக்கும் வேலையையும் கே.பி., செய்துள்ளார். ரா, சி.ஐ.ஐ., போன்ற சர்வதேச உளவு நிறுவனங்களின் பிடியில் கே.பத்மநாதன் உள்ளார். புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பிளவை உருவாக்கவே பத்மநாதன் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். தற்போது, பிரபாகரன் தங்கியுள்ள பாதுகாப்பான இடத்தை அறிய வேண்டும் என்ற நோக்கோடு இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவிலான தமிழர்களை ஒருங்கிணைத்தல்; நிதி விவகாரங்களை கவனித்தல்; ஆயுதங்களை வாங்கி அனுப்புதல் போன்ற தொடர்புகள் அனைத்தையும் பத்மநாதன் வசமே பிரபாகரன் ஒப்படைத்திருந்தார். 1984ல் ஆயுதக் கொள்முதல் பிரிவுத் தலைவராக நியமித்தது முதல், பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவராக அவர் இருந்தார்.
புலிகள் தலைவர் பிரபாகரன் இல்லாத நிலையில், சர்வதேச நாடுகளின் பார்வை தமிழர் மீது திரும்பும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, மீதம் உள்ள தமிழர்களைக் காக்க வேண்டும் என்பதால் தான் ஆயுதப் போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக பத்மநாதன் தெரிவித்துள்ளார். இந்த சமாதானத்தை விரும்பாதவர்கள், பத்மநாதன் மீது பழி போடுகின்றனர் என்ற கருத்தும் வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர் களால் முன்வைக்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பில் தோன்றியுள்ள இந்த பிளவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. "வசூல் ராஜா' பத்மநாதன் கடந்த 1985ம் ஆண்டு வெளிநாடுகளில் நிதி திரட்ட, தமிழர் மறுவாழ்வு மையம் என்ற அமைப்பு துவக்கப்பட்டது.
புலிகளுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்ட இந்த அமைப்பை, அமெரிக்கா, இலங்கை உள்ளிட்ட நாடுகள் 2007ல் தடை செய்தன. இந்த அமைப்பின் மூலம் திரட்டப்பட்ட பெரும் தொகை தொடர்பான விவரம் கே.பத்மநாதனுக்கு மட்டுமே தெரியும் என்று கூறப்படுகிறது. புலிகளுக்குச் சொந்தமான பல கப்பல்கள், கார்கோ பிரிவில் உலகம் முழுவதும் இயங்குகின்றன. இவை குறித்த விவரங்களும் பத்மநாதனுக்கே தெரியும். பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் இழப்பிற்கு பின் அந்த அமைப்பை வழி நடத்தும் பொறுப்பு, இவர் வசம் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆயுதங்களுடன் கிட்டு கப்பலில் வந்தது குறித்து இந்திய உளவுத் துறையினருக்கு செய்தி அனுப்பியதாகக் கருதி, புலிகள் அமைப்பின் துணைத் தலைவராக, பலம் பொருந்திய பதவியில் இருந்த மாத்தையா கொல்லப்பட்டார். அதே போல், இந்திய உளவுத் துறையின் பிடியில் கே.பத்மநாதன் சிக்கியதால், போதுமான ஆயுதங்களை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை என்றும், போர்க்கப்பல்கள் அழிக்கப்பட்டதற்கும் அவரின் தகவல் தான் காரணம் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர் எதிர்ப்பாளர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக