>சென்னை நிகழ்வுகள்

இக்கவியரங்கத்திற்கு மறைமலையனார் தலைமை தாங்கினார். கவிஞர் செங்குட்டுவன் பேசும்போது, “1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்காக முதன்முறை சிறை சென்ற தமிழ் ஆசிரியர் இலக்குவனார். இவரின் திருப்புகழ் வகுப்பில் நானும கலந்துகொண்டேன் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது. இவரே கவிஞர்களைக் கவிபாட அழைத்தார்.
இளவரசு அமிழ்தன், குமாரசாமி, வீ.செ.கந்தசாமி, குமரி அமுதன், இளஞ்சேரல், வெற்றிவேந்தன், அருள் நம்பி, திலகலஷ்மி, வெண்பாவூர் செ.சுந்தரம், கா.முருகையன், மயிலை வண்ணதாசன், ஆரடி வேந்தன், சரவணன் உள்ளிட்ட பல கவிஞர்கள் கவிதை வாசித்தனர்.
கவியரங்கத்தின் நடுவரான மறைமலையனார் பேசியதாவது – “அன்று இலக்குவனார் மொழிப்போரில் சிறை சென்றார். அது போலவே இன்றும் அவரது மைந்தன் இலக்குவனார் திருவள்ளுவன் மொழிப்போர் செய்கிறார். இன்று அகவற்பா கூட தெரியாதவர்கள் கவிதை எழுதி கவிஞர் என்கின்றனர். இன்றைய தமிழர்கள் ஜ, ஷ, ஹ, ஸ போன்ற வடமொழிச் சொற்களைப் பயன்படுத்துவது வேதனைக்குரிய விசயமாகும். கவிதை எழுதுவோர் உரைநடையிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலச் சொற்களைத் தமிழோடு கலந்து எழுதக்கூடாது என்ற மன உறுதிப்பாடு வேண்டும். நிருபம் என்றால் மருத நிலம், நிருபர் என்றால் செய்தியாளர். செய்தியாளர் எனக் கூறாமல் நிருபர் எனக் கூறுகின்றனர். செய்தியாளர் என்றால் செய்தியை ஆள்பவர். நிருபர் அல்ல.
முன்னாள் மேயர் ச.கணேசன் :
இலக்குவனார் 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். இப்போராட்டத்தில் என் தமிழ் ஆசிரியர் எஸ்.எஸ்.அருணகிரிநாதருக்கும் இலக்குவனாருக்கும் அதீத ஆர்வம் இருந்த்து. இலக்குவனார் தனது துணைவியாரை தனக்குப் பதிலாக 1938-ல் சிறைக்கு அனுப்பியவர். தந்தை பெரியாரோடு இணைந்து செயல்பட்டவர். தொல்காப்பியத்திற்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். தொல்காப்பியத்தில் உள்ள ஐந்திணைகள் கூறும் கூற்றுப்படியே தன் வாழ்வினை அமைத்தவர். அறிஞர் அண்ணா இவரைப் போற்றினார். ஏனென்றால் தனித்தமிழ் வளர்க்க வேண்டும் எனப் போராடி வெற்றி கண்டவர் இலக்குவனார். அவரின் இருபிள்ளைகள் இன்று தமிழைக் காத்துப் போற்றும் பிள்ளைகளாக விளங்குகின்றனர். ஒருமுறை இலக்குவனாரை மதுரையிலே சந்தித்தபோது, ‘என்ன செய்கிறீர்’ என எனைப் பார்த்துக் கேட்டார். ‘நூல் எழுதுகிறேன்’ என்றேன். ‘என்ன நூல்’ என்றார். ‘பயண இலக்கிய நூல்’ என்றேன். முப்பது நாடுகளைச் சுற்றி வந்துள்ளேன். அந்த அனுபவத்தைப் பயண இலக்கிய நூலாக எழுதுகிறேன் என்றதும் “முன்னேறிய நாடுகளில் முப்பது நாட்கள்” என நூலின் பெயரை வை என்றார். அதையே நானும் வைத்தேன். இன்று அந்நூலை லயோலா கல்லூரியில் பி.ஏ., தமிழ்ப் பாடத்தில் பாடநூலாக வைத்திருக்கின்றனர்.
கவிஞர் செங்குட்டுவன்:
இலக்குவனார் என் தாய்மாமனோடு நெருங்கிய பழக்கம் கொண்டவர். 1949-ல் தஞ்சை மாவட்டத்தில் திராவிட இயக்கப் பயிற்சி முகாமைப் பெரியார் நடத்தினார். நான் அதில் கலந்துகொண்டேன். தமிழாசிரியர்ல இலக்குவனாரிடம் பாடம் கற்றேன் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது. இலக்குவனார் அவர்கள் வேதாச்சலத்தைப் பார்த்து மறைமலையடிகள் என பெயர் மாற்றியிருக்க வேண்டாம். ஏனென்றால் வேதம் என்பதே தமிழ்ச் சொல்தான். இன்று நமது தமிழ்ச்சொற்கள் வடமொழிக்குப் போய் இது வடசொல் என விளக்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற நிகழ்வில் என்னையோ, வள்ளுவனையோ பேசச் சொல்வது கடினமானது. இது கத்திமுனையில் நடப்பது போன்றதாகும். பல நிலைகளில் நான் எனது தந்தையார் இலக்குவனாரைத் தந்தை எனக் கருதியதில்லை. மாணவன், தொண்டன் என்ற நிலையிலேயே பார்ப்பதுண்டு. 1965-மே 26ஆம் நாள் ‘குறள்நெறி’ எனும் பத்திரிகைக்கு பொறுப்பாசிரியராக இருந்தேன். நாள்தோறும் 3500 படிகள் எடுத்தோம். முகவர்கள் நாணயமாகப் பணம் கொடுத்திருந்தால் நல்லபடியாக முன்னேறியிருப்போம். 4 பக்கம் 25 பைசாவும், ஞாயிற்றுக்கிழமை 6 பக்கம் 30 பைசாவுக்கும் பத்திரிகை நடத்தினோம்.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். கூட ஒருமுறை தியாகராஜ செட்டியாரைக் கண்டு நான் ஒரு இதழ் நடத்த வேண்டும், ஆனால் முடியவில்லை. இலக்குவனார் தொடர்ந்து இதழ் நடத்துவது பாராட்டுக்குரிய விசயமாகும் என்றார். கவிஞர் இளஞ்சேரல் வாசித்த “ஆர்க்கும் அடங்கா அலைகடல் போலே, போர்க்குணம் கொண்ட மறவர் அவர்” என்பது எனது தந்தைக்கு எவ்வளவு பொருந்தும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன். இலக்குவனார் என்பது வரலாறு. தொல்காப்பியத்தின் ஆங்கில உரையை எழுதிய இலக்குவனாரிடம் அறிஞர் அண்ணா சொன்னார், “உனது நூலை வெளியிட குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று. அதற்கு “யாரைக் கேட்டு இப்படி செய்தீர்கள்? ஆல்பர்ட் சொயிர்ச் என்பவரின் நூலை வெளியிட சம்மதித்தவர் எனது நூலை வெளியிட தகுதியில்லாதவர் என்றார்”.
ஒரு செட்டிநாட்டார் “இனி தமிழ் இருக்காது” எனப் பேசினார். 1959-ல் செட்டிநாட்டார் பேசிய அதே மேடையில் தான் பேசியது தவறு என மன்னிப்புக் கேட்க வைத்தவர் பேராசிரியர் இலக்குவனார். இதேபோல் ஒருமுறை தமிழக ஆளுநராக இருந்த சி. பிரகாஷ் தமிழ்நாட்டுப் பெண்களின் கற்பைப் பற்றிக் குறைவாகப் பேசினார். ஆளுநரே தமிழ்ப் பண்பாடு தெரியுமா உங்களுக்கு? எப்படித் தமிழ்ப் பெண்களை இப்படிக் கூறலாம் எனக் கண்டித்து அறிக்கை பல விட்டார். ஆக, இலக்குவனார் அவர்கள் பாவேந்தர் பாட்டில் இருக்கும் வீரத்திற்கு உருவாக இருந்தார்.
இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டில் ஜி.வில்லியர்ட்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையில் “சமஸ்கிருதம் இந்தியாவின் ஆட்சிமொழியாக இருந்தது” என்றார். இச்செய்தியை ஜி. வில்லியர்ட்ஸ் ஆங்கிலத்தில் படிக்க, ஆங்கிலம் அறிந்த இலக்குவனார் கேட்டார் “எந்த அரசர் காலத்தில் ஆட்சிமொழியாக சமஸ்கிருதம் இருந்தது எனக் கூற முடியுமா?” என்று. 20 நிமிடம் ஜி.வில்லியர்ட்ஸ் கட்டுரையைப் புரட்டிப் பார்த்துவிட்டு அமைதியாக அமர்ந்தார் பேச முடியாமல்.
அறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றும் இலக்குவனாரை கல்வியமைச்சர் இருக்க வேண்டும் என அண்ணா உத்தரவு போட்டார். அதைத் தம்பி (கலைஞர்) மறுத்தார். அப்போது 5 ஆண்டுகள் போட வேண்டிய கல்வியமைச்சர் பதவியை 1 வருடம் இலக்குவனார் பார்க்கட்டும் எனத் தம்பி தீர்மானித்து பணியில் அமர்த்தினார். தி.மு.க.வின் இச்செயலால் ஒரு ஆண்டுக்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள உஸ்பேனியா பல்கலைக்கழகத்திற்குப் பணியாற்ற இலக்குவனார் சென்றார். போக வேண்டாம் என்று தமிழ் மாணவர்கள் போராடினார்கள்.

இக்கூட்டத்தில் தமிழக அரசுக்கென 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- இலக்குவனாருக்கு சிலை அமைக்க வேண்டும்
- அண்ணா நகரில் உள்ள ஒரு தெருவுக்கு இலக்குவனார் பெயர் சூட்ட வேண்டும்.
- இவரின் பிறந்தநாளை அரசு தினமாகக் கொண்டாட வேண்டும்
முதல் பரிசு – மே. அருள் நம்பி
இரண்டாம் பரிசு – கவிஞர் இளஞ்சேரன்
மூன்றாம் பரிசு – கவிஞர் குமாரசாமி.
விழா இனிதே நிறைவடைந்தது.
தொகுப்பு : க. சித்திரசேனன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக