எத்தனை ஆண்டுகளாகத் திருப்பதிக் கோயிலில் ஊழல் நடக்கிறது என்று தெரியாது. ஆனால், எனக்குத் தெரிந்து 40 ஆண்டுகளுக்கு முன்பே நண்பர் ஒருவர், அங்கு இறையன்பர்கள் காணிக்கையாக அளிக்கும் தரமான தங்க நகைகளைக்கூடத் தரங்குறைந்தது என்ற பெயரில் குறைந்த தொகைக்கு ஏலம் எடுப்பதுபோல் காட்டி விற்பதாகக் கூறினார். எவ்வளவு நகை வேண்டுமானாலும் மிகக் குறைந்த விலையில் வாங்கித் தருவதாகக் கூறினார். நான் சில முறை திருப்பதி சென்றுள்ளேன். எனக்கு நேர்ந்த பட்டறிவுதான் பிறருக்கும் நேர்ந்துள்ளது. என்ன வென்றால் கூட்டமே இல்லாத பொழுதும் கூட்டம் இருப்பதுபோல் செயற்கையாகக்காட்டுவதற்காக வேண்டுமென்றே மக்களை அடைத்து வைக்கின்றார்கள். சில திங்களுக்கு முன்பு சென்றிருந்தபொழுது மிக மிகக் குறைவான கூட்டம் இருந்தது. அதனால் தொடக்கத்தில் உள்ள ஆய்வு முகப்பில் ஒன்றுமட்டுமே திறந்திருந்தது. ஆனால், வேண்டுமென்றே மணிக்கணக்கில் ஒவ்வொரு கூண்டாக அடைத்து வைத்தனர். காலையில் 4 மணிக்கே வந்திருந்தும் அடைத்து வைத்துப் பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் ஒரு கூண்டிலிருந்து மற்றொரு கூண்டிற்கு அனுப்பியதாக க் கட்டணமில்லாப் பார்வைக்கு வந்த ஒருவர் கூறினார். என்ற போதும், மூலவர் இடம் வந்தபொழுது வேண்டுமென்றே திமுதிமு என்று திரளாகப்போகுமாறு செய்து யாரையும் வணங்கவிடாமல் வழக்கம் போல் விரட்டி அடித்தனர். கூட்டம் இல்லை என்பதால் புகழ் குறைந்து கூட்டம் மேலும் குறையும் என்பதால் அவ்வாறு செய்கின்றனராம். அந்த இடத்தில் வரிசையாக உள்ளே செல்ல விட்டால் மணிக்கணக்கில் அல்லது நாள்கணக்கில் காத்திருந்தவர்கள் அமைதியாக இறை வழிபாடுசெய்ய வாய்ப்பிருக்கும். ஆனால், செய்வதில்லை. கழிவறைகளில் தண்ணீர் வசதியே இல்லை. இதையெல்லாம் கேட்டதற்கு, வருவோர் எண்ணிக்கையைப்போலியாக உயர்த்திக் காட்டினால்தான் இறையன்பர்களுகு்குத் தரும் பால், உணவு முதலானவற்றில் கொள்ளை அடிக்க முடியும் எனத் திட்டமிடுபவர்கள் வசதி செய்து தருவதில் கருத்து செலுத்துவதில்லை என்று அங்குள்ள ஒருவர் கூறினார். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். எனவே, திருப்பதி அன்பர்கள் சில நாளேனும் திருப்பதிக்குச் செல்வதைப் புறக்கணித்தால்தான் உண்மை உணர்ந்து தொடர்புடையவர்கள் திருந்துவர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருமலையில் இலவசப்பார்வையில் மாற்றம்: கூண்டுக்குள் இனி அடைய த் தேவையில்லை
நகரி: திருமலையில், இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள்,
இனிமேல் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. வைகுண்டம்-2, வளாகத்திற்குள்
நுழைந்ததும், அவர்களுக்கு தரிசன நேரத்துடன் அடையாள அட்டை வழங்கப்படும்.
கூண்டுக்குள் அடைந்து கிடக்காமல், வெளியே சென்றுவிட்டு, தரிசன நேரத்திற்கு
வரும் வகையில், புதுவசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
வைகுண்டம்: திருமலையில்,
பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு செல்ல, வைகுண்டம் - 1, 2 வளாகங்கள் உள்ளன.
இதில், வைகுண்டம்-1 வளாகம், 50 ரூபாய் சுதர்சன டிக்கெட், 300 ரூபாய்
சிறப்பு தரிசனத்திற்காக, பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த
வளாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், முறைகேட்டில் ஈடுபடுவதால், பலவித
தவறுகள் நடக்கின்றன. தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் நடந்து
வரும் முறைகேட்டால், முறையாக வரும் பக்தர்கள் மிகவும்
பாதிக்கப்படுகின்றனர். இதனால், தேவஸ்தானத்திற்கு ஏற்படும் அவப்பெயரை களைய,
ஊழியர்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, சேவா தொண்டர்களாக வரும் பக்தர்களை
கொண்டு, ஒழுங்குமுறையை ஏற்படுத்துவது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மொட்டை: என்ன
தான் மாற்றம் கொண்டு வந்தாலும், இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள்
தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தரிசனத்திற்காக இரண்டு, மூன்று நாள்
காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மொட்டை போடுவதற்கு, குளிப்பதற்கு
என, நேரம் செலவிட வேண்டியுள்ளது. இதை தவிர்த்து, இலவச தரிசனத்திற்காக வரும்
பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தில், வெளியில் சென்று மொட்டை அடிப்பது
உட்பட, பிற பணிகளை முடிக்கும் வகையில், புது திட்டம் சில தினங்களில்
அறிமுகம் செய்யப்பட உள்ளது.
கைரேகை: திருமலையில்,
வைகுண்டம்-2 காம்பளக்சில், இலவச தரிசனத்திற்காக செல்லும் பக்தர்களுக்கு,
அவர்களது புகைப்படம் மற்றும் கைரேகை பதித்த அடையாள அட்டைகள்
வழங்கபடுகின்றன. இதில் தரிசனம் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். வெளியில்
சென்று விட்டு, குறிப்பிட்ட நேரத்திற்கு மீண்டும் வைகுண்டம்-2 வளாகம்
வந்தால், சிறிது நேரத்தில் தரிசனம் முடிந்துவிடலாம். வெளியில் செல்லாமல்,
கூண்டுக்குள் காத்திருக்க பக்தர்கள் விரும்பினால், அவர்களுக்கு அனைத்து
வசதிகளும் செய்து தரப்படும்.
வி.ஐ.பி., தரிசனம்: வி.ஐ.பி.,க்கள் தரிசனத்திற்காக விண்ணப்பிக்கும் சிலர், தரிசன நேரத்தின் போது, அவர்கள் வராமல் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வருகின்றனர். இனி வி.ஐ.பி.,க்களுடன் இணைந்து, குடும்பத்தினரும், உறவினர்களும் வந்தால் மட்டுமே, தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதே போல், வி.ஐ.பி.,க்களும், வி.ஐ.பி., சிபாரிசு கடிதம் கொண்டு வருபவர்களும், தவறாமல் தங்களது அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக