சனி, 11 டிசம்பர், 2010

dinamani editorial: வளர்ச்சி முக்கியமாயிற்றே!

அமைச்சர் பேச்சை முழு மையாகப் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்ட முதன்மைஉரை.  வளிமண்டலத்தை மாசு படுத்தும் நாடுகளின்  பங்களிப்பைக் குறைக்கும் வகையில் பேசி எதிர்ப்பு எழுந்திருக்கும் பொழுது தினமணி பாராட்டுவது வேறு எதன் அடிப்படையில் என்று புரியவில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தலையங்கம்: வளர்ச்சி முக்கியமாயிற்றே!


புவிவெப்பமாதல் தடுப்பு நடவடிக்கையில், முதல்முறையாக இந்தியா தனது உறுதியான முடிவை அறிவித்துள்ளது. மெக்ஸிகோ, கான்குன் நகரில் நடைபெறும் ஐ.நா. புவிவெப்ப தடுப்பு நடவடிக்கை மாநாட்டில் பேசிய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் வாயுக்களின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் சட்டப்படியான நிபந்தனைகளுக்கு கட்டுப்பட மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.இந்த அறிவிப்பின் மூலம் இந்தியா, சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கையை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றோ, புவிவெப்பம் அதிகரிப்பதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ளவில்லை என்றோ சொல்லிவிட முடியாது. இருப்பினும் இத்தகைய முடிவுக்கு, இந்தியாவில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தர வேண்டியிருப்பதே காரணம்.இவ்வளவு வெளிப்படையாக உலக அரங்கில் பேச வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என்றால், அதற்கு மிக முக்கியமான காரணம் சீனா. அண்டை நாடான சீனா, வளிமண்டல மாசுக்கான வாயுக்களைக் கட்டுப்படுத்துவதில் யாரும் தன்னை நிர்பந்திக்க முடியாது என்பதை ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. சர்வதேச அரங்கில், இந்தியாவுக்கு இணையான தொழில்போட்டியில் உள்ள சீனா இத்தகைய நிலைப்பாட்டை மேற்கொண்டுவிட்ட பிறகு, அதேபோன்ற நிலைப்பாட்டை ஏற்றால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சியில் பெருந்தடைகள் ஏற்படாமல் இருக்கும். ஆகவே, சீனாவுக்கு இணையான  காய் நகர்த்தல் என்றே இந்த முடிவை நாம் ஏற்கவேண்டியுள்ளது.புவி வெப்பமடைதலால் ஏற்படும் தீமைகளைத் தடுக்க வேண்டுமானால், புவிவெப்பம் அதிகபட்சமாக 1.5 டிகிரி செல்சியஸýக்கு மேலாக உயராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்  என்றும் அதற்கான நடவடிக்கையில் அனைத்து நாடுகளும் ஈடுபட வேண்டும் என்றும் கியோட்டோ தீர்மானத்திலும், அதன்பின்னர் கோபன்ஹேகனில் நடைபெற்ற மாநாட்டிலும் பேசப்பட்டன.இந்த இலக்கை அடைவதற்கு மிக அடிப்படையான தேவை தொழில் மாசுக் கட்டுப்பாடுதான். தொழிற்சாலைகள் கரியமில வாயு உள்ளிட்ட வளிமாசு வாயுக்களை வெளியேற்றும் பழைய தொழில்நுட்ப நடைமுறைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். நவீன தொழில்நுட்பத்துக்கு மாறியாக வேண்டும். இத்தகைய நவீன தொழில்நுட்பத்துக்கு மாறுவதென்பது அமெரிக்காவுக்குச் சாத்தியமானது என்றாலும், வளரும் நாடுகளுக்கு மிகப் பெரும் பொருள்செலவைத் தரக்கூடியது. இத்தகைய மாறுதல்களைப் புகுத்தும்போது சில தொழில்களில் ஆள்கள் குறைக்கப்பட நேரும். வேலையிழப்பு ஏற்படும். சில தொழில்கூடங்களை முற்றிலுமாக இழுத்து மூடவேண்டிய நிலையும் ஏற்படலாம். இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாட்டில் இத்தகைய முடிவுகளைப் படிப்படியாகத்தான் செய்ய முடியும். தடாலடியாகப் புகுத்தினால் குழப்பமும், தொழிலாளர் வாழ்க்கைச்சீரழிவும்தான் எதிர்வினையாக முடியும்.இத்தனை ஆண்டுகளாக வளிமண்டல மாசுக்கு அடிப்படைக் காரணமாகிய அமெரிக்கா இன்று நல்லபிள்ளை நானே என்று கூறிக்கொண்டாலும், தன் நாட்டில் பெரும் மாற்றங்களுக்கு வித்திட முன்வருவதில்லை. வளரும் நாடுகளால்தான் அதிக மாசு என்று கூறி, அவர்களுக்குப் புத்தி சொல்கிறது. நிதி தருகிறேன் தொழில்நுட்பத்தை மாற்றுங்கள் என்று சொல்கிறது. இந்தியாவுக்கு இவர்கள் தருவதாகச் சொல்லும் நிதியுதவி வெறும் வழிச்செலவு மட்டுமே.குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்த கதையாக, இந்த நிதியைப் பெறும் நாடுகளில் வளிமண்டல வாயு வெளியேற்றம் கட்டுக்குள் இருக்கிறதா என்று சட்டப்படியாக  கண்காணிப்போம் என்கிற நிபந்தனையையும் விதிக்கிறார்கள். இது ஒரு மறைமுகமான நெருக்கடி ஆகும். சீனா போன்ற வளரும் நாடுகளுக்கு இணையாக தொழில் போட்டியை நடத்த முடியாமல் பின்தங்கிப் போகும் சூழலுக்கு இட்டுச்செல்லும் என்கிற அச்சத்தால்தான் இத்தகைய முடிவை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழிற்கூடங்களையும் நவீனப்படுத்த போதுமான நிதி நம்மிடம் இல்லை. மேலும், இதற்காக தொழில் மேம்பாட்டுநிதி ஏற்படுத்தினாலும், அதைத் தின்பவர்கள் வழக்கமான போலிகளும், ஊழல் பேர்வழிகளாகவுமே இருப்பார்கள். இன்றைய சூழல் அப்படியாக இருக்கிறது. இந்தியாவில் இயல்பான தொழில்நுட்ப மாற்றத்தை நிகழ்த்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, தொழில்துறைக்கு சக்தி தந்து, அவர்கள் மாறும்படிச் செய்யும்நடைமுறைக்குச் சில ஆண்டுகள் அவகாசம் தேவை. புவி வெப்பமாதல் மிகமுக்கியமான பிரச்னை என்றாலும், இந்தியாவின் வளர்ச்சியும் மிகவும் முக்கியமானது. இங்குள்ள மக்கள் தொழில்வாய்ப்பை இழக்காமல் இருப்பதும் முக்கியம்.உலகச்சுற்றுச்சூழல்மீது இந்தியாவுக்கும் கவலையும் கரிசனமும் இருக்கவே செய்கிறது. ஆனால், இதனை எங்கள்மீது மட்டும் திணிக்காதீர்கள் என்பதுதான் இந்த வெளிப்படையான அறிவிப்பின் பொருள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக