புதன், 20 மார்ச், 2013

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் செயலலிதா தலைமையில் போராட்டம்: தா. பாண்டியன் கோரிக்கை

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் செயலலிதா தலைமையில் போராட்டம்: தா. பாண்டியன் கோரிக்கை


ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் போராட்டம் நடைபெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த அவர் மேலும் கூறியது: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழுக் கூட்டம் கடந்த 15, 16, 17 தேதிகளில் தில்லியில் நடைபெற்றது. அதில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப் படுகொலைகள் குறித்து சர்வதேச சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும், இலங்கையில் உள்ள அகதி முகாம்களை மூடிவிட்டு அங்குள்ள தமிழர்களை சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும், அவர்களின் மறுவாழ்வுக்கான நலத்திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஈழத் தமிழர்களுக்காக அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தீர்மானம் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாது போராட்டங்களையும் நடத்தி வருகிறோம்.
ஈழத் தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருவது வரவேற்கத்தக்கது. சமுதாய அக்கறையுடன் போராடும் உணர்வு மாணவர்களிடம் இன்னமும் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
மாணவர்கள் கூட்டமைப்பு புதன்கிழமை (மார்ச் 20) அழைப்பு விடுத்துள்ள தொடர் முழக்கப் போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் வரவேற்கிறது. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், பொதுச்சொத்துகளுக்கு சேதம் ஏற்படாமல் மாணவர்கள் அமைதியாகப் போராட வேண்டும். இல்லையெனில் போராட்டத்தின் நோக்கம் சிதைந்துவிடும்.
திமுகவின் முடிவு ஆறுதல் அளிக்கிறது: மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது என்று திமுக எடுத்துள்ள முடிவு ஆறுதல் அளிக்கிறது. காலம் கடந்து எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்துக்கு இது வலுசேர்க்கும் என்பதால் இதனை வரவேற்கிறோம். ஒருவேளை கருணாநிதியின் இந்த முடிவு நாடகமாக இருந்தால் அது விரைவில் அம்பலமாகிவிடும்.
தமிழகத்துக்கு சுற்றுலா வரும் இலங்கை நாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டிக்கத்தக்கது. இது போன்ற நடவடிக்கைகளில் யாரும் ஈடுபட வேண்டாம். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்திய அரசு வலுவான திருத்தங்களை கொண்டு வந்தால் அதனை ஆதரிக்க பெரும்பான்மையான நாடுகள் தயாராக இருக்கின்றன.
இலங்கைக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய நாடான இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக இருப்பதால்தான் பல நாடுகள் அந்நாட்டுக்கு ஆதரவளிக்கின்றன. எனவே, மத்திய அரசு இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வலுவான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்றார் தா. பாண்டியன்.
பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக