வாழை ச் சாகுபடியில் அசத்தலாம்!
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி, முனைவர் வ.குமார்: நான், ஆராய்ச்சி மையத்தில் முதுநிலை விஞ்ஞானியாக இருக்கிறேன். விவசாயிகள், வாழை சாகுபடியில் அதிக லாபம் பெற, நாங்கள் பல முயற்சியில் ஈடுபடுகிறோம். இம்முயற்சியால் அடர்நடவு முறை மற்றும் புதிய வாழை ரகங்களை கண்டுபிடித்துள்ளோம்."அடர்நடவு முறை'யில் ஒரே குழியில், 3 வாழைக் கன்றுகளை நட வேண்டும். குழிக்கு குழி, 6 அடியும், வரிசைக்கு, 12 அடியும், நன்கு இடைவெளி விட்டு, ஏக்கருக்கு, 1,850 கன்றுகள் வரை நடலாம். வாழைக் கன்றுகள் அதிக இடைவெளியில் இருப்பதால், காற்றோட்டமாக நன்கு வளரும். திசு வளர்ப்பு முறையில் வளர்க்கப்பட்ட கன்றுகளை நடுவது நல்லது.அனைத்து ரக வாழையையும், அடர் நடவு முறையில் சாகுபடி செய்யலாம். ஆனால் சாகுபடியின் பயன், ரகத்துக்கு ரகம் மாறுபடும்.
சொட்டு நீர் பாசனம் என்பதால், 40 சதவீத நீரை சேமித்து, 50 சதவீதம் வரை கூடுதல் விளைச்சலை பெறலாம். நிலத்தின் இடைவெளியில், உளுந்து, காய்கறி என, ஊடுபயிர்களை பயிரிட்டு, இன்னும் அதிக லாபம் ஈட்டலாம்.
சாதாரண நடவு முறை, ஹெக்டேருக்கு, 85 டன் மட்டுமே கிடைக்கும். அடர் நடவு முறையில், 110 டன் வாழைப்பழம் கிடைக் கும். செலவை தவிர்த்து ஹெக்டேருக்கு, 1.5 லட்சம் ரூபாய் லாபம் கிடைக்கும். தற்போது கற்பூரவள்ளி பழத்தில், "உதயம்' என்ற புது ரகத்தை கண்டுபிடித்துள்ளோம். இதில், மற்ற ரகங்களை விட, 40 சதவீதம் கூடுதல் மகசூலும், ஒரு வாழைத் தாரில், 65கி எடை பழமும் இருக்கும்.
சாதாரண கற்பூரவள்ளியின் ஒரு தார், 400 ரூபாய். ஆனால், உதயம் ரகத்தின் ஒரு வாழைத் தாரை, 1,000 ரூபாய்க்கு விற்கலாம். ஏனெனில், பழங்கள் அளவில் பெருத்து, உருளை வடிவில் இருப்பதும், பழம் எளிதில் நசுங்கி, சேதாரம் அடையாமலும் இருப்பதே காரணம். விவசாயிகளுக்கு எவ்வித சந்தேகங்கள் ஏற்பட்டாலும், திருச்சி ஆராய்ச்சி மையத்தை அணுகினால், இயக்குனர் உட்பட அனைத்து விஞ்ஞானிகளும், இலவசமாகவே பயிற்சி அளிக்கிறோம்; வெளிநாடுகளுக்கும் பயிற்சி தருகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக