ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் இலங்கைக்கு எதிரான
தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம்
அறிவித்துள்ளது.
சென்னையில் நடந்த தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயற்குழு
கூட்டத்தில் இயக்குநர்கள் அமீர், எஸ்.பி.ஜனநாதன், பிரபுசாலமன்,
வெங்கட்பிரபு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில், இலங்கை
அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழக அரசு கொண்டு வந்த
தீர்மானத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். இலங்கை அதிபர் ராஜபட்சவை
பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். புலம் பெயர்ந்த
தமிழர்களிடம் தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தமிழர்
பகுதிகளில் திணிக்கப்பட்டிருக்கும் சிங்கள குடியேற்றத்தை உடனே வெளியேற்ற
வேண்டும். இலங்கையுடனான உறவை இந்திய அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சலில் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை
மத்திய அரசு ஆதரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.செயற்குழு கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம்
இயக்குநர் சங்க பொதுச் செயலாளர் அமீர் கூறியதாவது:
இயக்குநர்கள் சங்க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை
வலியுறுத்தி மார்ச் 19-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள்
அடையாள உண்ணாவிரதப் போராடத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இந்த அறவழிப்
போராட்டத்துக்கு தமிழ் திரைத்துறை மற்றும் சின்னத்திரையைச் சேர்ந்த பல
சங்கங்களின் ஒத்துழைப்பையும் கேட்டுள்ளோம். படப்பிடிப்பு மற்றும் தங்களது
பணிகளை அன்றைக்கு ஒரு நாள் மட்டும் தவிர்த்து விட்டு, போராட்டத்தில்
பங்கெடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக