சனி, 23 மார்ச், 2013

மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை ஊனப்படுத்திவிட்டது: தேசிய லீக் கண்டனம்

இலங்கை :  மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை ஊனப்படுத்திவிட்டது: தேசிய லீக் பொதுக்குழு கண்டனம்
இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை ஊனப்படுத்திவிட்டது: தேசிய லீக் பொதுக்குழு கண்டனம்
சென்னை, மார்ச் 23-

தேசிய லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று காலை (சனிக்கிழமை) எழும்பூர் ஓட்டல் இம்பீரியல் வளாகத்தில் உள்ள பயாஸ் மகாலில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் அல்ஹாஜ் எம்.பஷீர் அகமது தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார்.

பொதுக் குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை மன்னிக்க முடியாது. சரணடைந்தவர்களை கூட இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. குழந்தைகளை கூட ஈவு இரக்கமற்ற வகையில் படுகொலை செய்ததை சர்வ தேசமும், தமிழ் சமுதாயமும் கணடித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்துள்ளது.

ஆனாலும் இந்தியா இந்த விஷயத்தில் மென்மையான போக்குடன் நடந்துள்ளது. எல்.எல்.ஆர்.சி. தீர்மானத்தை நீர்த்து போக செய்ததை போல் ஐ.நா. மனித உரிமை மன்றத்திலும் இலங்கையை காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக மத்திய அரசு செயல்பட்டு தமிழர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை ஊனப்படுத்தி வரலாற்று பிழை செய்துள்ளதை பொதுக் குழு வன்மையாக கண்டித்து கண்டனம் செய்கிறது.

ரங்கநாத் மாஸ்ரா கமிஷன் அறிக்கையை சட்டம் இயற்றி முஸ்லிம்களுக்கு இந்திய அளவில் 15 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 150 நாடுகளில் ரத்து செய்யப்பட்ட மரண தண்டனை சட்டத்தை இந்தியாவிலும் ரத்து செய்ய வேண்டும்.

திரைப்படங்களில் முஸ்லிம் விரோத போக்கு நிலவுவதால் மத்திய திரைப்பட தணிக்கை குழுவில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளை தணிக்கை குழு உறுப்பினர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும். ஹஜ் கடமைகளை நிறைவேற்ற கூடுதல் விசா வழங்க வேண்டும். உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விசுவரூபம் திரைப்பட பிரச்சினையில் மதக்கலவரத்தை உருவாக்க சிலர் செய்த சூழ்ச்சியை தடுத்து நிறுத்திய தமிழக முதல்வர், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, ஜே.எம்.ஆரூண் எம்.பி.க்கு பொதுக்குழு நன்றி தெரிவித்தது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட முழு முயற்சி செய்து வெற்றி கண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுக் குழு நன்றி தெரிவித்தது.

பொதுக்குழுவில் மாநில துணைத் தலைவர்கள் அப்துல்ஹமீது, சர்வர்கான், நாகை சாதிக், நூர்தீன், மாநில செயலாளர்கள் அபுதாகீர், ஜாபர்கான், ஜகாங்கீர், வைரோஸ் அகமது, அமைப்பு செயலாளர் சீனி அகமது, சென்னை மண்டல அமைப்பு செயலாளர் ஷேக்பரீத், எஸ்.ஏ.உமர் முக்தார், நிஜாம், தமீம் அன்சாரி, ஜாகிர் உசேன், உள்பட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக