1.) இச் செய்தி தவறான கண்ணோட்டத்தில் திரித்து எழுதப்பட்டுள்ளது. கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கவின்கலைக்கல்லூரிக்கான மாணவர் விடுதி இயங்காமல் இருந்த காலக்கட்டத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்காக அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கத் தற்காலிகப் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. உ.த.ஆ.வின் தற்காலிகத் தேவை நிறைவுற்றதும் கலைபண்பாட்டுத்துறைக்குத் திருப்பித் தராமல் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் சாகித்ய அகாதமிக்கு வழங்கப்பட்டது. இது முற்றிலும் தவறான செயல்பாடாகும். (தொடர்ச்சி காண்க.) அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
(தொடர்ச்சிக) 2.) மாணவர்கள் விடுதியின் கட்டாயத் தேவைக்காக அந்த இடம் கலைபண்பாட்டுத்துறையால் மீளவும் கேட்கப் படுகிறது. இடம் மாற்றம் செய்யாமல் அடம் பிடிக்கிறது சாகித்ய அகாதமி. சென்னை மாநகரில் வேறு இடமா கிடைக்காது அவர்களுக்கு? உரியவர் கேட்கும் பொழுது திரும்ப வழங்காமல் தமிழ்நாட்டை விட்டே துரததுவது போன்ற மாயையை உருவாக்குவதில் இருந்தே பொறுப்பாளர்களின் பொறுப்பற்ற போக்கு புலானகிறது. தீர உசாவியபின் செய்தியை வெளியிடுக. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சாகித்ய அகாதெமியை வெளியேற்ற
தமிழக அரசு நெருக்கடி!
First Published : 06 Dec 2010 04:51:59 AM IST
சென்னை, டிச. 5: சென்னை தரமணியில் உள்ள அலுவலகத்தை காலி செய்யுமாறு சாகித்ய அகாதெமிக்கு தமிழக அரசு நெருக்கடி அளித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.இந்திய மொழிகளில் கலை, பண்பாட்டு வளர்ச்சியில் இலக்கியம் சார்ந்த பணிகளை ஊக்குவிப்பது, அங்கீகரிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக 1952-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத்திய அரசின் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சி கொண்டதாக 1954-ம் ஆண்டு சாகித்ய அகாதெமி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. தமிழ் உள்ளிட்ட தெனிந்திய மொழிகளுக்கான மண்டல அலுவலகம் சென்னையில் 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.பிறமொழிகளில் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை தமிழில் மொழிபெயர்ப்பது, தமிழில் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை பிறமொழிகளில் மொழிபெயர்க்க உதவுவது, என இந்த மையம் ஆற்றிய பணிகள் எழுத்துலகில் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்டது.இன்றளவும் சாகித்ய அகாதெமி விருது என்பது இலக்கிய படைப்பாளர்கள் மத்தியில் மணிமகுடமாகவே உள்ளது.இந்த நிலையில் தமிழ் மற்றும் பிறமொழிகளில் வெளியான சிறந்த படைப்புகள் அனைத்தையும் கொண்ட நூலகமும் அதன் ஒரு பகுதியுமே சாகித்ய அகாதெமியின் அலுவலகமாக அறியபட்டு வருகிறது. ஆய்வரங்கம், கருத்தரங்கம், அதிக புத்தகங்களுக்கான இடவசதி உள்ளிட்ட தேவைகள் சரிவர பூர்த்தி செய்யப்படாத நிலையில் 1990-ம் ஆண்டு சென்னையில் இருந்து மண்டல அலுவலகம் பெங்களூருவுக்கு இடம்பெயர்ந்தது.இதனால் தமிழ் இலக்கியம் சார்ந்த எந்த நிகழ்வுகளும் நடைபெறாமல் போகும் சூழல் ஏற்பட்டது. இது குறித்து தமிழ் எழுத்தாளர்கள் தலைமையகத்துக்கு தெரிவித்து தென்னிந்திய மண்டல அலுவலகத்தில் இருந்து ஒரு பிரிவை சென்னையில் செயல்பட ஏற்பாடு செய்தனர்.இதற்கு தகுதியான இடம் கிடைக்காத நிலையில், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் சிலர் முன்முயற்சிகள் மேற்கொண்டனர்.சென்னை பிரிவு தொடக்கம்: இதன் பலனாக தரமணியில் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தால் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட கவின்கலை கல்லூரி மாணவர்களின் பழைய விடுதி வளாகத்தின் ஒருபகுதியை சாகித்திய அகாதெமிக்கு வழங்க உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாகக்குழு முடிவு செய்தது. அந்த விடுதியில் 10 அறைகள் மற்றும் உணவு அருந்தும் கூடம் ஆகிய பகுதிகள் சாகித்திய அகாதெமிக்கு ஒதுக்கப்பட்டது.இதன்படி, 2000-ம் ஆண்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போது தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த தமிழ்குடிமகன், சாகித்திய அகாதெமியின் சென்னை பிரிவு அலுவலகம் மற்றும் நூலக வளாகத்தை தரமணியில் தொடங்கிவைத்தார்.இந்த விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன், ஈரோடு தமிழன்பன் உள்ளிட்ட பல்வேறு படைப்பாளிகள் பங்கேற்றனர்.அந்த கட்டடத்தில் நிலவிய பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு, சாகித்திய அகாதெமியின் சென்னை பிரிவு அலுவலகத்தின் ஒரு பகுதி தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.இருப்பினும், இதன் மற்ற அலுவல் பணிகளும் நூலகமும் தரமணி வளாகத்திலேயே தொடர்ந்து செயல்பட்டுவந்தது.வெளியேற்ற அரசாணை: இந்த அலுவலக வளாகத்தை காலி செய்ய வேண்டும் என 2007-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் குறிப்பிட்ட சில துறைகள் சாகித்ய அகாதெமிக்கும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கடிதங்கள் அனுப்பி வந்தன.இந்த நிலையில், தரமணி வளாகத்தில் உள்ள சாகித்ய அகாதெமியின் சென்னை பிரிவை அங்கிருந்து வெளியேற்றி அந்த கட்டடத்தை காலி செய்து தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு உத்தரவிட்டு அரசாணையை (எண்: 45) தமிழக அரசின் உயர்கல்வித்துறை 2008 பிப்ரவரி 20-ம் தேதி பிறப்பித்தது.இது குறித்து மறுபரிசீலனை செய்து சென்னை பிரிவு தொடர்ந்து தரமணியில் செயல்பட நடவடிக்கை எடுக்கக்கோரி சாகித்திய அகாதெமியின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார்.இதனைத் தொடர்ந்து, சாகித்ய அகாதெமிக்கு 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அலுவலக வளாகத்துக்கான நிலமும், அரங்கம் அமைக்க 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் நிலமும் அளிக்குமாறு சாகித்ய அகாதெமியின் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.ஆனால், தமிழக அரசின் தரப்பில் இருந்து இதுவரை உறுதியான நல்ல முடிவு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், சாகித்ய அகாதெமியை தரமணி வளாகத்தில் இருந்தும் வெளியேற வற்புறுத்தும் கடிதங்கள் தொடர்ந்து தொழில்நுட்ப கல்வித்துறை மூலம் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றன.கடைசியாக கடந்த 30-ம் தேதியும் தொழில்நுட்பக் கல்வித்துறையிடம் இருந்து இத்தகைய கடிதம் ஒன்று சாகித்ய அகாதெமிக்கு வந்துள்ளது. இதனால் சாகித்ய அகாதெமியின் சென்னைப் பிரிவு அலுவலகம் சென்னையில் இருப்பதற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.ஆலோசனைக்குழு உறுப்பினர் கருத்து: இது தொடர்பாக சாகித்ய அகாதெமியின் தமிழ் மொழிக்கான ஆலோசனைக்குழு உறுப்பினரும், எழுத்தாளருமான ராமகுருநாதன் கூறியது:கடந்த 2000-ம் ஆண்டு தரமணியில் நடைபெற்ற சாகித்ய அகாதெமியின் சென்னை பிரிவு தொடக்க விழாவில் பங்கேற்ற அப்போதைய தமிழக அமைச்சர் தமிழ்குடிமகன், நுங்கம்பாக்கத்தில் கல்வித்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தில் சாகித்திய அகாதெமிக்கு நிலம் ஒதுக்கப்படும் என உறுதி அளித்தார். ஆனால், அந்த உறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கையை அடுத்து வேறு வாடகை கட்டடத்தையாவது பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருகிறோம் என்றார். வேறு வழியே இல்லையென்றால் தமிழகத்தில் சாகித்ய அகாதெமி செயல்பட முடியாத சூழ்நிலை எழக்கூடும் என்பதையும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.செம்மொழி மாநாடு நடத்தி, செம்மொழி நூலகத்துக்காக தமிழக சட்டப் பேரவையின் பழைய வளாகத்தையே அளித்த தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழில் இலக்கிய வளர்ச்சிக்கு உதவிவரும் சாகித்ய அகாதெமியின் சென்னைப் பிரிவு அலுவலகத்தை மீண்டும் தமிழகத்தை விட்டு வெளியேற விடமாட்டார் என தமிழ் எழுத்தாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.சாகித்ய அகாதெமியின் சென்னைப் பிரிவு அலுவலகம் மூடப்பட்டால், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவது மிகவும் குறைந்துவிடும் என்பதுகூடவா அரசு அதிகாரிகளுக்குப் புரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக