செவ்வாய், 19 மார்ச், 2013

காங்.உடன் ஒட்டோ உறவோ இல்லை - 21 வரை ? கலைஞர் அறிவிப்பு

http://img.dinamalar.com/data/gallery/gallerye_123221220_670472.jpg







சென்னை: மத்தியில் அரசு அமைத்துள்ள, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, தி.மு.க., விலகிக் கொண்டதாக, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, அறிவித்தார்.
இலங்கை தமிழர்கள் மீதான தாக்குதலை போர்க் குற்றம், இனப் படுகொலை என அறிவிக்க வேண்டும் என்ற திருத்தத்துடன், ஐ.நா., மனித உரிமை அமைப்பில், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை, மத்திய அரசு ஆதரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகிய இருவருக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி இரண்டு தினங்களுக்கு முன் கடிதம் எழுதினார். இதை நிறைவேற்றவில்லை எனில், கூட்டணியில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றும கூறினார்.
சமாதான முயற்சி:

இதையடுத்து, அவரை சமாதானப்படுத்தும் வகையில், நேற்று முன்தினம், காங்., கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களான, சிதம்பரம், அந்தோணி மற்றும் குலாம் நபி ஆசாத் ஆகியோர், கருணாநிதியைச் சந்திக்க, நேற்று, சென்னை வந்தனர்.

அவர்களுடன், இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்திய கருணாநிதி, "இலங்கையில், நடந்த படுகொலையை, இனப் படுகொலையாக அறிவிக்க வேண்டும்; போர்க் குற்றம் பற்றி, சர்வதேச விசாரணை தேவை என்ற இரு கோரிக்கைகளை, பார்லிமென்ட்டில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்' என, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம், திடீர் கோரிக்கை வைத்தார்.

பின், செய்தியாளர்களிடம் பேசியபோது, "எங்கள் இரு கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவித்துள்ளோம். அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளோம். இலங்கை தமிழருக்கு, நாங்கள் நினைத்ததெல்லாம் நடந்தால் தான், இலங்கைத் தமிழர் பிரச்னையில், இறுக்கம் தளர்ந்ததாக அர்த்தம்' என, பொத்தம் பொதுவாகப் பேசினார்.
திடீர் அறிவிப்பு:

நேற்று காலை, திடீரென, கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பேசிய கருணாநிதி, மத்திய அரசுக்கு, தி.மு.க., அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அறிவித்தார்.
Description: http://img.dinamalar.com/data/uploads/V1_18957.jpeg
அறிக்க‌ை முழு விவரம்: அவர் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:குதிரையை குப்புற தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையாக, அமெரிக்காவின் வரைவு தீர்மானத்தை, பெருமளவுக்கு, நீர்த்துப் போக விட்டதோடு, தி.மு.க., முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும், மத்திய அரசு, சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை. எனவே, ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும், பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும், இந்திய - மத்திய ஆட்சியில், தி.மு.க., நீடிப்பது, தமிழினத்திற்கே, இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், தி.மு.க., மத்திய அமைச்சரவையிலிருந்தும்,ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்தும், உடனடியாக விலகிக் கொள்வதென, முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இனி, எந்த காலத்திலும் கூட்டணி இல்லை: பின், தொடர்ந்து கேள்வி எழுப்பிய நிருபர்களிடம், "கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், இன்றோ, நாளையோ, தம் பதவிகளை ராஜினாமா செய்வர்' என்றும் அறிவித்தார். "காங்கிரசுடன் இனி, எந்த காலத்திலும் கூட்டணி இல்லை' என்றும் அறிவித்துள்ளார்.


தி.மு.க.,வின் ஆதரவு வாபஸ் வாங்கப்பட்டாலும், மத்திய அரசுக்கு போதுமான அளவு எம்.பி.,க்கள் ஆதரவு உள்ளதால், மத்திய அரசு கவிழாது என்று, காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தி.முக., சார்பில் அழகிரி காபினட் அமைச்சராகவும், ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், காந்திசெல்வன், நெப்போலியன் ஆகியோர் இணை அமைச்சர்களாகவும் உள்ளனர். லோக்சபாவில், அரசு தன் பலத்தை நிரூபிக்க, 273 எம்.பி.,க்கள் ஆதரவு தேவை. தற்போது காங்கிரசுக்கு, 205 எம்.பி.,க்கள் உள்ளனர். சமாஜ்வாதி - 22, பகுஜன் சமாஜ் - 21, தேசியவாத காங்கிரஸ் - 9, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - 4, தேசிய மாநாட்டு கட்சி - 3, ராஷ்ட்ரீய லோக்தளம் - 5, முஸ்லிம் லீக் - 2, கேரள காங்கிரஸ் - 1, ஜனநாயக கட்சி - 19, சுயேச்சைகள் - 9 என, எம்.பி.,க்களின் ஆதரவு உள்ளதால், மத்திய அரசுக்கு கவிழும் நிலை ஏற்படாது என்பது காங்கிரசின் கணக்கு.
சோனியா கருத்து:
இது குறித்து சோனியா கூறுகையில், இது குறித்துசொல்வதற்கு ஏதும் இல்லை என்றார். மத்திய அமைச்சர் சித்ம்பரம் கூறுகையில், தி.மு.க.,வின் இந்த முடிவால் மத்திய அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றார். தி.மு.க.,வின இந்த முடிவை வரவேற்பதாக கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தை ரத்து செய்ய நோட்டீஸ்: இதனிடையே இன்று காலை தி.மு.க., எம்பி.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பின்னர் இந்த பிரச்னை தொடர்பாக பார்லிமென்டில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய நோட்டீஸ் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கை விவகாரம் தொடர்பாக சோனியா கூறுகையில், மனித உரிமை மீறலுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். மனித உரிமை மீறல் தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு தொடர்ந்து வலியுறுத்துவோம் என கூறியுள்ளார். இதனிடையே, ஐ.நா., மனித உரிமை மீறல் விவகாரத்தில், இந்தியாவில் நிலையை விளக்குவதற்காக, ஐ.நா., மனித உரிமை மீறல் அவையின் இந்திய பிரதிநிதி திலிப் சின்ஹாவை டில்லி வருமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக