வெள்ளி, 10 டிசம்பர், 2010

human rights commission

  பயனுள்ள செய்திக் கட்டுரை. ப.இராசவேலுக்கும் தினமணிக்கும் பாராட்டுகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
 
மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் என்ன?

First Published : 10 Dec 2010 02:07:20 AM IST


சென்னை, டிச. 9: "உலக மனித உரிமைகள் தினம்' ஆண்டுதோறும் டிசம்பர் 10-ம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்த நாளில் மனித உரிமைகள் ஆணையத்தின் நடைமுறைகள் என்ன என்பது குறித்து மக்கள் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகிறது.இரண்டாம் உலகப்போரில் (1939-1945) உலகம் முழுவதும் 5.5 கோடி பேர் இறந்த போதுதான் மனித உயிர்கள் மதிப்பிட முடியாதது என்று உலக நாடுகள் உணர்ந்தன.உலக மனித உரிமைகள் தினம்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரூஸ்வெல்ட்டின் மனைவி எலினார் ரூஸ்வெல்ட் 1945-ம் ஆண்டு மனித உரிமைகள் மீறல் பிரகடனத்தை வெளியிட்டார். அந்த பிரகடனம் 3 ஆண்டுகள் கழித்து 1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை ஆதரித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்ட நாளே ஒவ்வொரு ஆண்டும் உலக மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.இந்தியாவில்... மனித உரிமைகள் என்பது அரசியலமைப்பு உறுதிப்படுத்தும் அல்லது இந்திய நீதிமன்றங்களின் மூலம் அமலாக்கக் கூடிய வாழ்வு, சுதந்திரம், சமத்துவம் மற்றும் கண்ணியம் ஆகிய உரிமைகளை குறிக்கும்.இந்தியாவில் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் நாள் அமலுக்கு வந்தது. அப்போது தேசிய அளவில் மனித உரிமைகள் ஆணையம் என்றும் அந்தந்த மாநிலங்கள் அளவில் மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.அதன்படி 12.10.1993-ல் மத்திய அரசு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை செயல்படுத்தத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 17.04.1997 முதல் மாநில மனித உரிமைகள் ஆணையம் செயல்பட்டு வருகிறது.தமிழகத்தில் எங்கு உள்ளது?: சென்னையில் "திருவரங்கம்' எண் 143, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை (பசுமைவழிச் சாலை) சென்னை 600 028 என்ற சாலையில் இயங்கி வருகிறது. இந்த ஆணையத்தின் தலைவராக நீதியரசர் ஏ.எஸ். வெங்கடாசல மூர்த்தி செயல்பட்டு வருகிறார். ஆணையத்தின் உறுப்பினர்களாக ஏ.ஆர். செல்வக்குமார், கே. மாரியப்பன், எஸ். பரமசிவன் ஆகியோர் செயல்படுகின்றனர்.யார் மீதான புகார் விசாரிக்கப்படும்? அரசுப் பணிகளின் போது அரசு அலுவலரால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள், மனித உரிமை மீறல்களை தடுக்கத் தவறுதல் மேலும் அத்தகைய நிகழ்வுகளுக்கு உடந்தையாக இருத்தல் ஆகியவை பற்றிய புகார்கள் மட்டுமே ஆணையத்தால் விசாரணை செய்ய முடியும். தனி நபர்களால், தனி நபர் மீது மீறப்படும் மனித உரிமை மீறல் குறித்த புகார்கள் குறித்து ஆணையம் விசாரணைக்கு எடுக்காது.மனித உரிமைகள் மீறல் குறித்த புகார்களை பாதிக்கப்பட்ட நபரோ அல்லது அவரைச் சார்ந்தவர்களோ எழுத்து மூலம் அளிக்க வேண்டும். புகார்கள் ஏதும் வராத நிலையில் மனித உரிமை மீறல் குறித்து வெளிவரும் பத்திரிகை செய்திகளை ஆணையமே புகாராக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.புகார்களுக்கு கட்டணங்கள் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. மேலும் புகார்தாரர்களுக்கு அறிவிப்புகள், அழைப்பாணைகள், விசாரணை உத்தரவுகளுக்கும் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.மறுக்கப்படும் புகார்கள் எவை? ஆணையத்தின் சட்டம், நடைமுறை விதிப்படி, பிற ஆணையங்களின் முன் ஏற்கனவே விசாரணையில் உள்ள புகார்கள். தெளிவற்ற குறிப்புகளைக் கொண்ட புகார்கள், மனித உரிமை மீறல் நிகழ்வு நடைபெற்ற ஓராண்டுக்குப்பின் பெறப்படும் புகார்கள், பெயர், கையொப்பம், முகவரி இல்லாமல் அனுப்பப்படும் புகார்கள். உரிமையியல் மற்றும் சொத்து உரிமைகள், ஒப்பந்தங்கள், தொழிலாளர்கள்-பணியாளர்கள் அலுவல் தொடர்பான புகார்கள், நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயம் முன் பரிசீலனையில் உள்ள புகார்கள் ஆகியவை ஆணையத்தால் மறுக்கப்படும்.விசாரணையில் காவலர்கள்: ஆணையம் சார்பில் பெறப்படும் புகார்களை புலனாய்வு பிரிவில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு விசாரணை செய்து ஆணையம் அறிக்கை பெறுகிறது. இந்தப் புலனாய்வு பிரிவில் ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத போலீஸ் அதிகாரி தலைமையில் ஒரு போலீஸ் கண்காணிப்பாளர் (எஸ்.பி.), 2 டி.எஸ்.பி.க்கள், 2 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் விசாரணை அதிகாரிகளாக செயல்படுகின்றனர்.தேவைப்படும் சில புகார்களை மட்டுமே போலீஸ் அதிகாரிகள் விசாரிப்பார்கள். இவ்வாறு விசாரிக்கப்படும் புகார்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஆணையத்துக்கு தெரியவரும் போது, மேல் நடவடிக்கை தேவை இல்லை என ஆணையம் கருதினால் புகார் முடித்து வைக்கப்படும்.விசாரணையின் முடிவில் புகார்கள் நிரூபணமானால், பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு நிவாரணம் வழங்கிட குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மீது வழக்கு தொடர, நடவடிக்கை எடுக்க அரசுக்கு அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.இது வரை... தமிழகத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட 1997-ம் ஆண்டுக்கு பிறகு 2010 மார்ச் வரை 1 லட்சத்து 3 ஆயிரத்து 199 புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 97 ஆயிரத்து 615 மனுக்கள் ஆணையத்தால் முடிக்கப்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக