எடை குறைந்த குழந்தைகள்!
காற்று மாசடைவதால், குறைந்த எடையுள்ள குழந்தைகள் பிறப்பதாக கூறும், மருத்துவர் மீனலோசனி: நான், சென்னை மருத்துவக் கல்லூரி மகப்பேறு துறையின் தலைவராக பணியாற்றுகிறேன். பிறக்கும் குழந்தையின் சராசரி எடை, 3 கிலோ என்பது, அனை வரும் அறிந்ததே. ஆனால், 2012ம் ஆண்டு மார்ச் மாதத்தில், சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த, ஒரு குழந்தையின் எடை என்ன தெரியுமா? வெறும், 1 கிலோ மட்டுமே. எடை குறைந்ததால், அக்குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்ததாக நினைக்க வேண்டாம். சரியான காலத்தில் பிறந்த குழந்தை தான். மாசடைந்த காற்றே எடை குறைவாக பிறந்ததற்கு காரணம். கருவுற்ற பெண், தொடர்ந்து மாசடைந்த காற்றை சுவாசிக்கும் போது, அக்காற்றில் உள்ள நச்சுக்களையே கருவில் இருக்கும் குழந்தையும் சுவாசிக்கிறது. குப்பையை பொது இடங்களில் எரிப்பது, வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை, காற்றை மாசுபடுத்தி குழந்தையை பாதிக்கிறது. குறிப்பாக, சிகரெட் புகையானது கருவில் இருக்கும் குழந்தைகளை, உடனே பாதிக்கும் சக்தி வாய்ந்தது. சென்னை மாநகராட்சியின் பிறப்பு பதிவேட்டில், 2008ம் ஆண்டு, 11.7 சதவீத குழந்தைகள் எடை குறைவாக பிறந்தனர். 2012ம் ஆண்டில் இது, 15.6 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. சமீபத்தில், மாசடைந்த காற்றை கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து சுவாசிக்கும் போது, எடை குறைந்த குழந்தைகள் பிறக்கின்றன என, இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள், ஆய்வுகளில் கண்டறிந்து உறுதி செய்துள்ளன. தமிழகத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில், அனுபவமிக்க மருத்துவர் மற்றும் செவிலியர்கள் இருப்பதால் உடனடியாக, "இன்குபேட்டர்' போன்ற கருவியில் வைத்து குழந்தைகளை காப்பாற்றினாலும், முக்கிய உடல் உறுப்புகள் வளர்ச்சி அடையாமல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. காற்று மாசடைவதை, உடனடியாக குறைப்பது சாத்தியம் இல்லை. குறைந்தபட்சம் நச்சு வாயுக்களை சுவாசிப்பதிலிருந்து கர்ப்பிணிகளைப் பாதுகாப்பதே, தற்போதைய அவசர தேவையாக உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக