திங்கள், 6 டிசம்பர், 2010

இலக்கியம்: திரு.வி.க.வின் தேநீர் கடை! வாய்மைநாதன் பணி

இலக்கியம்: திரு.வி.க.வின் தேநீர் கடை!

தமிழிலக்கியத்துக்காகப் பாடுபடுபவர்களில் பலர் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விடும் அவலம் அதிகம். சமூகத்துக்காக எழுதும் அவர்களில் சிலர் அங்கொன்றும், இங்கொன்றுமாக, ஏதோ ஒரு மூலையில் போதிய அளவு முகம் தெரியாமலே இருக்கிறார்கள். அப்படி எங்கோ கிராமத்தில் இருந்தபடி இலக்கியம் படைப்பவர்களில் ஒருவர் கவிஞர் வாய்மைநாதன். இவரது சமுதாய பின்னணி, பிறப்பிட சூழலைக் கடந்து கவிதை, நாடகம், புதினம் என தொன்மை மாறாத பன்முகப் படைப்புகளுடன் அவர் இலக்கியத் துறைக்குள் வந்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நாட்டின் கோடிமுனையில் அமையப்பெற்ற வங்கக் கடலோரம், சதுப்பு நிலக்காடுகள். உப்பளமும் அதையடுத்து புகையிலை, மல்லிகை, சவுக்கு எனப் பல பயிர்கள் செழிக்கும் மண் வாகைக் கொண்டது வாய்மேடு. இதுதான் கவிஞர்  வாய்மைநாதன் வசிக்கும் கிராமம். தமிழறிஞர் இலக்குவனார் பிறந்த ஊரும் இதுதான். இது நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ளது.தனது ஊரின் பெயரை முன்நிறுத்தி தனக்குத்தானே அமைத்துக்கொண்ட பெயர் வாய்மைநாதன். தற்போது 73 வயதைக் கடந்து விட்டாலும் சோர்வில்லாமல் எழுதிவரும் இந்த இலக்கியவாதிக்கு பெற்றோர் வைத்த பெயர் இராமநாதன். விவசாயக் குடும்பப் பின்னணியில் பிறந்த வாய்மைநாதன், ஊரில் இருந்த கிருஷ்ணன் வாத்தியாரிடம் அறிக்குழி எனப்படும் மணல் பரப்பப்பட்ட குழியில்  எழுதி பழகியவர். பின்னர் 12 கி.மீ. தொலைவில் உள்ள ஆயக்காரன்புலம் பள்ளிக்கு நடேந்தே சென்று எஸ்.எஸ்.எல்.சி. முடித்துள்ளார். 1956-ல் அரசு உதவி பெறும் இலக்குவனார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், புலவர் தேர்வில் தேர்ச்சி பெற்று, பின் தமிழில் பட்ட மேற்படிப்பையும் முடித்து, பந்தநல்லூர் அரசு மேனிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றார். 37 ஆண்டுகள் பள்ளியில் பணியாற்றிய அவர் எழுத்துத் துறையில் மட்டும் ஓய்வு பெறாமல் இன்னும் எழுதி வருகிறார். வாய்மேடு கிராமத்தில் பேருந்துகள் செல்லும் தடத்திலிருந்து வெகுதொலைவில் உள்ள அவரது இல்லத்தில் வாய்மைநாதனை சந்தித்து பேசினோம். ""போராளி வாட்டாக்குடி இரணியன் நாடு கடத்தப்பட்ட அதே காலகட்டத்தில் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் திரு.வி.கல்யாணசுந்தரம். பள்ளிக்குச் செல்லும் வழியில் உள்ள தகட்டூர் என்னும் கிராமத்தில் தேநீர் கடைவைத்து நடத்தினார். 1943-ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பிரசாரப் பிரிவில் பணியாற்றியவர். பொதுவுடைமை சித்தாந்தத்தை முழுமையாக ஏற்றுக்கொண்ட அவர்,   பள்ளிக்கு நடந்து செல்லும் என்னை போன்றோருக்கு திரு.வி.க. தேநீர் கடைதான் இளைப்பாறும் இடமாக இருந்தது. அப்போது ரஷ்யப் புத்தகங்களை படிக்கக் கொடுப்பார். ஏராளமான செய்திகளையும், தத்துவங்களையும் சொல்லித்தருவார். இவற்றால் ஈர்க்கப்பட்டேன். இதே காலத்தில்தான் பாரதி கவிதைத் தொகுப்புக்கு ஜீவா எழுதிய நீண்ட முன்னுரை என்னை பாதித்தது. அதைத் தொடர்ந்து சிறுசிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். கல்கியில் அகிலனின் "பாவை விளக்கு' தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. அதன் நாயகன் தணிகாசலத்தின் கம்பீரமும், கதைபோக்கும் மிகவும் பிடித்திருந்தது'' -அதன்பிறகே சிறுகதைகளையும், நாடகங்களையும் எழுதத் தொடங்கியதாக கூறுகிறார் வாய்மைநாதன். இவர் எழுதிய இருமலர்கள் என்னும் முதல் சிறுகதை "காதல்' இதழில் வெளியானது. தொடர்ந்து தாமரை, சாந்தி, ஜனசக்தி, தீபம், இதழ்களில் இவரின் சிறுகதைகள் வெளிவந்தன.வாய்மைநாதனின் அலைமகள் நவீனம் மற்றும் இங்கொரு சீதை குறும்புதினம் ஆகிய இரண்டு படைப்புகளும் தமிழ்நாடு எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கப் பரிசுகளை பெற்றுள்ளன. வாய்மைநாதன் மரபு கவிதையில் படைத்த இரண்டு காவியங்கள் குறிப்பிடத்தகுந்தவை. 1986 -ல் வெளியான நேதாஜி காவியம், சிறந்த நூல் வெளியீட்டிற்குத் தமிழ் வளர்ச்சித் துறையில் நிதி உதவி பெற்று வெளியானது. இந்த காவியம் இந்தியில் வாங்க்காசிங்க் (1999) என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. 2008-ல் வெளியான கப்பலுக்கொரு காவியம் (வ.உ.சி. வரலாறு) அந்த ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறைப் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு, 15.1.2010 -ல் பரிசு அளிக்கப்பட்டது. வாய்மைநாதனின் பெரும்பாலான படைப்புகள் தாம் வாழும் மண் சார்ந்தவர்களையும், அவர்களின் பிரச்னைகளையும் மையமாகக் கொண்டதாகக் காணப்படுகிறது. தொன்மை மாறாத நடையைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறார். மதுரை வீரன் (கவிதையில்  நாடகம்), புதிய மனிதன் (சிறுகதைத் தொகுப்பு), தியாகி களப்பால் குப்பு (வாழ்க்கை வரலாறு) உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ள வாய்மைநாதனின்  "நாலி' புதினம் (2008) அவர் வாழும் பகுதி மக்களின் வாழ்க்கையை அடையாளம் காட்டுவதாக உள்ளது. இறால் பண்ணைகளால் ஏற்படும் பிரச்னைகளை மையமாகக் கொண்டது நாலி. இதற்கான எதிர்ப்பு போராட்டங்களின் ஊடாகப் பெண் விடுதலை, அதிகாரத்துக்கு வரும் பெண்கள் சந்திக்க நேரிடும் பிரச்னைகள் உள்ளடக்கிய பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளதால் சமூக ஆர்வலர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது நாலி. வாய்மைநாதனின் சின்னச் சின்ன திண்ணைக் கதைகள் (நாட்டுப்புறக் கதைகள்), ஓ ஃபீனிக்ஸ் பறவைகளே (நவீனம்) மற்றும் கவிதைத் தொகுப்பு ஒன்றும் சிறுகதை தொகுப்பும் விரைவில் வெளிவர இருக்கும் படைப்புகளாகும்.
 
தமிழறிஞர் பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்த ஊரான வாய்மைமேட்டில் பிறந்து இலக்குவனார்  பள்ளியில் பணியாற்றிப், படைப்புலகில் தனி முத்திரை பதித்து வரும் வாய்மைநாதன் அவர்களைப்பற்றிப் பாரறியச் செய்துள்ள அம்பிகாபதிக்கும் தினமணிக்கும் பாராட்டுகள். இவரைப் போன்று குடத்திலிட்ட விளக்காக இருப்போரைத்தினமணி தொடர்ந்து குன்றின்மேல் ஏற்றட்டும். 
அன்புடன்  இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக