இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது: தமிழக நா.உ.(எம்.பி.)க்கள் ஆவேசம்
"இலங்கை விவகாரத்தில், மத்திய அரசு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டது' என, குற்றம்சாட்டி, லோக்சபாவில், தமிழக எம்.பி.,க்கள் நேற்று ரகளையில் ஈடுபட்டதால், சபை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கோஷம்: லோக்சபா நேற்று காலை கூடியதும், கேள்வி நேரம் ஆரம்பமானது. அடுத்த கணமே, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்களும், தென்காசி லோக்சபா தொகுதி, இந்திய கம்யூ., - எம்.பி., லிங்கமும் எழுந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், சபையில், பலத்த அமளி காணப்பட்டது. திடீரென, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். அதே போல், தி.மு.க.,வைச் சேர்ந்த, பெரும்பாலான, எம்.பி.க்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டாலும், மத்திய அமைச்சர் பதவியை, சமீபத்தில் ராஜினாமா செய்த, பழனி மாணிக்கம், காந்தி செல்வன் ஆகியோர், சபாநாயகர் பக்கம் வராமல், தங்கள் இருக்கை அருகே, நின்று கொண்டிருந்தனர். அதே நேரத்தில், மற்றொரு முன்னாள் அமைச்சரான அழகிரி, சபையில் இல்லை.
ஸ்தம்பிப்பு: "தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது' என, தி.மு.க., மற்றும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், கூட்டாக குரல் எழுப்பியதால், சபையே ஸ்தம்பித்தது. ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக, வலுவான தீர்மானம் வர விடாமல், மத்திய அரசு சதி செய்து விட்டது என்றும் கோஷமிட்டனர். பத்து நிமிடங்களுக்கு மேலாக, இந்த அமளி நீடித்ததால், கேள்வி நேரம் ரத்தானது. ஒரு மணி நேரத்திற்குப் பின், சபை மீண்டும் கூடிய போது, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரையிடம் வந்த, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத், ""பங்குச் சந்தை குறித்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்; அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள். கூச்சல், குழப்பமாக இருந்தாலும், பரவாயில்லை. அமளிக்கு மத்தியில், மசோதாவை நிறைவேற்ற சம்மதம் தெரிவியுங்கள்,'' என்றார். அதற்கு, தம்பித்துரையும், தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர், டி.ஆர்.பாலுவும் மறுப்புத் தெரிவித்து விட்டனர். அதேபோல், அரசின் இந்த வேண்டுகோளுக்கு, இந்திய கம்யூ., - எம்.பி., குருதாஸ் தாஸ் குப்தாவும், எதிர்ப்பு தெரிவித்தார். கமல்நாத் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், யாரும் சம்மதிக்கவில்லை.
ஒத்தி வைப்பு: தமிழக எம்.பி.,க்களால், சபையில் பலத்த அமளி நிலவவே, பிற கட்சிகளின் எம்.பி.,க்கள் அனைவரும், செய்தவதறியாது திகைப்புடன் அமர்ந்திருந்தனர். இதனால், வேறு வழியின்றி சபையை, அடுத்த மாதம், 22ம் தேதிக்கு, ஒத்தி வைப்பதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
- தினமலர் தில்லிச் செய்தியாளர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக