செவ்வாய், 19 மார்ச், 2013

கூட்டணியில் இருந்து வெளியேறியது திமுக

கூட்டணியில் இருந்து வெளியேறியது திமுக

ஐ.மு.கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.கருணாநிதி, மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாகத் தெரிவித்தார்.
மத்திய ஆளும் அரசின் அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்துமே திமுக வெளியேறுவதாகத் தெரிவித்தார் கருணாநிதி.
மேலும், செய்தியாளர்களிடம் பேசியபோது, இலங்கைக்கு எதிரான அமெரிக்க அரசின் தீர்மானத்தை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்துவிட்டது என்று கவலை தெரிவித்தார் திமுக தலைவர் கருணாநிதி.
தமிழ் கலாசாரங்களை அழித்தொழிக்கும் செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. அதற்குத் துணை போகும் மத்திய அரசில் இருந்து திமுக விலக முடிவு செய்துள்ளது என்று அவர் கூறினார்.
இருந்தாலும், செய்தியாளர்களின் கேள்விகளின் போது,
உங்களின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா என்று கேட்டார் ஒரு செய்தியாளர். அதற்கு கருணாநிதி,
இன்னும் நாள் இருக்கிறது. இன்று இருக்கிறது, நாளை இருக்கிறது, வரும் 21ம் தேதி வரை நேரம் இருக்கிறது. இதற்கு இடையில், நாங்கள் முன் நிறுத்திய மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விவாதித்து தீர்மானம் கொண்டு வந்தால், கருத்துகளை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
எனவே நாடாளுமன்றத் தீர்மானத்தைப் பொறுத்து முடிவு என்று அவர் கூறினாலும் கூட, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அமெரிக்காவின் தீர்மானத்தின் மீது இன்றே இறுதி முடிவு எடுத்திருக்க வேண்டும். கால அவகாசம் குறைவாக இருப்பதால், அது இயலாது. ஆகவே, திமுகவின் விலகல் முடிவு மறுபரிசீலனைக்கு உட்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
கடந்த 9 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த திமுக, தற்போது விலகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதியின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து தொண்டர்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

1 கருத்து:

  1. கருணாநிதியின் இந்த் செயல் போருக்குமுன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது போருக்குப்பின் ஈழத்தமிழர் துயர் துடைக்க எடுக்கப்பட்டிருக்கவேண்டும்.இப்போது அவரது பதவி விலகலால் இந்திய அரசு நிலைப்பாடு மாறப்போவதில்லை.எனவே அவரது செயலால் ஈழ மக்களுக்கு எந்த பல்னுமில்லை. கலைஞர் பழியை காங்கிரசு மீது போட்டு தமிழக மக்களின் ஆவேசத்தை தணிக்க முயல்கிறார்.இது இரட்டைத்துரோகம். இதுவரை காங்கிரசுடன் கூட்டாளியாக இருந்து என்ன பெற்றார் என்பதையும் பார்க்கவேண்டும்.பிஞ்சு மாணவர்களுக்கு இருக்கும் தெளிவுகூடவா அவருக்கு இல்லாமல் போகும். நிச்சயம் இல்லை.அவரது துரோகம் மிக ஆழமானது.

    பதிலளிநீக்கு