கிரந்த எழுத்துகளைப் பாடநூல்களில் இருந்து எடுத்து விட்டால் அந்த எழுத்துகளைப் பயன்படுத்த மாட்டார்கள். அதனால் பிற மொழிச் சொற்கள் தமிழில் கலக்காது. எனவே, அதற்கும் ஆணை பிறப்பிக்க வேண்டும். எனினும் இன்றைய சூழல் நீடிக்கும் வரை அரசு அலுவலகங்களில் தமிழ்ப் பயன்பாடு என்பது முழுமையடைய வாய்ப்பே இல்லை. வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
பல கோடி ரூபாய் செலவில் செம்மொழி மாநாடு, செம்மொழி பூங்கா, தமிழில் பெயர் வைத்தால் திரைப்படத்துக்கு வரிவிலக்கு, தமிழ் வழி படித்தால் அரசு வேலையில் முன்னுரிமை எனத் தமிழை வளர்க்க மெனக்கெடும் தமிழக அரசு, அரசு ஆணைகளிலும் அரசுத் திட்டங்களிலும் ஆங்கிலத்தைக் கலந்து வருவது, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பில், நீரிழிவுநோய் மற்றும் ரத்தக்கொதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அபாய காரணிகள் உள்ள நபர்களைக் கண்டறியவும், நோய் இருப்பதாகக் கண்டறியப்பட்ட நபர்களுக்குப் பயனுள்ள மற்றும் முறையான சிகிச்சை அளிக்கவும் நலமான தமிழகம் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதை விளம்பரப்படுத்துவதற்காகத் திரைப்பட நடிகர் விவேக் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. நாளிதழ்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. இதில், நடிகர் விவேக் என் ஸ்கோர் என்ன உங்கள் ஸ்கோர் என்ன என கேட்பதுபோல வாசகங்கள் உள்ளன. ஸ்கோர் என்ற ஆங்கில வார்த்தைக்குப் பதிலாக மதிப்பெண் என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் எழவில்லை.இவ்வாறு அரசுத்துறையினரே தமிழை அலட்சியப்படுத்தி வந்தால், எத்தனை செம்மொழி மாநாடு நடத்தியும் என்ன பயன்? இது மட்டுமல்ல, தமிழக அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் அரசாணைகள்கூட இன்று வரை ஆங்கிலத்திலே அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழக அரசு ஊழியர்கள் அனைவரும் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்ற அரசாணைகூட ஆங்கிலத்திலேயே வந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித்துறை அலுவலகங்களில் இருந்து, வளர்ச்சிப்பணிகள் குறித்து நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுக்கும்போது, அதில் அதிகாரிகள் பெயருக்கு முன்னால் போடப்படும் இன்ஷியல் ஆங்கிலத்தில் இருந்தால், தமிழ் வளர்ச்சித்துறையில் இருந்து விளக்கம் கேட்கப் படுகிறது. ஆனால், அரசு செய்யும் விளம்பரங்களில் உள்ள ஆங்கிலக் கலப்பை ஏனோ தமிழ் வளர்ச்சித்துறை கண்டுகொள்வதில்லை. உள்ளாட்சி அலுவலகங்களில் தமிழ் வாழ்க என்ற வாசகத்தை ஒளிவிளக்காக வைக்க உத்தரவிட்டு, அதை உடனடியாகச் செயல்படுத்தாத அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்ட தமிழகஅரசு, அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் அரசு ஆணைகளை ஆங்கிலத்தில் அனுப்புவது வேடிக்கையாக உள்ளது. உண்மையிலேயே தமிழ் மீது தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், முதலில் அரசுத்துறை முழுவதிலும் தமிழையே பயன்படுத்தும் வகையில் மாற்றம் கொண்டு வரவேண்டும். மேலும் அறிவியல், மருத்துவம் சார்ந்த புதிய கலைச்சொற்களைத் தமிழில் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறமொழிக் கலப்பில்லாமல் தமிழைப் பேசவும், எழுதவும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள்வரை அனைவருக்கும் சிறப்புப் பயிற்சிகளை அளிக்க அரசு முன்வர வேண்டும்.எத்தனையே இலவசங்களை வழங்கும் அரசு,பாமரனும் புரிந்து கொள்ளும்வகையில், தமிழ்மொழியின் பெருமைகளை, தமிழ் இலக்கியங்களை விளக்கவுரையுடன் புத்தகமாக அச்சடித்து அனைவரும் படிக்கும் வகையில் செய்ய வேண்டும். தமிழ் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பதை, கண்துடைப்புக்காக பெயர் அளவுக்கு ஏதோ ஒரு சிலருக்கு வழங்கிவிட்டு அப்படியே விட்டுவிடாமல், உண்மையில் தமிழ்வழியில் படிப்பவர்களுக்கு அரசின் அனைத்துத்துறை வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை வழங்கிவிட்டால், தமிழை வளர்க்க அடுத்த முயற்சியை அரசு எடுக்க வேண்டியதில்லை. இப்போது பெருகியுள்ள ஆங்கிலவழிக் கல்வியை அளிக்கும் பள்ளிகள், பொறியியல் கல்லூரிகளைப்போல, தமிழ்வழிப் பள்ளிகளும், கல்லூரிகளும் பெருகிவிடும். முத்தமிழ் அறிஞரை முதல்வராகக் கொண்ட தமிழக அரசு இதைச் செய்ய முன்வர வேண்டும்.
கருத்துகள்
கருவூலகத்திற்கு அனுப்பப்படும் மாதாந்திர ஊதியப் பட்டியல்கள் இன்றளவும் ஆங்கிலதிலேயே அனுப்பப்டுகின்றன. ஊதியப் பட்டியல் தயாரிக்க அரசு உருவாக்கியுள்ள மென்பொருள், ஊதியப் பட்டியலை ஆங்கிலத்தில் தான் தயாரித்து வழங்குகிறது. தமிழ் வாழ்க என்ற வாசகத்தை ஒளிவிளக்காக வைப்பதாலும், "எங்கும் தமிழ், எதிலும் தமிழ்" என்று சொல்லிக் கொண்டே இருந்தால் மட்டும் வளர்ந்து விடாது.
By சிவ. ரவிகுமார்
12/11/2010 4:15:00 AM
12/11/2010 4:15:00 AM